சத்தீஸ்கரின் ‘விஜயகாந்த்’ அஜித் ஜோகி?

சத்தீஸ்கரின் ‘விஜயகாந்த்’ அஜித் ஜோகி?
Updated on
2 min read

நாடு தழுவிய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போலவே, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி பேசும் மக்களின் தாயகமான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. அடுத்தடுத்த தோல்விகளால் அதிர்ந்து இருந்த காங்கிரஸுக்கு இந்த வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரை 3 மாநிலங்களிலும் தோல்வியை எதிர்பார்க்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தது. அதைவிட சத்தீஸ்கரில் ஏற்பட்ட படுதோல்வியை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை.

காங்கிரஸ் 43 சதவீத வாக்குகளுடன் 68 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 33 சதவீத வாக்குகளுடன் வெறும் 15 இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அஜித் ஜோகி மற்றும் மாயாவதி கூட்டணி 11.5 சதவீத வாக்குகளுடன் 7 தொகுதிகளில் வென்றுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிட்டால் பாஜகவுக்கு 8 சதவீத வாக்கு குறைந்துள்ளது. 41 சதவீத வாக்குகளுடன் 49 இடங்களில் பாஜக வென்றது. 40.3 சதவீத வாக்குகள் பெற்ற காங்கிரஸ் 39 இடங்களில் வென்றுள்ளது.

கடந்த தேர்தலை ஒப்பிட்டால் காங்கிரஸின் வாக்கு வங்கி 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் வெற்றி பெற்றது  இடங்கள் 39-ல் இருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. இங்கு தான் அஜித் ஜோகியின் அரசியல் வேலை செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜனதா காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி அஜித் ஜோகி, மாயாவதியுடன் கூட்டணி அமைத்தார். காங்கிரஸில் இருந்து வந்தவர் என்பதாலும் பழங்குடி மக்களிடம் செல்வாக்கு உள்ளவர் என்பதாலும் அவர் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸுக்கு வாக்கு இழப்பை ஏற்படுத்தும் என பாஜக கணக்கிட்டது. அதுபோலவே ஜோகியுடன் மாயாவதி கூட்டணி அமைப்பதும் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடித்து பாஜக வெற்றியை எளிமையாக்கும் என அக்கட்சித் தலைவர்கள் எண்ணினர்.

ஆனால் நடந்ததோ வேறு. ஜோகி கூட்டணியால் வாக்கு இழப்பு ஏற்பட்டது பாஜக அணிக்கு. இந்த இருவர் கூட்டணி பாஜகவிடம் இருந்து பழங்குடியினர் மற்றும் தலித் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அதுபோலேவே, தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் கடந்த முறை வென்ற 4 இடங்களை பாஜக இந்த முறை பறிகொடுத்துள்ளது. இதுமட்டுமின்றி பொதுத் தொகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கணிசமாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு சென்றதால் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக காங்கிரஸிடம் தோல்வியடைந்துள்ளது.

இதுபோலவே 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைதேர்தலில் பழங்குடியினர் தொகுதிகளில் 11 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனால் அவற்றில் 10 இடங்களை இந்த முறை பறிகொடுத்துள்ளது. இந்த இடங்களில் அஜித் ஜோகியின் வேட்பாளர்கள் கணிசமான வாக்குளைப் பாஜகவிடம் இருந்து பறித்து விட்டனர். அவர்கள் வெற்றி பெறாவிட்டாலும், காங்கிரஸிடம் பாஜக தோற்க இது காரணமாக அமைந்து விட்டது.

இது தமிழகத்தில் 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்லை நினைவுபடுத்துகிறது. நீண்டகாலமாக இரு துருவ அரசியலில் பழக்கப்பட்ட தமிழகத்தில் முதன்முறையாக விஜயகாந்த் தலைமையில் தேமுதிக என்ற கட்சி களம் இறங்கியது. அந்தத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளை வாங்கிய விஜயகாந்த் வென்றது ஓரிடத்தில் மட்டுமே. ஆனால் அவர் பிரித்த 8 சதவீத வாக்குகள் பல தொகுதிகளில் அதிமுகவின் தோல்வியைக் கடுமையாக்கியது. தேமுதிக 3-வது கட்சியாக உருவெடுத்து பெரிய கட்சியாக இருந்த அதிமுகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதுபோலேவே சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலிலும் கடந்த 15 ஆண்டுகளாக முதல் கட்சியாக இருந்து வந்த பாஜகவுக்கு அஜித் ஜோகி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். அவரது கூட்டணி வென்றது 7 தொகுதிகள் தான் என்றாலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை இருந்து வந்த பாஜக - காங்கிரஸ் என்ற இருதுருவ அரசியலுக்கு விடை கொடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அஜித் ஜோகியின் அரசியல் அடுத்த கட்டம் எப்படி பயணிக்கும் என்பதை 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in