ஓட்டுக்கு நோட்டின் பரிணாம வளர்ச்சி!- தேனியில் பேக்கேஜாக பணம் கொடுக்க வியூகம்?
ஓட்டுக்கு நோட்டு வழங்குவதின் 'பரிணாம வளர்ச்சி' என்று சொல்லும் அளவுக்கு பேக்கேஜ் முறையில் பணப் பட்டுவாடாவுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு களத்தில் நெருக்கடி இருப்பதால் அவரின் வெற்றியை உறுதி செய்ய பல்வேறு வியூகங்களை கட்சி செயல்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே ஓட்டுக்கு நோட்டு வழங்குவதின் 'பரிணாம வளர்ச்சி' என்று சொல்லும் அளவுக்கு ஒரு வீட்டில் எத்தனை ஓட்டுகள் என தலையை எண்ணிக் காசு கொடுப்பதை விடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் இவ்வளவு தொகை என பேக்கேஜாக வழங்க திட்டமிட்டிருப்பதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமம், சிட்டி என தொகுதியில் எந்தக் குடும்பம் அதிமுக பாரம்பரியம் கொண்டது என்பது கணக்கெடுக்கப்பட்டு விட்டதாம். அவர்களுக்கு எல்லாம் ஜாக்பாட் தான் என்கின்றனர் கட்சிக்காரர்களே.
அதேபோல், ஒருவேளை ஒரு குடும்பத்தில் இந்தந்த நபர்கள் மட்டும்தான் அதிமுகவுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் என்று தெரிந்தால் அங்கு தலைக்கு காசாம்.
ஆனால், 'ஜாக்பாட்' தொகை எவ்வளவு? சில்லறை தொகை என்னவென்பது இன்னும் கசியவில்லை. 16, 17 தேதிகள்தான் பட்டுவாடாவுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேனியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தேனியில் பணம் புரள்வதை சூசகமாக சுட்டிக்காட்டி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேனியைவிடவா வேலூரில் பணம் புரள்கிறது என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
பணப்புழக்கம்: காங்கிரஸ், திமுகவினர் கருத்து
இது குறித்து தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்காக பிரச்சார களப் பணியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எம்.யுவராஜிடம் விசாரித்தோம்.
அவர் கூறியதாவது:
''தொகுதியில் பணப் பட்டுவாடா படு ஜோராக நடக்கிறது. ஆளுங்கட்சியினர் ஆரத்தி தட்டுக்கு ரூ.500, பிரதமர் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு ரூ.1000 என அள்ளிக் கொடுத்துள்ளனர். இதுதவிர தனிப்பட்ட முறையில் ஓட்டுக்கு ரூ.2000 வரை தருகிறார்கள். இதனைப் பணம் பெற்ற மக்களே எங்களிடம் கூறுகிறார்கள். போதாதற்கு நீங்கள் எப்போது கொடுப்பீர்கள் எவ்வளவு கொடுப்பீர்கள் என்றும் கேட்கிறார்கள்.
அப்படிக் கேட்ட ஒருவரிடம் எங்கள் தலைவர் ஈவிகேஎஸ், "நாங்கள் வாக்குக்குப் பணம் கொடுக்க மாட்டோம். ஆனால் அவர்கள் கொடுத்தால் 2000 ரூபாய் போதாது 5000, 10000 ரூபாய் கொடுங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் பணம்" எனச் சொன்னார்.
தவிர தொகுதிக்குள் 'பேக்கேஜ்' என்ற வார்த்தை பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்துக்கு இவ்வளவு என்ற பாணியில் பணப்பட்டுவாடா செய்யப்படும் போக்கையே மக்கள் அப்படிச் சொல்கிறார்கள்.
நாங்கள் பணப் பட்டுவாடாவுக்கான ஃபோட்டோ வீடியோ ஆதாரங்களுக்காக காத்திருக்கிறோம். அவை கிடைத்துவிட்டால் நிச்சயம் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போம்''.
இவ்வாறு யுவராஜ் கூறினார்.
