ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டும் சசாகியின் காகிதக் கொக்கும்

By செய்திப்பிரிவு

”நான் உங்கள் சிறகுகளில் அமைதியை எழுதுவேன்... நீங்கள் உலகம் முழுவதும் பறப்பீர்கள்”... இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் கொல்லப்பட்ட சிறுமி சடகோ சசாகியின் வரிகள் இவை.

இரண்டாம் உலகப் போரில், ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு, லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட துயர்மிகு நாளின் 74-வது நினைவு தினம் இன்று.

உலகம் முழுவதும் அணு ஆயுதங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் இன்று வழக்கம்போல் எழுப்பியுள்ளது. குழந்தைகளும், பொதுமக்களும் ஆங்காங்கே மலரஞ்சலி செலுத்தி இன்றைய நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலகின் ஒருமுனையில் மத்தியக் கிழக்கு நாடுகள் உள்நாட்டுப் போரால் ஒருபக்கம் அழிந்து கொண்டிருக்க, அணு ஆயுதங்கள் தொடர்பான போட்டியில் அமெரிக்காவும், வடகொரியாவும் மாறி மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டு போர் மூளும் சூழலை அடிக்கடி ஏற்படுத்துகின்றன.

அணு ஆயுதங்களை ஒழித்து அமைதி ஏற்பட, உலக வரலாற்றின் கறுப்பு தினமான இன்று அணு ஆயுதங்களால் ஏற்பட்ட இழப்பு குறித்து மீண்டும் மீண்டும் பேசப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறோம். அதுவும் குறிப்பாக குழந்தைகளிடம்.

இதனையே ஈரோடு மாவட்டத்தில் வ.ஊ.சி பூங்காவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தும்பி புத்தக நிலைய அரங்கு சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. அங்கு காகிதக் கொக்குகள் தன்னைச் சூழ, சிறுமி சசாகி தன்னைக் காண வரும் குழந்தைகளை வரவேற்றாள்.

சசாகியும் அவளது காகிதக் குழந்தைகளும் ஏன் தேவைப்படுகிறார்கள் என்பதை தும்பி புத்தக நிலைய அரங்கின் குமார் சண்முகம் கூறும்போது, “ எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய புத்தக அரங்கு நிச்சயம் குழந்தைகளைக் கவர வேண்டும் என்பதில் கவனமாக இருப்போம். குழந்தைகள் தங்களை எங்கள் அரங்கோடு தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்ட 74-வது நினைவு தினம் .

வழக்கமாக இந்த நாளில் ஜப்பானில் மக்களும், குழந்தைகளும் எங்களுக்கு போர் இல்லாத உலகம் வேண்டும் என்றும், நாங்கள் அந்தப் பேரழிப்பைச் சந்திக்கத் தயாராக இல்லை என்றும் அமைதிப் பேரணியில் பங்கேற்பார்கள். ஜப்பான் நாட்டுக்கு மட்டுமல்ல, நமக்கு அணு உலைகள் சார்ந்த அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டே வருகின்றன. இருக்கின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் சார்ந்த அச்சம் இருக்கிறது. எனவே, இந்த அணுஆயுதங்களை எதிர்ப்பதற்கான உலக குறியீடாக சசாகி என்ற சிறுமி நம்மிடம் இருக்கிறாள்.

சசாகி தனது 2 வயதில் அந்த மனிதத் தன்மையற்ற சம்பவம் நடக்கிறது. அமெரிக்கா நடத்திய அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

அப்போது, ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்து இறைவனுக்கு சமர்ப்பித்தால் அவர்களுடைய வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்பது ஜப்பானிய நம்பிக்கை. அதனைக் கூறி சசாகியின் தோழன் ஒருவன் காகிதக் கொக்கு ஒன்றைச் செய்து வந்து சசாகிக்குத் தருகிறான்.

அதனைத் தொடர்ந்து சசாகியும் தன் நோயும் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவளது பிற தோழிகளும் குணமாக காகிதக் கொக்குகளைச் செய்யத் தொடங்குகிறாள். இதில் சசாகியின் உடல் நிலையில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. அந்தக் காகிதக் கொக்குகளைச் செய்வதற்காக அவள் ஒவ்வொரு நாளும், நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாள்.

இதில் ஒரு கட்டத்தில் அந்தக் காகிதக் கொக்குகளைச் செய்வதற்கு காகிதங்கள் தீர்ந்து விடுகின்றன. இதனைத் தொடர்ந்து தனக்கு மருத்துகள் எழுதப்பட்ட மருந்துச்சீட்டில் காகிதக் கொக்குகளைச் செய்யத் தொடங்கிறாள் சசாகி.

இவ்வாறு சுமார் 646 கொக்குகளை அவள் செய்து விடுகிறாள். இந்நிலையில் கதிர்வீச்சால் ஏற்பட்ட புற்றுநோய் முற்றி ஒருகட்டத்தில் சசாகி இறந்து விடுகிறாள். இந்தச் சம்பவம் ஜப்பானையே உலுக்குகிறது. இதனைத் தொடர்ந்து சசாகி உலக அமைதிக்கான குறியீடாக மாறுகிறார். அவர் செய்த காகிதக் கொக்குகள் ஜப்பானின் மரபிலிருந்து நீண்டு உலக அமைதிக்கான மரபாகிறது. பின்னர் சசாகிக்கு நினைவிடம் அமைக்கப்படுகிறது.

ஒவ்வோராண்டும் சசாகியின் நினைவு நாளில் ஜப்பானின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் ஆயிரமாயிரம் கொக்குகளை சசாகியின் நினைவிடத்தில் வைக்கின்றனர். 50 வருடங்களுக்கு மேலாக இது தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், நாங்களும் எங்களது புத்தக அரங்கில் ’காகிதக் கொக்குகள்’ என்ற தலைப்பில் அந்த காகிதக் கொக்குகளை குழந்தைகள் செய்வதற்கு செய்முறையுடன் கூடிய புத்தகத்தை பதிவிட்டிருக்கிறோம்.

எங்கள் புத்தக அரங்கிற்கு குழந்தைகள் ஆறாம் வகுப்பிலேயே சசாகியுடைய கதையைப் படித்திருக்கிறார்கள் என்றால் எங்கள் அரங்கை நோக்கி சசாகி... சசாகி என்று ஓடி வருகிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை இந்தக் காகிதக் கொக்குகள் நிச்சயம் ஒரு தோட்டாவைத் தடுத்து நிறுத்தும் என்றே பார்க்கிறோம். இந்தக் காகிதக் கொக்குகள் குழந்தைகள் மனதில் பாசிடிவான மன நிலையை நிச்சயம் வளர்க்கும் என்று நம்புகிறோம்.

காகிதக் கொக்குகள் என்ற இந்தப் புத்தகத்தில் சசாகி நினைவிடம் அமைந்திருக்கும் முகவரியும் இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் தாங்கள் செய்யும் கொக்குகளை இந்த முகவரிக்கும் தினமும் அனுப்பலாம். இல்லை என்றால் குக்கூ காட்டுப் பள்ளிக்கு அந்தக் காகிதக் கொக்குகளை அனுப்பினால் எங்கள் குழுக்கள் அந்தக் கொக்குகளை சசாகியின் நினைவு நாளுக்கு முன்னர் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்” என்று குமார் சண்முகம் தெரிவித்தார்.

ஹிரோஷிமா நினைவு தினத்தில் குழந்தைகள் வடிவமைக்கும் இந்தக் காகிதக் கொக்குகள் நிச்சயம் சசாகியின் அமைதிக் குறியீட்டை ஏந்தியபடி உலகெங்கிலும் பறக்கும் என்று நாமும் நம்புவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்