

மதுரை தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மட்டுமல்ல அரசியல் தலைநகரமும்கூட. மகாத்மா காந்தி தொடங்கி மகாநதி கமல்ஹாசன் வரை அரசியல் வரலாறு கொண்ட நகரம் இது. இத்தகைய பெருமை கொண்ட மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வி.வி.ராஜ் சத்யன், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் களம் இறக்கப்பட்டுள்ளார். அமமுகவின் சார்பில் போட்டியிடுகிறார் டேவிட் அண்ணாதுரை.
ஆளுங்கட்சி வேட்பாளர் அதிகார பின்புலமும் எதிர்க்கட்சி வேட்பாளர் கட்சியின் மதுரை மண்ணில் கம்யூனிஸ்ட்களின் தேர்தல் வெற்றி பின்புலமும் கொண்டவராக இருக்க அமமுக வேட்பாளர் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற கேள்வியுடன் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் டேவிட் அண்ணாதுரையை அணுகினோம். தந்தையைப் போலவே பேச்சாற்றல் மிளிர தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
உங்கள் தந்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அபிமானம் பெற்ற தலைவர், உங்கள் மைத்துனர் நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கியவர்.. இரண்டையும் விடுத்து உங்கள் பாதை புதிய பாதையாக இருக்கிறதே?
'அம்மா' மறைந்த பின்னர் அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக டிடிவி தினகரன் மட்டுமே இருந்தார். மக்கள் செல்வர் டிடிவி தினகரன் மட்டுமே 'அம்மா' வழியில் செல்கிறார். அதனால் நாங்கள் அவர் பின்னால் திரண்டுள்ளோம். சீமான் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெயரளவு தொடர்பு மட்டுமே. நானும் அவரும் பேசியதில்லை. எங்களுக்குள் கொள்கை உடன்பாடும் இல்லை. தோழமையும் இல்லை. அதனால் அந்தப் பாதை என்னை ஈர்க்கவில்லை.
ஆளும் அதிமுகவும் நாங்கள் ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்கிறோம் என்றுதானே சொல்கிறார்கள்?
சொல்கிறார்களே தவிர செய்யவில்லை. இன்று தமிழக நலன் சிதைந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தமிழக உரிமைகளைச் முற்றிலுமாக சிதைத்துவிட்டனர். 'அம்மா'வின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சுய லாபங்களுக்காக சமரசம் செய்து கொண்டு உரிமைகளை விட்டுக்கொடுக்கின்றனர். ஆனால் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் எதற்கும் அஞ்சாதவர். அத்தனை அரசியல் அழுத்தங்களையும் சமாளித்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். 'அம்மா'வின் கனவுப் பாதையில் செல்வதற்காக அந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.
உங்களை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வீர்கள்?
எனது தந்தை காளிமுத்துவின் அடையாளமே எனக்கான முதல் அறிமுகத்தைக் கொடுத்துவிடும். நான் ஒரு வழக்கறிஞர். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பயின்றேன். மதுரை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானேன். கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறேன். அரசியலுக்கு நான் புதியவன் அல்ல. 2001-ல் இருந்து 2007 வரை அதிமுகவில் மதுரை மாநகர மாணவரணி இணை செயலாளராக இருந்தேன். 2006-ல் இருந்து அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தேன். 2017 வரை மதுரை மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்தேன். 'அம்மா' மறைவுக்குப் பின்னர் டிடிவி அணியில் இலக்கிய அணி செயலாளராக இருந்தேன். அதன்பின்னர் இளைஞரணிச் செயலாளராக இருந்தேன். இப்போது வேட்பாளராக அறியப்படுகிறேன்.
இந்தத் தேர்தலில் அமமுக ஓட்டைப் பிரிக்கும் சக்தியாக இருக்குமா, வாக்குகளால் ஓங்கி ஒலிக்கும் சக்தியாக இருக்குமா?
நிச்சயமாக வெற்றியை முழங்கும் சக்தியாக இருக்கும். திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சிதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். திராவிட அரசியல் வரலாற்றில் எப்படி பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற தலைமை மாறுதல்கள் இயல்பாக நடந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அதேபோல் அமமுகவும் வரலாற்றுத் தொடர்ச்சியாக மக்கள் அங்கீகாரம் பெற்றுவருகிறது. இது நடந்தே தீர வேண்டிய அரசியல் சூழல் இப்போது உருவாகியுள்ளது.
அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிமுக என்ன செய்திருக்கிறது? எதிர்க்கட்சியாக திமுக என்ன செய்ய வைத்திருக்கிறது என்ற கேள்வியை மக்களிடம் கேட்டாலே போதும் அவர்களை எதிர்கொள்ளும் பாதை எனக்குக் கிடைத்துவிடும். இங்கு பல ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கு முழுக் காரணமாக திமுக இருக்கின்றது. இந்தத் தேர்தல் தமிழ்நாடு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய மத்திய அரசின் அழுத்தத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய தேர்தலாக இருக்கிறது. அந்த வகையில் அமமுக வேட்பாளர்கள் வாயிலாக மக்கள் புதிய தீர்ப்பு எழுதுவார்கள். புதிய வரலாறு படைப்பார்கள். அமமுகவுக்கு மக்கள் ஆதரவு முழுமையாக இருக்கிறது. அநீதிக்கு உடன்படாமல், அரசியல் அழுத்தங்களைத் தாண்டி எழுந்து நிற்கும் டிடிவி தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம்.
சின்னம் பிரச்சினையாக இருக்காதா?
சின்னம், கூட்டணி, பண பலம், அதிகார பலம் இவையெல்லாம் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் காலம் மாறிவிட்டது. மக்கள் புதிய தலைமைக்கான தேடலில் இருக்கிறார்கள். அந்தத் தேடல் தான் ஆர்.கே.நகரின் குக்கர் சின்னத்துக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதனால் அமமுகவுக்கு என்ன சின்னம் கிடைத்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள்.
மதுரை தொகுதியின் பிரச்சினை என்னவென்று நினைக்கிறீர்கள்?
மதுரை பாரம்பரிய சிறப்பு மிக்க நகரம். அதன் சிறப்பை உலக அளவில் நிலைநிறுத்த உழைப்பேன். மதுரையைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும். தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டுதான் ஜெயலலிதா தூத்துக்குடி - மதுரை இடையே இண்டஸ்ட்ரியல் காரிடர் உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையைக் கொண்டிருந்தார். ஆனால் அவரின் கனவை கிடப்பில் போட்டுவிட்டார்கள். 'அம்மா' வழியில் இயங்கும் டிடிவி தலைமையிலான நான் இந்தக் கனவை நனவாக்குவேன். மதுரை நகரம் போக்குவரத்து நெரிசலால் திணறிக் கொண்டிருக்கிறது. எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களிலும் பாலம் அமைக்கப்படுவதை உறுதி செய்வேன். முல்லைப் பெரியாறு நீரின் மீதான உரிமையை ஜெயலலிதா போராடி வென்றார். முல்லைப் பெரியாறு தண்ணீர் மேலூரில் கடைமடை வரை சென்றடைய பாடுபடுவேன். அமமுக மதுரையில் வெற்றிக் கொடி நாட்டும். இவையெல்லாம் நடந்தே தீரும். பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படுவதுபோல் திராவிட அரசியலில் இந்த வளர்ச்சியும் இயற்கையானதே. தமிழகத்தைக் குலைக்கும் சக்திகளுக்கு இந்த வளர்ச்சி பதிலுரைக்கும்.