

மத்தியில் பாஜக ஆட்சியமைக்க யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290 முதல் 305 இடங்களில் வெற்றி பெறும். உத்தரப் பிரதேசத்தில் 50 முதல் 55 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.
மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 272 உறுப்பினர்களின் ஆதரவை பாஜக எளிதாக எட்டும். எனினும் மத்தியில் பாஜக ஆட்சியமைக்க யார் ஆதரவு அளித்தாலும் வரவேற்போம். ஒரு எம்.பி. உடைய கட்சி என்றாலும் தேச நலன் கருதி அதனை ஏற்றுக் கொள்வோம்.
எதிர்காலத்தில் கட்சித் தலைமை எனக்கு என்ன கட்டளையிடுகிறதோ அதை ஏற்று செயல்படுவேன்.
அத்வானிக்கு என்ன பதவி?
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் எதிர்காலம் குறித்து அமித் ஷாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த அவர், இவை குறித்து கட்சியின் ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும் என்றார்.
கூட்டணி தொடர்பாக எந்தெந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து அமித்ஷாவிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.