நீல் ஆம்ஸ்ட்ராங் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நீல் ஆம்ஸ்ட்ராங் - நிலாவில் முதலில் இறங்கிய விண்வெளி வீரர்

நிலாவில் முதல்முறையாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் (1930) பிறந்தார். முழுப் பெயர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங். தந்தை ஆடிட்டர். 6 வயதில் முதன்முதலாக தந்தையுடன் விமானத்தில் பறந்தார். விமானம் ஓட்டும் ஆசை இவருக்கு அப்போதே துளிர்விட்டது.

விமான ஓட்டுநர் உரிமம் பெற்றபோது இவருக்கு வயது 16. பள்ளிப்படிப்பை முடித்ததும், அமெரிக்க கடற்படையின் உதவித்தொகை பெற்று பர்டியூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் பொறியியலில் சேர்ந்தார். நடுவில், கொரியப் போரில் அமெரிக்க கடற்படையின் ஜெட் விமான பைலட்டாகப் பணியாற்ற அழைப்பு வந்தது.

* கடற்படையில் 1952 வரை பணியாற்றிய பிறகு, மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற்றார். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* நேஷனல் அட்வைஸரி கமிட்டி ஃபார் ஏரோநாட்டிக்ஸ் அமைப்பின் (தற்போதைய நாசா) விண்வெளித் திட்டத்தில் 1962-ல் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அந்த அமைப்பின் கமாண்ட் பைலட்டாகவும் பணியாற்றினார். பல அதிவேக விமானங்களைச் சோதனை செய்தார்.

* மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் 1969-ல் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். அதன் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.

* நிலாவில் தரையிறங்கிய முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடு பட்டனர். அங்குள்ள பாறைத் துகள்களை சேகரித்தனர். தங்களது காலடித் தடங்கள் உட்பட பல புகைப்படங்களை எடுத்தனர்.

* அமெரிக்க தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் நிலாவில் கழித்தனர். உலகப் புகழ்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவில் ஹீரோவாகப் புகழப்பட்டார்.

* சார்லட்ஸ்வில் நகரில் உள்ள கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ் ஃபார் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் நிர்வாகியாக 1971 வரை பணியாற்றினார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பேராசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

* உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.

* இவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்’ 2005-ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் 2012 ஆகஸ்ட் 25-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

17 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

40 mins ago

க்ரைம்

33 mins ago

இந்தியா

38 mins ago

சினிமா

49 mins ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்