கடல் ஓசை 90.4: மீனவர்கள் முன்னேற்றத்துக்கான சமுதாய வானொலி

கடல் ஓசை 90.4: மீனவர்கள் முன்னேற்றத்துக்கான சமுதாய வானொலி
Updated on
4 min read

பரபரப்பான நம் காலை நேரங்களில் வீடு தொடங்கி பயண இலக்குகள் வரை நம்முடன் சேர்ந்தே பயணிப்பது ரேடியோ பண்பலை ஒலிபரப்புகள். எத்தனையோ பொழுதுபோக்கு ஊடகங்கள் வந்துவிட்டாலும்கூட இன்னமும் பெரும்பான்மை இந்தியச் சமூகத்தின் ஆதர்ச ஊடகமாக இருப்பது ரேடியோ பண்பலைகள்தான். நிலப்பரப்பில் வாழும் நமக்கு மட்டுமல்ல கடலோடிகளுக்கும் ரேடியோ நேசமிகு ஊடகமாக இருக்கிறது என்பதற்கான சாட்சிதான் கடல் ஓசை 90.4 எஃப்.எம்.

ராமேஸ்வரத்தின் பாம்பனில் அப்படி ஒரு வானொலி ஒலித்துக் கொண்டிருக்கிறது. தினமும் அதிகாலை 12 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது கடல் ஓசை.

'பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் கடல் ஓசை 90.4.. நமது முன்னேற்றத்துக்கான வானொலி' என்ற அறிவிப்புடன் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தொடங்குகின்றனர். ஆசியாவிலேயே மீனவ சமுதாயத்துக்கு என்றே பிரத்யேகமாகச் செயல்படும் ஒரு சமுதாய வானொலி.

அண்மையில் கடல் ஓசை சமுதாய வானொலியின் நிலைய இயக்குநர் காயத்ரியையும் அதன் தொகுப்பாளினி சேலாஷையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காக அவர்கள் இருவரையும் பேட்டி கண்டோம்..

சேலாஷ் எம்.காம். பட்டதாரி. பாம்பன் மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவர். 2016-ல் கடல் ஓசை எஃப்.எம் ஆரம்பிக்கப்பட்டபோதிலிருந்து அதனுடன் தொகுப்பாளினியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

அவருடனான நேர்காணல்..

சேலாஷ்... உங்களுக்கும் கடல் ஓசைக்குமான பந்தம் குறித்துச் சொல்லுங்கள்?

நான் படித்தது எம்.காம். ஆனால் என்னுடைய சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்துகொண்டே இருந்தது. அப்போதுதான் கடல் ஓசை பாம்பனில் ஒலிப்பதாக இருந்தது. அத்துடன் என்னை இணைத்துக் கொண்டேன். கடல் ஓசை மீனவ சமுதாயத்துக்கான வானொலி என்பதால் இத்துடன் பயணிப்பது எனது இலக்கைப் பூர்த்தி செய்துள்ளது.

உங்கள் நிகழ்ச்சியின் பெயர் என்ன? எப்போது ஒலிபரப்பாகிறது?

எனது நிகழ்ச்சி தகவல் வீச்சு. இது நேரலை. காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒலிபரப்பாகும். தினமும் பெட்ரோல், டீசல் விலை தொடங்கி, காற்றின் வேகம், கடல் வானிலை என மீனவர்களுக்கு உபயோகமான பல்வேறு தகவல்களை நான் பகிர்வேன். இதில் நாங்கள் பாடல்கள் என்று எதுவும் ஒலிபரப்புவதில்லை. அப்படியே எப்போதாவது ஒலித்தாலும் அது மக்களிசை சார்ந்ததாக இருக்குமே தவிர சினிமா பாடல்களாக இருக்காது. பெரும்பாலும், மீனவ மக்களுக்குத் தேவையான தகவல்கள், விழிப்புணர்வுகளைப் பகிர்வதுதான் கடல் ஓசை தகவல் வீச்சு நிகழ்ச்சியின் நோக்கம்.

காலநிலை மாற்றத்தை ஒரு மீனவப் பெண்ணாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

நான் சிறு வயதில் கரையோரத்தில் கால் நனைக்கும்போதே மீன்கள் துள்ளிக் குதித்துச் செல்வதைப் பார்ப்பேன். ஆனால், இப்போதெல்லாம் பல கிலோ மீட்டர் சென்றால்தான் மீன்கள் கிடைக்கின்றன. கடல் வெப்பம் அதிகரித்திருக்கிறது. அதனால்தான் நான் சிறுவயதில் பார்த்த பல மீன்களை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை என்றளவில் எனக்கு காலநிலை மாற்றம் பற்றி புரிதல் ஏற்பட்டுள்ளது.

மீனவ சமுதாயத்துக்கான விழிப்புணர்வில் நீங்கள் எவற்றை முன்னிறுத்துகிறீர்கள்?

மன்னார் வளைகுடாவில் அதிலும் பாம்பனில் பவளப் பாறைகள் அதிகம். பவளப்பாறைகள் என்பன மீன்வளத்தைப் பாதுகாக்கும் உயிரினம். காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது பவளப்பாறைகள் ப்ளீச்சிங் எனும் வேதியல் மாற்றத்துக்கு உள்ளாகின்றன. சில நேரம் கடல் வெப்பம் குறையும்போது மீண்டும் உயிர் பெறுகின்றன. சில நேரங்களில் இறந்து விடுகின்றன. மீனவர்கள் ட்ரால் வலைகளைப் பயன்படுத்தும்போது பவளப்பாறைகள் சேதமடைகின்றன. முன்பெல்லாம் பவளப்பாறைகள் பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது அவற்றின் முக்கியத்துவம் பற்றி மீண்டும் மீண்டும் வானொலியில் தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம்.

கடல் ஓசை வாயிலாக ஒலித்த உங்கள் குரலால்  ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றம் என்று எதையாவது சுட்டிக்காட்ட இயலுமா?

நிச்சயமாக. முன்பெல்லாம் வலைகளில் ஆமைகள் சிக்கினால் அதனை எங்கள் மீனவர்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து விடுவார்கள். அப்புறம் என்ன ஆமைக்கறி சமையல்தான். அந்த ருசிக்கு எங்கள் நாக்கு அப்படி அடிமைப்பட்டிருந்தது. ஆனால், ஆமைகள் கடல் வளத்துக்கு எவ்வளவு முக்கியமானது. கடலில் உணவுக் கன்னி உடையாமல் பாதுகாப்பதும் ஆமைகள்தான் என்பதை விஞ்ஞானிகள் மூலம் நாங்கள் புரிந்து கொண்டோம். குறிப்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வு மிகவும் உதவிகரமாக இருந்தது. இப்போது எல்லாம் எங்கள் மீனவர்கள் ஆமைகள் வலையில் சிக்கினால் வலையை அறுத்து விடுவிக்கிறார்கள். இது மிகப்பெரிய மாற்றம் என நான் நம்புகிறேன். அதேபோல் கடல் அட்டைகள், நட்சத்திர மீன்கள், கடல் பசுக்கள் ஆகிய உயிரினங்களின் முக்கியத்துவத்தையும் நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

மீனவ மக்களின் பிரதிநிதியாக நீங்கள் அரசாங்கத்துக்கு வைக்கும் கோரிக்கைகள் என்ன?

1. கழிவுநீர் கடலில் நேரடியாகக் கலப்பதால் மன்னார் வளைகுடாவின் உயிர்கோளப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அதனால், மன்னார் வளைகுடாவின் கடல் வளத்தைப் பாதுகாக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

2. மீனவர்கள் பிடித்துவரும் மீன்களைப் பாதுகாத்து வைக்க குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு குடோன்கள் அமைக்க வேண்டும்.

3. மீன்களுக்கான ஆதார விலையை நிர்ணயிக்க கூட்டுறவு சங்கங்களை அரசே அமைக்க வேண்டும்.

இதுதான் பாம்பன் மீனவர்களின் பிரதான கோரிக்கை. கடல் ஓர் அதிசயம் அதைப் பாதுகாப்பது அவசியம் என்று சொல்லி முடித்தார் சேலாஷ்.

கடல் ஓசை நிலைய இயக்குநர் காயத்ரி உஸ்மான் பேசியதாவது:

அடிப்படையில் நான் ஒரு சவுண்ட் இன்ஜினீயர். சென்னையில் ஹலோ எஃப். எம்., துபாயில் ரேடியோ சலாம் ஆகிய பண்பலைகளில் வேலை செய்தேன். எப்போதுமே நாம் பார்க்கும் வேலை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றால் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். புதிய விஷயங்களுக்கான தேடல் என்னை கடல் ஓசையில் இணைத்தது. கடலும், கடலோடிகளும் எனக்கு இன்றளவும் எண்ணற்ற ஆச்சர்யங்களையும், படிப்பினைகளையும் அன்றாடம் அள்ளிக் கொடுக்கின்றன.

கடலைப் பற்றி புரிந்துகொள்வதோடு கடலோர மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகப் பணியாற்றுகிறோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கிறது. மீனவ மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை நான் பெற்றிருக்கிறேன். அதற்கு கடல் ஓசை தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. கடல் ஓசையின் நிறுவனர் எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங் ஃபெர்ணாண்டோ. இவருக்கு பாம்பன் தான் பூர்வீகம். இப்போது வேறு தொழிலில் இருந்தாலும் தன் மக்களுக்காக இந்தச் சேவையை ஆரம்பித்துள்ளார்.

என்னுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் இங்கு பணியாற்றுகிறோம். முழுக்க முழுக்க மீனவ சமுதாயத்துக்காக மட்டுமே இயங்குவதுதான் இதன் சிறப்பே. ஆந்திராவில் ஆலா ரேடியோ என்று ஒன்று இயங்குகிறது. ஆனால், அதில்கூட மீனவர்களுக்கான தகவல்களுடன் சேரி மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் எங்களின் கடல் ஓசை மட்டும்தான் இப்போதைக்கு மீனவர்களுக்கான எக்ஸ்குளூசிவ் சமுதாய வானொலி என்பதில் எனக்கு மிகுந்த பெருமை.

மீனவ சமுதாயத்தில் இன்னமும் சில குடும்பங்களில் பெண் கல்வியைப் பெரிதாகப் போற்றுவதில்லை, 17 வயது முடிந்தவுடன் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. கடல் ஓசை மீனவர்களுக்கான வானிலை அறிக்கை, கடலுக்குச் செல்லும் நேரம், மானியம் வழங்கும் காலம் போன்ற அறிவிப்புகளோடு நிறுத்திக் கொள்ளாமல் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பேணுவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் அக்கறை கொண்டிருக்கிறது.

ஷேலாஸ் எங்களிடம் முழுநேரத் தொகுப்பாளினியாக இருக்கிறார். நிறைய மீனவ கிராமப் பெண் பிள்ளைகள் இப்போதெல்லாம் சூழியல் சார்பாக ஆர்வத்துடன் வந்து வானொலியில் பேசிச் செல்கின்றனர். அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.250 தருகிறோம். 10 நிகழ்ச்சிகள் ஒரு மாதத்தில் செய்தால் அவர்களுக்கு சுமார் 2500 ரூபாய் வரை கிடைக்கிறது. இது ஒரு சிறு நிதி ஆதாரமாக இருக்கிறது.

குழந்தைகள், பெண்கள் என எங்கள் வீச்சு முழுமையாக இருப்பதால் பாம்பன் மக்கள் எங்களோடு ஐக்கியம் ஆகிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். நிறையப் பேர் ஆர்வத்துடன் தொடர்புகொண்டு தங்கள் பாரம்பரிய அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது கடல் ஓசை 90.4.. இது மீனவர்கள் முன்னேற்றத்துக்கான வானொலி என்ற ஒலி பாம்பன் சுற்றுவட்டாரத்தின் 10 கி.மீ. பகுதியில் நீங்கள் எங்கு சென்றாலும் கேட்கக்கூடிய ஒலியாக மாறியிருப்பதுதான் இதன் வெற்றி என்றார்.

கடல் என்றால் நமக்குத் தெரிந்தது கடற்கரை, சுவையான கடல் உணவு. ஆனால் ஷேலாஸ் சொல்வதுபோல் கடல் அதையும் தாண்டி ஒரு அதிசயம். கடலில் இருந்து உயிர்கள் உருவாகின. கடலை, கடல் வளத்தைப் பாதுகாப்பது நம் கடமையும்கூட. அது கடலோடிகளின் கடமை என நாம் ஒதுங்கி நிற்க வேண்டியதில்லை.

- பாரதி ஆனந்த்

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in