

ஒடுக்கப்பட்ட மக்களின் அசலான வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் கிளர்ந்தெழுந்தவை தலித் இலக்கியங்கள். கவிதைகள், நாவல்கள், சுயசரிதைகள் எனப் பல தளங்களில் கிளைவிட்டுப் படரும் தலித் இலக்கிய வளர்ச்சி சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய அம்சமாக எழுச்சி கொண்டுள்ளது.
தலித் இலக்கிய வளர்ச்சியுடன் தொடர்புகொண்ட எழுத்தாளர்கள் பங்கேற்புடன் தலித் இலக்கியத்தின் வளர்ச்சியை விவாதிக்கும் வகையில் கருத்துப் பட்டறை ஒன்றை ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனமும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தின. அக்டோபர் 30, 31-ம் தேதிகளில் பெரும்புதூரில் இந்தக் கருத்துப் பட்டறை நடைபெற்றது.
சமூக வளர்ச்சியில் தலித் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும், கல்வியாளர்களுக்கும் தலித் எழுத்தாளர்களுக்கும் அறிமுகத்தையும் நட்பையும் ஏற்படுத்துவது இந்தக் கருத்துப் பட்டறையின் பிரதான நோக்கம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.
மாநிலங்களவை உறுப்பினரும் மும்பைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் பாலசந்திர முங்கேகர் இதைத் தொடங்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்கள் ஜெயமோகன், இமையம், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் கலந்துகொண்டனர். கருத்துப் பட்டறையில் பேசிய ‘ஜெயமோகன்’ அரசியல் கோட்பாடுகளுக்கும் இலக்கியத்துக்குமான உறவுமுறை குறித்த தனது பார்வையை முன்வைத்தார். மனித குலத்தின் மீதான அன்புதான் இலக்கியப் படைப்புக்கு ஆதாரம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சாதிய அடையாளங்கள் இலக்கியத்துக்குத் தீங்காகவே முடியும் என்றார். ஓர் எழுத்தாளர் தனது தொடக்கத்தில் தலித்தியம், பெண்ணியம் சார்ந்தவராக அடையாளம் காணப்பட்டாலும் வளர வளர அவர் அத்தகைய அடையாளங்களிலிருந்து மீண்டெழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
எழுத்தாளர் இமையம், தலித் இலக்கியம் என்பதையே கேள்விக்குள்ளாக்கினார். தலித்துகளின் வாழ்வியல் சிக்கலை தலித் ஒருவர் புனைவாக்கினால் அதை தலித் இலக்கியம் என்றும் வேறு ஒருவர் படைப்பாக்கினால் அதை இலக்கியம் என்றும் அழைக்கும் போக்கைச் சாடினார். தலித் இலக்கியம் என்றோ தலித் எழுத்தாளர் என்றோ வகைப்படுத்துவது சரியல்ல என்னும் கருத்தை வெளிப்படுத்தினார்.
ராஜீவ் காந்தி தேசிய வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் லதா பிள்ளை நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சஷாங்க பிதே தலைமை தாங்கினார். பட்டறையில் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த சம்பவங்களைச் சித்தரித்த வீதி நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களிலிருந்து எழுத்தாளர் களும் கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் ஆராய்ச்சி மாணவர்களும் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர்.