

முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ், சென்னை சோழிங்கநல்லூரில் ரூ.12கோடியே 78 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள முதல்வரின் உதவி அழைப்பு மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவையில் கடந்தாண்டு செப்.15-ம் தேதி 110-ன் விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும்இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.
மாவட்ட அளவில் திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்ட குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள்போன்றவையும் மாநில அளவில்முதல்வர் தனிப்பிரிவு, அம்மாஅழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.
இதனால், ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும்சூழல் ஏற்படுகிறது. எனவே, அரசுத்துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைவாக களையப்படுவதை கண்காணிக்க சிறப்பான அமைப்பு தேவைப்படுகிறது.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றுக்குத் தீர்வு காண குறைதீர்ப்பு மேலாண்மை வாரியம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து ‘ முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். இதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் ரூ.69 கோடியே 21 லட்சம் மதிப்பில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் உதவி மையம்
மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை 24 மணிநேரமும், ‘CMHelpline.tnega.org’ என்ற இணையதளம் வாயிலாகவும், ‘cmhelpline@tn.gov.in’ என்ற மின்னஞ்சல், ‘CMHelpline Citizen என்ற கைபேசி செயலி வாயிலாகவும், https://twitter.com/cmhelpline_tn என்ற ட்விட்டர் வாயிலாகவும், https://www.facebook.com/cm-helpline-TN என்ற முகநூல் வாயிலாகவும் பதிவுசெய்யலாம்.
இத்திட்டத்தின் மூலம் பல்வேறுஅரசுத் துறைகளுக்கான குறைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவு செய்யலாம். இவை மூலம் பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இத்திட்டத்தில் பொதுமக்கள் குறைகளை விரைவாகக் களைய, அவர்களின் ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை அவசியம் தெரிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு கோரும் மனுதாரருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிஅளிக்கப்பட்டு உரிய வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர், தலைமைச் செயலர் உள்ளிட்ட அனைத்துத் துறை செயலர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன்,தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, முதல்வர் உதவி மையத்தின் சிறப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.