

தாம்பரம் நகராட்சி சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன. தாம்பரம் மாநகராட்சிக்கு இன்னும் முறையாக ஆணையாளர் நியமிக்கப்படவில்லை. தாம்பரம் நகராட்சிஆணையராக இருந்த லெட்சுமணன், தற்காலிகமாக தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வழக்கமான பணிகளை கவனிக்க தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளில் பணிபுரிந்த அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்த உள்ளாட்சி அமைப்புகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம்மாநகராட்சியில் 4 மண்டலம், 66 வார்டுகள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சி தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம் என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது 66 வார்டுகள் அமைக்கப்படுகின்றன. ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 11,000 வாக்காளர்கள் வீதம் உருவாக்கப்பட உள்ளது. ஒரு மண்டலத்துக்கு 16 வார்டுகள் வரை இருக்கும். ஏற்கெனவே இருந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்த தெருக்களை கொண்டு வார்டுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. தற்போது, அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த முடிவுஇறுதியானது அல்ல, மாற்றங்களும் இருக்க வாய்ப்பு உண்டு. விரைவில் அறிவிப்பு வெளியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.