’சிவானந்த குருகுலம்’ எனும் சரணாலயம்; ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ ராஜாராம்!  

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் அல்லது பேருந்தில் வரும்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரும் வழியில், அந்த பிரமாண்டமான கட்டடமும் பெயர்ப்பலகையும் நிச்சயம் நம் கண்ணில் பட்டிருக்கும். விசாரித்துத் தெரிந்து கொள்ளும்போது, கட்டடத்தின் மீதான பக்தியும் மரியாதையும் பன்மடங்கு கூடிவிடும். அது... ‘சிவானந்த குருகுலம்’.


சுவாமி சிவானந்த மகரிஷியின் அருளாசியுடன் எஸ்.வி.ஐயரும் அவரின் துணைவியார் டாக்டர் மங்களம் அம்மையாரும் இணைந்து அனாதைக் குழந்தைகளுக்காகவும் ஏழை மாணவர்களுக்காகவும் ஆதரவற்ற முதியோருக்காகவும் ‘சிவானந்த குருகுலம்’ என்றும் ‘சிவானந்த சேவாஸ்ரமம்’ என்றும் தொடங்கினார்கள். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில், காட்டாங்குளத்தூர் எனும் ஊரில், மெயின் சாலைக்கு அருகிலேயே இன்றைக்கும் இயங்கி வருகிறது இந்த சேவாஸ்ரமம்.


முதுமை கொடுமை; இளமையில் வறுமை கொடுமை. முதுமையில் அன்பும் இளமையில் கல்வியும் அவசியம். அதாவது ஆதரவற்றோரிடம் அன்பு, படிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி என்கிற சேவை நோக்கத்துடன் 1945ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ‘சிவானந்த குருகுலம்’. ஆறு குழந்தைகளுக்கான சேவையில் தொடங்கிய இந்த சேவாஸ்ரமத்துக்கு இது 75-வது வருடம்.


பெற்றோர் தேடி வைத்த சொத்தையும் கண்ணியத்தையும் காக்கவேண்டிய கடமை மகனுக்கு உண்டு. அதற்கேற்ப, தன் 16-வது வயதில் இருந்து சிவானந்த குருகுலமும் அங்கே அடைக்கலமான முதியோரும் குழந்தைகளுமே வாழ்க்கை என வாழத் தொடங்கினார் ராஜாராம். கணவரின் சேவை வழியை அடியொற்றுப் பயணமானார் அவரின் மனைவி லட்சுமி அம்மாள்.


‘’எனக்கு சிவானந்த குருகுலம்தான் உலகம். இங்கே உள்ள முதியவர்கள்தான் என் உறவினர்கள். இங்கு படிக்கிற மாணவர்கள் அனைவரும் என் பிள்ளைகள்.நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள்தான் நண்பர்கள். அவர்களையும் இவர்களையும் சேவையில் இணைப்பதுதான் இந்த ஜென்மத்தில் இறைவன் எனக்கு இட்ட பணி’’ என்று ராஜாராம் அடிக்கடி சொல்லுவார்.


சிவானந்த குருகுலம், சிவானந்த சேவாஸ்ரமம், சிவானந்த சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ.பள்ளி என ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்த சேவா நிறுவனத்தில், ஒழுக்கத்தையே முழுமுதற் கல்வியாகப் போதித்து வருகிறார்கள்.


’’பாரபட்சமற்ற அன்புதான், கடவுளை அடைவதற்கான ஒரே வழி. கடவுளுக்குச் செய்யும் கைங்கர்யம் என்பது வேறொன்றுமில்லை... மனிதர்களுக்குச் செய்கிற சேவைதான் கடவுளுக்கான கைங்கர்யம் என்று நான் பார்க்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் அன்பும் கருணையும் காட்டாமல் இருந்துவிட்டு, கடவுளுக்கு எத்தனை கைங்கர்யம் செய்தாலும் அது புண்ணியமில்லை. அதை ஒருபோதும் கடவுளும் ஏற்றுக்கொள்ளமாட்டார். கடவுளை அடைய வேண்டுமெனில், மனிதர்களுடன் நெருங்கியிருக்கவேண்டும் என நம்புகிறேன்’’ என்று பலமுறை தெரிவித்துள்ளார் ராஜாராம்.


இவரின் சேவையை அங்கீகரித்து, ஊக்கப்படுத்துகிற விதமாக பத்மஸ்ரீ விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ’இவையெல்லாம் மனதுக்கு தெம்பையும் உத்வேகத்தையும் தருகின்றன என்பதை மறுக்கமுடியாதுதான். அதேசமயம், சிவானந்தா சேவாஸ்ரமத்தில் உள்ள முதியவர்களிடம் நிறைய பேசுவேன். அப்படிப் பேசுகிற போது, ‘நிம்மதியா இருக்க்கீங்களா இங்கே?’ என்று அவர்களிடம் கேட்பேன். ‘நீ என் புள்ளையாட்டம் இருந்து பாத்துக்கும் போது, எங்களுக்கென்னப்பா கவலை. நாங்க ஒருகுறையுமில்லாம இங்கே இருக்கறோம்’ என்று அவர்கள் சொல்வார்கள். குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள், ‘நல்லாப்படிக்கிறோங்க ஐயா. படிச்சு பெரியாளா வருவோம்’ என்று உற்சாகமாகச் சொல்லுவார்கள். உண்மையிலேயே இந்த வார்த்தைகள்தான் எனக்குக் கிடைத்த உண்மையான விருதுகள்.


வீடு, சமூகம் என இரண்டாகப் பிரித்து வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. வீட்டையே சமூகமாகவும் சமூக சேவையையே வீடாகவும் பார்க்கிறேன். இருக்கும்வரை, இந்த என் கடமைகளைச் செவ்வனே செய்யவேண்டும். ஏனென்றால் இது என் வேலை அல்ல. கடவுள் எனக்குக் கொடுத்த வேலை’’ என்று சொல்லி நெகிழும் ராஜாராம், இப்போது இல்லை.


உடல்நலக் குறைபாடால் சிகிச்சைப் பெற்று வந்த ராஜாராம், 18.02.2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.


1945-ம் ஆண்டு அப்பா தொடங்கியதை சிரமேற்கொண்டு பரிவுடன் கவனித்து வந்தார் மகன் ராஜாராம். 75-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற சிவானந்த குருகுலத்தையும் சேவாஸ்ரமத்தையும் அடுத்த தலைமுறையினர் இன்னும் செம்மையாகவும் சிரத்தையாகவும் கவனிப்பார்கள்.


சிவானந்த குருகுலமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. உதட்டில் புன்னகையும் கண்களில் கருணையும் பேச்சில் அன்பும் செயலில் வாஞ்சையுமாக வலம் வந்த ராஜாராமின் மறைவை ஜீரணிக்க முடியாமல் தவித்து அழுதுகொண்டிருக்கிறார்கள், மாணவர்களும் முதியவர்களும்!
சேவைக்கும் சேவை செய்வோருக்கும் மரணமே இல்லை. ராஜாராம்கள்... ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ கொண்டவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்