மாவோயிஸ்ட்டுகள் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டுவதாக தகவல்: நான்கு மாநில டிஜிபிகள் ஆலோசனைக் கூட்டம்

மாவோயிஸ்ட்டுகள் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டுவதாக தகவல்: நான்கு மாநில டிஜிபிகள் ஆலோசனைக் கூட்டம்
Updated on
1 min read

மாவோயிஸ்ட்டுகள் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டுவதாக வந்த தகவலை அடுத்து நான்கு மாநில டிஜிபிகளின் கூட்டம் உதகையில் இன்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கேரளா, கர்நாடக மாநிலங்களை ஒட்டி உள்ளது. கேரளா மாநிலம் வயநாடு, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளது. கேரளா தண்டர்போல்ட் அதிரடிப் படையினர் தினந்தோறும் வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் மாவோயிஸ்ட்டுகள் திடீரெனத் தோன்றி ஆதிவாசிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதேபோல் அரசுக்கு எதிராக நோட்டீஸையும் விநியோகிக்கின்றனர்.

தமிழக அதிரடிப் படையினரும்  கேரளா எல்லையான நீலகிரி மாவட்டம்  மஞ்சூர், முள்ளி, கூடலூர், நாடுகாணி உள்ளிட்ட இடங்களில் தினந்தோறும் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலைச் சீர்குலைக்க மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத் துறை போலீஸாருக்கு  ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கேரளா, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம் இன்று (சனிக்கிழமை) ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் தொடங்கியது.

ஊட்டியில் உள்ள தமிழக மாளிகையில் தொடங்கிய டிஜிபிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், அதிரடிப்படை ஏடிஜிபி சந்தீப் ரத்தோர், கேரளா டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, பாண்டிச்சேரி  டிஜிபி சுந்தரி நந்தா உள்ளிட்ட 28 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பொதுமக்களை எப்படிப் பாதுகாப்பது அவர்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் எல்லைப் பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலை பிரச்சினை இன்றி நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதித்தனர்.

நான்கு மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் ஊட்டி வருவதையொட்டி நீலகிரி எஸ்.பி.சண்முகபிரியா தலமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in