மைசூர் வி.துரைசுவாமி- 10

By செய்திப்பிரிவு

பி

ரபல கர்நாடக இசை வீணை வித்வான் மைசூர் வி.துரைசுவாமி (Mysore V.Doraiswamy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் கத்தாவல்லி என்ற கிராமத்தில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார் (1920). இவரது தாத்தா நல்ல பாடகர். தந்தை வீணை இசைக் கலைஞர். இதனால் இயல்பாகவே இசைஞானம் பெற்றிருந்தார். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, மைசூர் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

ஆரம்பத்தில் அப்பாவிடமே வீணை இசை பயின்றார். பின்னர் பிரபல வீணை வித்வான் வேங்கடகிரியப்பாவிடம் சேர்த்துவிட்டார். சுமார் 15 ஆண்டுகள் அவரிடம் இசை கற்றார். அற்புத ஞானம் கொண்டிருந்த இந்தச் சிறுவனுக்கு மிக அரிய வர்ணங்களைக் கற்றுத் தந்தார்.

அத்துடன் கீர்த்தனைகள், பஞ்சரத்தின கீர்த்தனைகளில் சில, சித்த தானம் ஆகியவற்றைக் கற்பித்தார். முத்தையா பாகவதர் பாடிய பல கீர்த்தனைகளையும் இவர் கற்றுக்கொண்டார்.

12-வது வயதில் மைசூர் மகாராஜா முன்னிலையில் கச்சேரி செய்தார். இவரது இசையில் மகிழ்ந்த மகாராஜா இவருக்கு 50 ரூபாய் வெள்ளி நாணயத்தைப் பரிசாகக் கொடுத்தார். பல்லடம் சஞ்சீவியின் புல்லாங்குழல் வாசிப்பைக் கேட்டு அதனால் கவரப்பட்டு, தானாகவே புல்லாங்குழலும் இசைக்கக் கற்றுக் கொண்டார்.

மைசூர் மகாராஜா அரண்மணை வாத்தியக் குழுவில் இணைந்தார். மைசூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தார். இது அகில இந்திய வானொலி நிலையத்துடன் இணைக்கப்பட்டு பெங்களூர் அகில இந்திய வானொலி நிலையமாக மாறிய பிறகும், தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த இவர், அதன் இசை இயக்குநராகப் பதவி ஏற்றார்.

இவர் வீணை இசைக்கும் பாணி ‘மைசூர் பாணி’ எனக் குறிப்பிடப்பட்டது. பெரும்பாலான வித்வான்கள் கான்டாக்ட் மைக்ரோஃபோன் பயன்படுத்தும்போது வீணையின் இயல்பான ஒலிதான் சிறந்தது என்று கூறி அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். 1943-ல் இவரது முதல் இசைக் கச்சேரி பெங்களூர் காயன சமாஜத்தில் நடைபெற்றது.

அடுத்த ஆண்டு சென்னையில் முதன்முதலாக இசைக் கச்சேரியில் கலந்துகொண்டார். பாலக்காடு மணி, சவுடையா, லால்குடி ஜெயராமன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர்கள் இவருடன் இணைந்து பக்க வாத்தியம் வாசித்துள்ளனர்.

உஸ்தாத் அலி அக்பர் கான், அம்ஜத் அலிகான் உள்ளிட்ட பிரபல கலைஞர்களுடன் ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். சில கன்னடத் திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பி.டி.நரசிம்மர் என்ற பிரபல கவிஞரின் நாட்டிய நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஈரானில் நடைபெற்ற சர்வதேச இசைவிழா, லெனின்கிராடில் நடைபெற்ற இசைவிழா, ஜெர்மன் இந்திய இசை விழா உள்ளிட்ட பல சர்வதேச இசை விழாக்களில் பங்கேற்றார்.

பத்மபூஷண் விருது, சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகாமணி விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இறுதிவரை இசைத் தொண்டாற்றி வந்த மைசூர் வி. துரைசுவாமி 1997-ம் ஆண்டு தமது 77-வது வயதில் மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்