இங்கு லேயர் டீ கிடைக்கும்?- அசத்தும் மாணிக்கம்

இங்கு லேயர் டீ கிடைக்கும்?- அசத்தும் மாணிக்கம்

Published on

டீக்கடைக்குப் போனால்தான் எத்தனை வகை டீ. லெமன் டீ, இஞ்சி டீ, மசாலா டீ, க்ரீன் டீ, பிளாக் டீ எனப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். ஆனால், லேயர் டீ என்று ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் ருசிக்க வேண்டும் என்றால் அதற்கு கோவைதான் செல்ல வேண்டும்.

கோவையில் கனுவாய் மலைக்குச் சென்றால் மொபட்டில் டீ விற்கும் பி.மாணிக்கத்தைப் பார்க்கலாம். யானைகள் தான் இவரது அண்டை வீட்டு அன்பர்கள். ஆனாலும் அவை இங்கு அத்துமீறுவதில்லை. அலுமினியக் கோப்பையில் தேநீரை ஆற்றிக் கொண்டிருக்கிறார் 57 வயதான மாணிக்கம்.

4 தேநீர் கோப்பைகள் அவற்றில் விதவிதமாக அடுக்கடுக்காக டீயை அடுக்கி வித்தை காட்டுகிறார். ஃபைனல் டச்சுக்காக செம்புக் கம்பியை இதயம், தாமரை வடிவங்களில் செதுக்கி வைத்திருக்கிறார். அதில் அடர்த்தியான டிக்காஷனை ஊற்றி அழகுபடுத்துகிறார்.

கிராமத்து காஃபி டே போல் அழகாக மிளர்கிறது அந்த தேநீர் கோப்பை. சாம்பிளுக்கு நமக்கு சிலவற்றைச் செய்து காட்டினார். நன்றாக கொதிக்கும் நீரை ஒரு டம்பளரில் 4-ல் ஒரு பாகம் நிரப்பினார். அதன் மீது பாலை ஊற்ற பால் தண்ணீருடன் கரையாமல் கனவு போல் மிதக்கிறது. அதன் மீது அடர்த்தியான் டிகாஷன். அற்புதம், மூன்றடுக்கு டீ ரெடியாகிவிட்டது.

ஐந்து அடுக்கு டீ வரை தன்னால் செய்ய முடியும் என்கிறார். இன்னொரு டம்ளரில் இரண்டு அடுக்கு பால் இடையே ஓரடுக்கில் டீ இருக்கிறது.

இதெல்லாம் எப்படி சாத்தியம் எனக் கேட்டால் எல்லாம் டிக்காஷனின் பதம் எனக் கூறுகிறார். பல பதங்களில் டிக்கா‌ஷன்களை தயார் செய்து வைத்திருக்கிறார்.

சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டேன். பல டீக்கடைகளில் வேலை பார்த்தேன். அங்கெல்லாம் டீ மாஸ்டரின் கைப்பக்குவத்தைக் கற்றுக் கொண்டேன். 15 வருடங்களுக்கு முன்னதாக இந்த அடுக்கு டீயை நான் செய்து பார்த்தேன். எனது வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது தனிச்சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். டீ தான் எனக்கு வாழ்க்கை தந்தது. எனவே அந்த டீயைக் கொண்டே புதுமை படைத்ததில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

மாணிக்கம் கோவையில் பல டீக்கடைகளில் வேலை பார்த்திருக்கிறார். ஆனால், சொந்தமாக கடை தொடங்க அவருக்குப் பணம் கிடைக்கவில்லை. அவர் தனது மொபட்டில் டீ கொண்டு செல்கிறார். சுமார் 500 கப் டீ தினமும் விநியோகிக்கிறார். என்னிடம் அடுக்கு டீ வேண்டும் என்று கேட்பவர்களுக்குத்தான் அதை போட்டுத் தருகிறேன். மற்ற எல்லோருக்கும் சாதாரண டீ தான் என தன்னிடம் உள்ள பெரிய கலையை காசாக்கும் எண்ணம் இல்லாதவராய் இயல்பாய் புன்னகை பூக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in