இன்று அன்று | 1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்!

By சரித்திரன்

ஆங்கில இலக்கியத்தின் இணையற்ற படைப்பாளியாகக் கருதப்படும் மேதை ஷேக்ஸ்பியர். தனது நாடகங்கள், கவிதைகள் மூலம் உலகமெங்கும் புகழ்பெற்றவர். 1592-ல் லண்டனில் அவரது மேடை நாடக வாழ்க்கை தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘லார்டு சாம்பர்லெய்ன்’ஸ் மென்’ எனும் நாடகக் குழுவின் நடிகராகவும் உரிமையாளர்களில் ஒருவராகவும் உயர்ந்திருந்தார் ஷேக்ஸ்பியர். அவரது திறமையால் கவரப்பட்ட முதலாம் ஜேம்ஸ் மன்னர் நாடகக் குழுவுக்கு முழு ஆதரவும் தந்தார். பின்னர் ‘தி கிங்ஸ் மென்’ என்று அந்தக் குழுவின் பெயர் மாற்றப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், லண்டன் மேடை நாடக உலகில் ஷேக்ஸ்பியர் புகழ்பெற்றிருந்தார்.

1595-ல் ‘எ மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்’ மற்றும் ‘ரோமியோ ஜூலியட்’ போன்ற புகழ்பெற்ற நாடகங் களை எழுதினார். 1596-ல் ‘தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்தை எழுதினார்.

1599-ல் ‘ஜூலியஸ் சீஸர்’ நாடகத்தை எழுதினார். 1599-க்கும் 1602-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகப் புகழ்பெற்ற ‘ஹாம்லெட்’ நாடகத்தை எழுதினார். அவரது நாடகங்களில் மிக நீண்ட நாடகம் இது. தனது தந்தையான டென்மார்க் மன்னரை விஷம் வைத்துக் கொன்ற தனது மாமா கிளாடியஸைப் பழிவாங்கும் இளவரசன் ஹாம்லெட்டின் கதை அது. துன்பியல் நாடகங்களுக்குப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் எழுதிய இந்நாடகம் உலகின் மிகச் சிறந்த துன்பியல் நாடகங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது. அதன் பின்னர், ‘மெக்பெத்’, ‘ஒத்தெல்லோ’, ‘தி டெம்பெஸ்ட்’ போன்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதினார்.

ஆங்கில மேடை நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். அதற்கு முன்னர், தன்னைச் சுற்றி எத்தனை தீமைகள் நடந்தாலும் நல்லொழுக்கத்தைக் கைவிடாதவர்கள்தான் நாடகங்களின் பிரதானப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் பிரதான பாத்திரங்கள் பொறாமை, வஞ்சகம் என்று சகல தீய குணங்களையும் கொண்டவர்கள். அவரது இந்த ‘விதிமீறல்’ விமர்சகர்களின் கண்டனங்களைச் சம்பாதித்தாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கலை விழாக்கள் வரை அவரது நாடகங்களின் தாக்கம் இருப்பதைக் காண முடியும். ஆங்கில மொழியில் கிட்டத்தட்ட 1,700 சொற்களை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பதே ஆங்கில மொழிக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதைக் காட்டுகிறது. ‘ஷேக்ஸ்பியர் வேண்டுமா பிரிட்டன் வேண்டுமா என்று ஆங்கிலேயரிடம் கேட்டால் ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்று சொல்வார்கள்’ என்ற சொலவடை விளையாட்டுக்காகச் சொல்லப்பட்டதல்ல!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்