

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்ததாக மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா மீது உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
'நரேந்திர மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். குண்டர், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அவரது அடிமை' என அண்மையில் மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா பேசியிருந்தார்.
இது குறித்து மாவட்ட நீதிபதி முகேஷ் சந்திரா கூறுகையில், "தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேணி பிரசாத் பேசியுள்ளதால் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.
பேணி பிரசாத் மீது பதிவு செய்யப்படும் இரண்டாவது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு இதுவாகும்.
மார்ச் 31-ம் தேதி கோண்டா மாவட்டத்தில் பேணி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான எண்ணிக்கையிலான வாகனங்களுடன் பேரணியாக சென்றதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.