இன்று அன்று | 1980 ஜூன் 23: வி.வி. கிரி: குடியரசுத் தலைவரான போராளி

By சரித்திரன்

‘நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு. பாரபட்சம் இல்லாத கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னவர்’ என்று வரலாற்றாய்வாளர்களால் புகழப்பட்டவர். இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்டவர் வி.வி. கிரி. பின்னாட்களில் மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த வரலாறு அவருடையது. தற்போது ஒடிஸாவில் இருக்கும் பெர்ஹாம்பூரில் 1894 ஆகஸ்ட் 10-ல் பிறந்தவர் வராககிரி வேங்கட கிரி. புகழ்பெற்ற வழக்கறிஞரான அவரது தந்தை வராககிரி ஜோகைய்யா பந்துலு தனது மகனும் சட்டம் பயில வேண்டும் என்று விரும்பினார்.

1913-ல் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள யூனிவர்சிட்டி காலேஜில் சட்டம் பயின்றார் வி.வி. கிரி. இளம் வயதிலிருந்தே தொழிலாளர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்ட அவர், 1914-ல் லண்டன் சென்றிருந்த காந்தியைச் சந்தித்தார். சட்டம் பயில்வதை விட, விடுதலைப் போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதுதான் முக்கியம் என்று அவர் உணரத் தொடங்கியது இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான். ‘சின் ஃபெயின்’ எனும் அயர்லாந்து விடுதலை அமைப்பில் பங்கேற்றுத் தீவிரமாகப் போராடிய அவர், சட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே 1916-ல் அயர்லாந்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது போராட்ட அனுபவங்கள் இந்தியாவில் தொழிலாளர் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கப் பெரிதும் உதவின. இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றார். தொழிலாளர் சங்கத் தலைவர் என்.எம். ஜோஷியுடன் இணைந்து செயலாற்றினார். இந்திய விடுதலைப் போராட்டத்தை நோக்கி, தொழிலாளர் சங்கங்களைக் கொண்டுசென்ற பெருமையும் இவருக்கு உண்டு. லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில், தொழிலாளர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

1936-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற அவர், மதராஸ் மாகாணத்தின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவி யேற்றார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, அமைச்சர் பதவியை உதறிவிட்டு, போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்றார். பின்னாட்களில் இலங்கைக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார். இந்திய விடுதலைக்குப் பின்னர், 1957-ல் மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். உத்தரப் பிரதேசம், கேரளம் உட்பட பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார். 1967-ல் குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனின் மறைவைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவராக இடைக்காலப் பதவியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1974 வரை அப்பதவியில் இருந்தார். 1975-ல் அவருக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. 1980 ஜூன் 23-ல் தனது 86-வது வயதில் சென்னையில் காலமானார் வி.வி. கிரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

38 mins ago

விளையாட்டு

52 mins ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்