

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கோட்டையைப் பிடிக்கவும், திமுக கோட்டை விடவும் காரணமாக அமைந்தது கொங்கு மண்டலம். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஒரு சில தொகுதிகள் என கொங்கு மண்டலத்தில் 57 தொகுதிகள் அடங்குகின்றன. இந்த தொகுதிகளில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர்.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் மற்றும் அருந்ததியர் சமுதாயத்தின் ஆதரவால், எம்ஜிஆர் காலம் முதல் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வெற்றிப்பயணம் தொடர்ந்து வருகிறது. கடந்த 1989-ல்அதிமுக இரண்டாகப் பிரிந்து களம் கண்டபோது, ஜெயலலிதா அணி வெற்றி பெற்ற 27 எம்.எல்.ஏ.க்களில், 17 பேர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.
அதன்பின், 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தவிர, கடைசியாக நடந்த 2016 தேர்தல் வரை அதிமுக கொங்கு மண்டலத்தை தனது கோட்டையாகவே மாற்றியுள்ளது. கடந்த 2011-ல் மொத்தமுள்ள 57 தொகுதிகளில், 45 தொகுதிகளையும், 2016-ல், 53 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்கொடி நாட்டியது.
இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இந்த மண்டலத்தைச் சேர்ந்த பழனிசாமி முதல்வர் பதவியேற்றார். மண்ணின் மைந்தர் என்ற பெருமையோடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மேம்பாலங்கள் உள்ளிட்ட பணிகள், அத்திக்கடவு -அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், பயிர்கடன் தள்ளுபடியில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் பயனடைந்தது என அதிமுகவுக்கு சாதகமான அம்சங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.
அதே நேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளை பார்க்கும்போது, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபித்த திமுக, தற்போது 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாய் களமிறங்கியிருக்கிறது.
கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் மாவட்ட செயலர்கள் நியமனத்தின் மூலம் கட்சிரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள் இருப்பதால் சிறுபான்மை வாக்குகளையும், ஆதித்தமிழர் பேரவை மூலம் அருந்ததியர் வாக்குகளையும், கொமதேக மூலம் கொங்கு வேளாளக் கவுண்டர் வாக்குகளையும் கவர முடியும் என திமுக நம்புகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞரணித் தலைவர் உதயநிதி ஆகியோர் கொங்கு மண்டல பிரச்சாரத்திலும், நிகழ்ச்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் கோட்டை விட்டதால்தான், திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனது என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சித் தலைமை அடிக்கடி நினைவுபடுத்தி வருகிறது. இதற்கான பலன் தேர்தல் முடிவில் தெரியும்.