வடசென்னையின் மாஃபியா அடையாளத்தை மாற்றுவேன்: மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா பேட்டி

வடசென்னையின் மாஃபியா அடையாளத்தை மாற்றுவேன்: மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா பேட்டி
Updated on
3 min read

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அரசியல் அரங்கிற்கு புதிய அறிமுகம். கமலுக்கும் கட்சிக்கும் இது தேர்தல் களத்தில் முதல் அனுபவம். புதிய கட்சியின் புதிய முகமாக வடசென்னை வேட்பாளராக களமிறங்குகிறார் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ள ஏ.ஜி.மவுரியா தேர்தலில் வெற்றி பெற்றால் வடசென்னையின் மாஃபியா அடையாளத்தை மாற்றுவேன் என்று சூளுரைக்கிறார்.

'இந்து தமிழ் திசை'க்காக அவர் அளித்த பேட்டி:

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த நீங்கள் அரசியலில் எப்படி?

நான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது நிறைய அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மக்கள் நலனை முன்வைத்து சேவை செய்யும் அரசியல்வாதிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்டேன். என்னுள் அரசியல் ஏக்கம் எப்போதுமே இருந்தது. அதனால்தான் அரசியலுக்கு வந்தேன்.

அதிகாரியால் மக்களுக்கு நல்லது செய்ய இயலாதா? அரசியல்வாதியால்தான் செய்ய இயலுமா?

இருவராலுமே இயலும். ஆனால், நான் அதிகாரியாக இருந்தால் ஏற்கெனவே இருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்குவேன். அரசியல்வாதியாக இருந்தால் கொள்கைகளை வகுக்கும் சுதந்திரத்துடனும் அதனைச் செயல்படுத்தும் அதிகாரத்துடன் இருக்க முடியும். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

நீங்கள் பணியாற்றிய காலத்தில் கமலின் கட்சி இல்லை.கமல் கட்சியில் இணைய எது உங்களை ஈர்த்தது?

எனக்கு அரசியல் தாகம் இருந்தாலும்கூட மக்களுக்கான அரசியல் யார் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்போதுதான் கமல்ஹாசன் கட்சியை அறிவித்தார். அவருடைய கொள்கைகள் மாற்று அரசியலுக்கு வித்திடுவதாக இருந்தன. முன்னேற்றம் தரும் அரசியலாக இருந்தது. அதனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராகவும் அறிவித்திருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு நலம் சேர்ப்பேன்.

மக்கள் நீதி மய்யத்தின் சிறப்பு என எதனைக் குறிப்பிடுவீர்கள்?

மக்கள் நீதி மய்யம் பல வகைகளில் சிறப்பானது. சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். மக்கள் நீதி மய்யம் மக்கள் நலன் சார்ந்தது. திராவிட சிந்தனை கொண்டது. சாதியற்ற சமூகத்தைப் போற்றுவது. இனவாதம் அற்றது. ஒருமைப்பாடு என்ற புள்ளியில் இணைவது. மய்யமான கொள்கை கொண்டது. அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியது.

வடசென்னையின் பிரதான பிரச்சினைகள் என நீங்கள் பார்ப்பது எவற்றை?

வட சென்னையில் எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றப்படாத 25 ஆண்டுகால பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்வதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம்.

1. குடிநீரில் கழிவு நீர், கச்சா எண்ணெய் கலக்கும் பிரச்சினை

2. போக்குவரத்து நெரிசல்

3. காற்று மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசு. காற்று மாசுக்கு துறைமுகம் காரணம். நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு இங்கிருந்த குப்பை கழிவு சேமிப்பகம் காரணம்.

இந்த மூன்று பிரச்சினைகளுமே வடசென்னை மக்களின் உடல்நலத்தை, சுகாதாரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இவற்றிற்கு வெறும் வாக்குறுதிகளால் தீர்வு காண முடியாது. அறிவியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். கழிவுநீர் மேலாண்மையையும் குப்பைக் கழிவு மேலாண்மையையும் நவீனப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும் மேலை நாடுகளைப் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இவை தவிர நடைபாதைக் குடிசைகள், மின்சாரம், குடிசை வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்தல் போன்ற நீண்ட கால பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டும்.

உங்கள் தொகுதியில் மீன்பிடித் தொழில் செய்பவர்கள் கணிசமாக இருக்கின்றனர். அவர்களுக்கான உங்கள் வாக்குறுதி என்ன?

மீனவர்களின் வாழ்வாதாரம் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடல் அரிப்பைத் தடுக்க பெரிய பெரிய பவுல்டர்கள் போடப்பட்டுள்ளன. இவற்றால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. கரைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் இத்தகைய பவுல்டர்களில் மோதி சேதமடைவது வாடிக்கையாக உள்ளது. வலைகள் சேதமடைவதும் நடக்கிறது. நவீன தொழில்நுட்பங்களை மீன்பிடித் தொழிலில் புகுத்த வேண்டும்.

வடசென்னை என்றாலே மாஃபியாவும் ஒட்டிக்கொண்டே வருகிறதே.. சினிமாக்கள் கூட அப்படித்தானே காட்டுகின்றன?

வடசென்னை முன்பு இருந்த மாதிரி இப்போது இல்லை. நான் இங்கு ஏசிபியாக இருந்துள்ளேன். வடசென்னையின் மாஃபியா முகம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. இங்குள்ள அப்பாவி மக்களை கிரிமினல்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சில காரணங்கள் இருக்கின்றன. முதலில் இங்குள்ள பிள்ளைகளின் பள்ளி இடை நிற்றல் விகிதம் அதிகமாக இருக்கிறது. கிரிமினல்களின் டார்கெட் இத்தகைய குழந்தைகள்தான். அவர்களை மதிமயக்கி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெற்றோர் இருவருமே பொருள் ஈட்ட வேண்டிய நிர்பந்தத்தில் பணிக்குச் சென்றுவிடுதால் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் பகல் முழுக்க சமூக விரோதிகளின் பிடியில் சிக்கிவிடுகின்றனர். பள்ளி இடைநிற்றலை முதலில் குறைக்க வேண்டும். அதற்கு மக்களோடு மக்களாக இறங்கி பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

நான் ஏசிபியாக இருந்தபோது ஸ்பெஷல் செக்யூரிட்டி டீம் என்ற பெயரில் ஒரு குழு அமைத்திருந்தேன். அதன் மூலம் கிரிமினல்களிடமிருந்து மீட்கப்பட்ட இளைஞர்களை, சிறார்களை சமூக சேவைகளில் பயன்படுத்தினேன். 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட இந்தத் திட்டத்தின் கீழ் நல்வழிப்படுத்தப்பட்டனர்.

இட நெருக்கடி, பெற்றோரின் கண்காணிப்பும் அரவணைப்பும் இல்லாமல் போவது, சுகாதாரக் குறைபாடு, தரமான கல்வியின்மை ஆகிய காரணிகளே மாஃபியாக்களை உருவாக்குகிறது. நான் தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக வடசென்னையின் மாஃபியா அடையாளத்தை மாற்றுவேன்.

கட்சி ஆரம்பித்தார், களத்தில் இறங்கினார் ஆனால் போட்டியிடாமல் விட்டுவிட்டாரே என்று கமல் மீது ஆதங்கம் வெளிப்படுத்தப்படுகிறதே..

கமல் போட்டியிடாததை நான் வரவேற்கிறேன். இது ஒருவகையில் சுயநலமும்கூட. கமல்ஹாசன் போட்டியிட்டிருந்தால் அவர் அவருடைய தொகுதியில் மட்டுமே வாக்கு சேகரிக்கச் சென்றிருப்பார். இப்போது அப்படியல்ல. மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்காக எல்லா ஊர்களுக்கும் வருவார். அவர் இன்னும் இன்னும் அதிகமாக மக்களிடம் சென்று சேர்வார். நாங்கள் காணும் வெற்றியெல்லாம் அவருடைய வெற்றிதானே.

உங்கள் மீது சமூக ஊடகங்களில் புகார் முன்வைக்கப்படுகிறது.. ’கட்டிங் கிங்’ என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்களே? ஊழலை எதிர்க்கும் கட்சியில் ஊழல் முகம் என்றெல்லாம் சொல்கிறார்களே..

விமர்சனங்கள் வருவது இயல்பே. ஆனால், என்னைப் பற்றி காவல்துறையிலும், வடசென்னை மக்களிடமும் கேட்டால் தெரியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்குமே என்னை அங்கு பணியாற்றிய அதிகாரி என்ற முறையில் தெரியும். அவர்கள் என் மீது குறை சொல்லட்டும். சிலர் தன்னலம் சார்ந்த வெறுப்புகளை அவதூறுகளைப் பரப்புவதை தவிர்க்க இயலாது அல்லவா?

கமல்ஹாசன் நிறைய படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியாக நீங்கள் ரசித்த போலீஸ் கமல் யார்?

எனக்கு 'விக்ரம்' படத்தில் வரும் போலீஸ் கமல் பிடிக்கும். ஆனால், அதைவிட அதிகமாக 'வேட்டையாடு விளையாடு' ராகவனை ரொம்பப் பிடிக்கும். அதில் அவர் அடிக்கடி ராகவன் இன்ஸ்டின்க்ட் என்று கூறுவார். அதேபோல் நான் வடசென்னையில் பணியாற்றியபோது எனக்கும் மவுரியா இன்ஸ்டின்க்ட் என்று ஒன்று இருந்தது. நான் ரோந்தில் இருக்கும்போது என்னைத் தாண்டிச் செல்லும் இருசக்கர வாகனத்தில் இருப்பவர் தவறான நபர் என்ற உள்ளுணர்வு ஏற்பட்டு நிறுத்தி விசாரித்தால் பல முறை அது சரியான கணிப்பாக இருந்திருக்கிறது. அதனால் எனக்கு 'வேட்டையாடு விளையாடு' கமல் மனதுக்கு நெருக்கமானவர்.

இவ்வாறு மவுரியா கூறினார்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in