ரஜினி அரசியல்: 4 - நானும் இல்லை என் கையும் இல்லை!

By கா.சு.வேலாயுதன்

விஜயகாந்த் அப்போது கட்சி ஆரம்பித்ததன் விளைவு. முதலில் ஒரு சீட் வென்றார். அந்தத் தேர்தலில், திமுக பக்கம் வரவேண்டிய ஓட்டுகளை சாதுர்யமாக தன் பக்கம் திருப்பி திமுகவை மைனாரிட்டி அரசாக இயங்க வைக்கும் அளவு சக்தி பெற்றவர் ஆனார். அதுவே ஒரு கட்டத்தில், ஒரு நிகழ்ச்சியில் ரஜினியே, 'விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சு ஜெயிச்சுட்டார், அவருக்கு என் வாழ்த்துக்கள்!' என பாராட்டும் நிலையை ஏற்படுத்தியது.

அதற்கடுத்த தேர்தலில் விஜயகாந்த் கட்சி கூட்டணி சேராவிட்டால் அதிமுகவின் நிலை சிக்கலுக்குள்ளாகி விடும் என்பதை ஜெயலலிதாவே உணரும் நிலையை ஏற்படுத்தினார். விஜயகாந்த் கட்சியுடன் பேச திரைமறைவு விஜபிக்கள் சோ போன்றவர்கள் களம் இறங்கியது எல்லாம் வரலாறு.

அவருடன் கூட்டணி வைத்து வெற்றி கண்ட ஜெயலலிதா பிறகு அதிகார பலத்தை முழுமையாக கையில் வைத்துக் கொண்டு, அதே விஜயகாந்தை அரசியல் ரீதியாக எதிர்த்தார். 'உன்னால் ஜெயிக்கவில்லை. நானே உன்னை ஜெயிக்க வைத்தேன். உனக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றுத் தந்தேன்' என்று முழங்கினார்.

இப்படியான முழக்கம் விஜயகாந்தை எந்த மாதிரியெல்லாம் பேச வைக்கும். அவரை எப்படியெல்லாம் உணர்ச்சி பொங்க வைக்கும் என்பதை அறிந்தவர்தான் ஜெயலலிதா. அந்த உணர்ச்சி பொங்கல்கள், வெம்பல்கள், வெடித்தல்கள் எல்லாவற்றையும் திரும்பின பக்கமெல்லாம் வீடியோ, ஆடியோ காட்சிகளாக பரிபாலிக்கவும் செய்தார். அதன் விளைவு ஜெயலலிதாவின் இமேஜ் உயர்ந்ததோ இல்லையோ, விஜயகாந்தின் இமேஜ் சரிவைக் காண ஆரம்பித்தது. அடுத்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேராமல் விஜயகாந்த் துண்டிக்கப்பட்டதிலேயே அவரின் சாணக்யம் வென்றது.

இப்படியாக ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் பணபலத்தோடு, கட்சி பலத்தோடு, ஆளுமை பலத்தோடு, அதிகார பலத்தோடு, சூழ்ச்சிகளும், சூதும் நிறைந்த அரசியல் நிலைகளுடன் மோதும் நிலையை கண்டதால் விஜயகாந்த் கட்சி ஒரு பக்கம் துவண்டது. இன்னொரு பக்கம் அவரின் குடும்பமே அரசியல் என்ற நிலையில் உட்கட்சிக்குள்ளேயே சுனாமிகள் சீறிப் பாய்ந்தன.

இதில் விஜயகாந்த் ரஜினி அளவு மாஸ் ஹீரோ ஆகாவிட்டாலும், தன் படங்களின் மூலம் கட்சி ஆரம்பித்த காலத்தில் தன் கொடியை, தன் கொடி நிறத்தை அறிமுகப்படுத்தினார். தனக்கான தத்துவார்த்தங்களை பிரச்சாரமாக புகுத்தினார். ஏற்கெனவே சப்ஜெக்ட் வைஸாக மட்டுமே ஹீரோ தனத்தில் வென்ற விஜயகாந்தின் இந்த திரைப்பட அரசியல் உத்திமுறை மக்களிடம் எடுபடவில்லை. அதை விட அவரின் ரசிக, தொண்டர் சிகாமணிகளிடமே எடுபடவில்லை. இந்த ஒரு போக்கும் அவரின் சினிமா வாழ்க்கைக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த இரண்டு நெகட்டிவ் போக்குகளின் விளைவு, அதீத உணர்ச்சி பொங்கலின் வெளிப்பாடு அரசியல் பேரோசையாக வந்த அவரையும், அவர் கட்சியையும், தொண்டர்களையும் சின்னாபின்னப்படுத்தியது.

ஆளும், ஆண்ட கட்சிகளின் துரியோதன சூழ்ச்சிகள் இன்னமும் அக்கட்சிக்கு மோசமான சூழலை ஏற்படுத்தி விட்டது.

இந்த இடத்தில் ரஜினிகாந்த் ரொம்ப இயல்பாகவே நகர்ந்து கொண்டிருந்தார். தனக்கான களம் சினிமா மட்டுமே என்று நகர்ந்தவர் எந்த இடத்திலும் சினிமாவில் கூட அரசியல் போதிக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளும் சக்திகளின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை புரிந்தவராகவே காய் நகர்த்தினார். என்றாலும் மறைமுகமாக தன் படங்களின் பஞ்ச் வசனங்களில் அதை புகுத்தினார். 'நானும் இல்லை என் கையும் இல்லை; கோழி முட்டைக்கு சுருக்கு வைத்தது போல்' என்பார்களே கிராமத்து பாஷையில். அதுபோலவே பட்டும் படாமலும் செயல்பட்டார்.

அதே சமயம் ராகவேந்திராவும், பாபா முத்திரையுமான ஆன்மிக வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். தன்னை வாழவைத்த ரசிக சிகாமணிகளையே கண்மணிகளாகவும், அமைதியையே தன் சுவாசமாகக் கொள்வதாகவும் அடிக்கடி அறிவிக்கவும் செய்தார். அதையும் மீறி வெளிவட்டாரத்தில் ஒற்றை வரி அரசியல் வசனம் உதிர்ப்பதும், அதன் ரியாக்ஷன் பார்ப்பதற்காகவே இமயமலையில் போய் அமர்ந்து கொள்வதுமான காட்சிகளை நிஜப்படுத்தினார்.

இந்த காலகட்டத்தில் கமல், அஜித், ரஜினி மட்டுமல்லாது, அர்ஜூன், விஷால், விக்ரம் என உருவாகி நின்ற காலப்போக்கு கதாநாயகர்கள் எல்லாம் அரசியல்னா மோசம். எல்லோருமே திருடர்கள். ஊழல்வாதிகள். அது கொள்ளையர்கள் கூடாரம். அதை ராபின்ஹூட் போல் ஒருவன் வந்துதான் அவர்களை அடித்து நொறுக்கி விரட்ட வேண்டும் போன்ற மாயத்தோற்றங்களை, கதைக்கருக்களை மக்கள் மத்தியில் பரவ விட்டனர்.

அதற்கு முந்தைய எம்ஜிஆரோ, அவர் காலத்திய சிவாஜி கணேசனோ அரசியல் பார்வையில் தீர்க்கமாக இருந்தனர். எம்ஜிஆரைப் பொறுத்தவரை தன் தலைவன் அண்ணா என்றார். அவர் தென்னாட்டு காந்தி என சுட்டினார். தன் கொடி, கறுப்பு சிகப்பு, தன் கட்சி சின்னம் உதயசூரியன் என்பதையெல்லாம் படம் போகிற போக்கிலேயே ஜனரஞ்சகத்துடன் புகுத்தினார்.

ஒரு கட்டத்தில் கட்சியில் வெளியேற்றப்பட்டு புதுக் கட்சி தொடங்கியதும், புதிய கட்சி கொடியையும், அதன் லோகோவையும் எடுத்த எடுப்பிலேயே அகன்ற திரையில் பட்டொளி வீசிப் பறக்க விட்டார். தன் அரசியல் எதிரிகளை நம்பியார் வேடத்தில் உட்புகுத்தி, அவர்களை வதம் செய்வதையே தன் கண்ணெனக் கொண்டார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், புலமைப்பித்தன் என வரும் கவிஞர்களை தத்துவப் பாடல்களையே தன் வாயசைவுக்கு பயன்படுத்தினார். அவரே கதைச்சூழலையும், தன் பாத்திரத்தையும் பாடலாசிரியர்களுக்கு விளக்கி, குறிப்பிட்ட விஷயங்களிலான தத்துவார்த்தப் பாடல்களை உருவாக்கித்தரவும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார்.

இந்த ஏற்பாடுகள் மூலம் அந்த காலத்து மக்களின், குறிப்பாக இளைஞர்கள், பெண்களின் மனதில் அவர்களையும் அறியாமல் அப்போதைய அரசியல் நிலவரங்கள் மண்டையில் ஏறின. அவற்றையே ரத்த நாளமாகக் கொண்டனர். ரஜினி எம்ஜிஆர் அளவுக்கு சினிமாவிற்குள் பிரபல்யம் அடைந்தாலும், அரசியல் ரீதியாக யாரையும் தலைவனாகக் காட்டவில்லை. உத்திகள் வகுக்கவில்லை.

ஆனால் படங்களில் பாசிட்டிவ் அப்ரோச் மற்றும் தனித்துவ ஹீரோயிஸத்தை வளர்த்தார். மற்ற கதாநாயகர்கள் நடித்த படங்களில் அரசியல் என்றாலே மோசம், ஊழல், கொள்ளை என நெகட்டிவ் சிந்தனைகள் விதைக்கப்பட இவர் படங்களோ, அந்த மாதிரியான நெகட்டிவ் விஷயங்கள் வில்லன்களாக முன்வைத்து ரஜினி என்கிற ஹீரோவால் நொறுக்கப்பட்டனர். அது 'பாட்ஷா', 'முத்து', 'மன்னன்' போன்ற படங்களில் எதிரொலிக்க ஆரம்பித்தது. எஜமான் படத்திலோ, 'எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியிலே பொட்டு வைச்சோம்' ரேஞ்சுக்கு கொண்டு போனது. அதன் மூலம் ரஜினி கூட அவர் தன் படங்களில் தன் ரசிகர்களுக்கு அரசியல் அறிவு ஊட்டும்படியாக படத்தில் கதாநாயகனைக் கொடுக்கவில்லை.

ஆனால் அந்த ஏக்கம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அதை சொல்லத் தெரியவில்லை. இப்போதும் பாருங்கள். தமிழகத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேசும் அரசியல் வசனங்கள், அரசியல் தன்மைகள் இப்போதைய இளைஞர்களில் பெரும்பான்மையானோருக்கு இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், அவன் மோசம், இவன் மோசம் என்று சுட்டிக்காட்டும் திறம் இருக்குமே ஒழிய, அவன் அதில் மோசம்; இதில் பரவாயில்லை. இவன் இதில் மோசம்; அதில் பரவாயில்லை. அந்தக் கட்சி அதற்கு தேவலை. இந்த கட்சி இதற்கு தேவலை என்று ஒரு அரசியல் தலைவருக்குள், ஒரு அரசியல் கட்சிக்குள் இருக்கும் பன்முகத்தன்மைகளை பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை.

இந்த விஷயங்களுக்குக் காரணம் 60 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆகப்பெரும் ஊடகமாக விளங்கி வரும் சினிமாதான் காரணம். அப்போதைய எம்ஜிஆர், சிவாஜி படங்கள் (சிவாஜி கணேசனின் படங்கள் குடும்பப் பாங்கான கதை நாயகனை மட்டுமல்லாது, சுதந்திர போராட்ட தியாகிகளை பாத்திரங்களாக படைத்து தேச அறிவையும், சுதந்திர, தியாக உணர்வையும் ஊட்டின) அந்த காலகட்ட தலைமுறையினருக்கு பொதுவிதமான அரசியல் அறிவை ஊட்டின. அதை அடுத்த தலைமுறைக்கு சினிமா கதாநாயகர்கள் கொடுக்க மறந்தனர்.

அதனால் சினிமா மூலம் மட்டுமே பார்த்து அரசியல் அறிவை வளர்த்து வந்த பாமரர்கள், ஏழை எளியவர்கள் வேறு திசையில் பயணம் செய்தனர். பணம், பதவி, காசு, பணம் கொடுத்தால் ஓட்டு என்ற நிலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அதுவே அரசியல் மயமாகவும் மாறியது. அதன் ஆரம்ப காலகட்டத்தில்தான் 1996-ல் ரஜினி வாய்ஸ்- திமுக-தமாகா வெற்றி கிடைத்தது. அந்தத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் கடுமையாக பணிபுரிந்தனர். பலர் பூத் ஏஜண்ட்டுகளாக, பிரச்சாரகர்களாகவும் மாறினர்.

அதன் தொடர்ச்சியாக ரஜினி அரசியலுக்கு வருவார். மற்ற கட்சிகளை ஓட, ஓட விரட்டியடிப்பார் என்றெல்லாம் கூட அவரின் ரசிகர்கள் கனவு கண்டனர். ஆனால் ஏதோ ஒன்று அவரை வரவிடாமல் தடுத்தது. ரஜினியா? அரசியலா? அரசியல் கட்சியா? அதற்கெல்லாம் அவருக்கு சாமர்த்தியம் கிடையாது. வர மாட்டார். வரவே மாட்டார் என்றெல்லாம் அதற்கான காரண காரியங்களை இட்டுக்கட்டி கூறி பலரும் கிண்டல் கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்த மறைமுக பிரச்சாரத்தில் திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் கூட இருந்தனர். அப்போது இருந்த ஒரு அமைச்சர் என்னிடம் அதற்கு கூறிய காரணம் அதிர்ச்சியூட்டக்கூடியது. அதில் அவரின் தனிப்பட்ட விஷயங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி, ''அவரின் பலம் எது, பலவீனம் எது என்பதை எங்கள் தலைவரும், நாங்களும் அறிவோம். அரசியல் கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் அதற்கு எதிர்விளைவுகள் கடுமையாக வரும். அதை தாங்கும் சக்தி அவருக்கு கிடையாது. எனவே அவர் எந்த சூழலிலும் அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் தொடங்க மாட்டார்!'' என்றார்.

அப்போதுதான் ஐம்பது வருடம் பாரம்பரியம் மிக்க வார இதழ் ஒன்றின் கோவை பகுதி நிருபராக சேர்ந்திருந்தேன். அதற்கான பேட்டிக்கு அந்த விஜபியை நாடி சென்றிருந்தேன். அப்போது அந்த அரசியல் விஜபி சொன்னதில் எனக்கு உடன்பாடு இருந்ததோ இல்லையோ, ரஜினி என்கிற நடிகர் மீது எனக்கு அப்போது துளி கூட அபிமானம் இல்லை. எனவே அதை பொருட்படுத்தவும் இல்லை. அந்த சமயத்தில்தான் அலுவலகத்தில் இருந்து ஓர் அசைன்மென்ட் வந்தது.

அதாவது, 'நான் முதல்வராக இருந்தால், நான் பிரதமராக இருந்தால், நான் மேயராக இருந்தால்..!' என வரும் தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்புக்கும் கோவையில் உள்ள ஒவ்வொரு கல்லூரியையும் தொடர்பு கொண்டு குறைந்தது ஒவ்வொரு தலைப்பிலும் 30 மாணவ-மாணவிகளை பேட்டி கண்டு கட்டுரையாக்கி புகைப்படங்களுடன் அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருந்தார் ஆசிரியர். அவர் கொடுத்திருந்தது தலைப்புகளில் ஒன்று, 'ரஜினியாக நானிருந்தால்..!' என்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

- பேசித் தெளிவோம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்