இந்தியாவில் கலாய்ப்பு நிகழ்ச்சியின் உச்சம்: பாலிவுட் கலைஞர்களின் தைரியம்!

By கார்த்திக் கிருஷ்ணா

"அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன்... என் குடும்பத்தை அவன் ரொம்பக் கேவலமா பேசுவான், இதை ரெண்டு பேரும் ஜாலியாவே எடுத்துப்போம்..." - ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, நடிகை கோவை சரளாவிடம் பேசும் வசனம் இது.

உண்மையிலேயே இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? மும்பையில் சமீபத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. "ஆல் இந்தியா பக்சோட்" (All India Backchod) என்ற குழு (சுருக்கமாக ஏஐபி) அவ்வப்போது இணையத்தில் நகைச்சுவைப் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். ஒரே வித்தியாசம், இவர்களது நகைச்சுவை கொஞ்சம் 'வெளிப்படையானது'. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் என அவர்களே சில வீடியோக்களில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல விதங்களில் புதிது புதிதாக நகைச்சுவை, நையாண்டி என இணையத்தை கலக்கி வரும் இந்தக் குழு, ஆலியா பட் உடன் இணைந்து, அவரையே கிண்டல் செய்து, >'ஜீனியஸ் ஆஃப் தி இயர்' என்ற வீடியோவை உருவாக்கி பலரது கவனத்தை ஈர்த்தது.

ஏஐபி குழு தற்போது 'ஏஐபி நாக் அவுட்' என்ற நிகழ்ச்சியை மும்பையில் நடத்தியது. இதன் சிறப்பு என்ன தெரியுமா? பாலிவுட் நட்சத்திரங்களான அர்ஜுன் கபூர் மற்றும் ரன்வீர் சிங் இருவரையும் உட்காரவைத்து, 8 பேர் அடங்கிய அமர்வு மாற்றி மாற்றி அவர்களை கலாய்ப்பதுதான்.

கலாய்ப்பது என்றால் சாதாரணமாக அல்ல, கெட்ட வார்த்தைகள், வசவு சொற்கள், ஆபாசச் செய்கைகள் என அனைத்து விதமாகவும் கலாய்க்கப்படுவார்கள். சில நையாண்டி அவர்களது குடும்பத்தாரைப் பற்றியும், அவர்களது அந்தரங்கத்தைப் பற்றியதாகவும் கூட இருக்கும்.

இவை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, வடிவேலு சொன்னது போல, இருவரும் அதை ஜாலியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். கடைசியில் இருவரும் இணைந்து அதே முறையில் மற்ற அனைவரையும் கலாய்த்துத் தள்ளுவார்கள்.

இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது பாலிவுட் பிரபலம் கரன் ஜோஹார். இவரும் கலாய்த்தலில் இருந்து தப்பவில்லை. அனைவரும் ஒருவரை ஒருவர் கலாய்க்க, நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த 4000 ரசிகர்களும் சிரித்துத் தள்ளினர்.

முக்கியமாக, இந்நிகழ்ச்சியைக் காண வந்த தீபிகா படுகோனே, ஆலியா பட், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட மற்ற பாலிவுட் நட்சத்திரங்களும் நையாண்டிக்கு ஆளானார்கள். ரன்வீர் சிங்கும் தீபிகாவும் காதலிக்கிறார்கள், அனுஷ்கா சர்மாவை இழந்து ரன்வீர் சிங் வாடுகிறார், கரண் ஜோஹார் ஓரினச் சேர்க்கையாளர், அர்ஜுன் கபூர் 12-ஆம் வகுப்பைத் தாண்டவில்லை, அர்ஜூன் கபூரின் குடும்பத்தில் சுமாராக நடிக்கும் ஒரே கபூர் இவர்தான் இப்படியாகப் போன கிண்டல்கள் மற்றும் பல விஷயங்கள் அச்சில் ஏற்ற முடியாத படி உச்சத்தை எட்டியது.

'ரோஸ்ட்' (Roast) எனப்படும் இந்த வகை நகைச்சுவை அமெரிக்காவில் மிகப் பிரபலம். ரோஸ்ட் என்றால் வறுப்பது என்று பொருள். பமீலா ஆண்டர்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை உட்கார வைத்து இப்படி வாய்க்கு வந்தபடி 'வறுக்கும்' நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

இந்தியாவில் முதன்முறையாக இப்படியான நிகழ்ச்சி நடந்துள்ளது. நேற்று இணையத்தில் அதிகாரபூர்வமாக இந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட, தற்போது தேசிய அளவில் இந்த வீடியோக்களும், ஏஐபி குழுவும், #AIBKnockout என்ற ஹாஷ் டேக்கும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

ஒரு பக்கம் "இப்படியான முயற்சிக்கு பாராட்டுகள்", "இதை பெரிய மனதோடு விளையாட்டாக எடுத்துக் கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் போற்றப்பட வேண்டியவர்கள்", "இந்த தைரியம் எவருக்கும் வராது" என பின்னூட்டங்கள் வந்தாலும், இன்னொரு பக்கம், "இந்தியாவில் நகைச்சுவை மலிந்து விட்டது", "கெட்ட வார்த்தைகளும் ஆபாச செய்கைகளும் தான் வித்தியாசமான நகைச்சுவையா?" என விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்காக மட்டும் நடத்தாமல், இதிலிருந்து கிடைத்த வருவாயை ஏஐபி குழுவுடன் சேர்ந்து, கரண் ஜோஹார், அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங் ஆகிய மூவரும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ பதிவை பார்த்த ஆர்.ஜே பாலாஜி, "ஏஐபி நாக் அவுட் நிகழ்ச்சியின் ஆபாச வசனங்களைப் போல இல்லாமல், ஒழுங்காக, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு கலாய்த்தல் நிகழ்ச்சியை கோலிவுட்டில் நடத்த வேண்டும். யாராவது தயாராக இருக்கிறீர்களா? நமது நட்சத்திரங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்வார்களா?" என சின்னதாக சவால் விடுத்துள்ளார்.

இப்படி ஒரு நிகழ்ச்சி, இங்கு, சாத்தியமா?

பி.கு. வீடியோவை AIB Knockout என யூடியூபில் தேடினால் கிடைக்கும் என நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?

பி.கு 2 - வீடியோவை பார்க்க முடிவு செய்தால் ஹெட்ஃபோனை உபயோகிக்கவும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்