

திரையில் வெளியாகிவிட்ட 'சர்கார்' திரைப்பட சர்ச்சைகள் ஏராளம். ஆனால் இன்னும் தொடங்கப்படாத படமான கமலின் 'தேவர்மகன் 2' தாராளமாக விவாதப் பொருளாகியிருக்கிறது.
இதற்கு முன் 'சண்டியர்', 'கொம்பன்', 'பாய்ஸ்', 'மாயி' என்ற திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிதான், தேவர்மகன் 2 சர்ச்சையை கமலுக்கான திறந்த மடல் மூலம் தொடங்கிவைத்திருக்கிறார்.
இந்து தமிழ் இணையதளத்துக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி.
திரைப்படங்களின் பெயர் தொடங்கி கரு வரைக்கும் இப்படி அரசியல் கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போக்கு எத்தகையது?
ஆரம்ப காலங்களில் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குச் சித்திரங்களாக இருந்தன. பின்னர் அதில் சில கருத்துகள் சொல்லப்பட்டன. ஆனால், இன்றைய திரைப்படங்கள் பொழுதுபோக்கும், கருத்தும் மட்டுமாக இருக்கவில்லை. அதைச் சுற்றி வியாபாரம் இருக்கிறது. அது விளம்பரமாக இருக்கிறது. அது அரசியல் பேசுகிறது. அது சாதியத்தை உயர்த்திப் பிடிக்கிறது. அது மதத்தைப் போற்றுகிறது. இப்படி திரைப்படங்கள் தடம் மாறிவிட்டன. கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்களில் வன்முறையும் ஆபாசமும் அதிகரித்துவிட்டது. ரத்தம் சொட்டச்சொட்ட எம்.ஜி.ஆர். சண்டைக் காட்சிகள் இருந்திருக்கின்றனவா? இல்லை பானுமதிதான் ஆபாச நடனம் ஆடியிருக்கிறாரா? ஆனால் இன்று திரையில் நாம் பார்ப்பதில் வன்முறையும் ஆபாசமும்தானே நிறைந்திருக்கிறது.
அந்தக் காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் கூட வசனம் வாயிலாக அரசியல் பேசியிருக்கிறாரே?
ஆமாம், பேசியிருக்கிறார். ரயில் பெட்டியின் கட்டை இருக்கையால் சாதி ஒழிந்தது என்று பேசினார். ஆனால், அவர் சினிமாவை தங்களுக்கான பின்புலமாகப் பயன்படுத்தவில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி சமூக கருத்துகளைத் தங்கள் சுய அடையாளத்துக்காகப் பயன்படுத்தியதில் ஒரு வரையறை இருந்தது. அவர்கள் எல்லோரும் கலையை கலைஞனாக அணுகினார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பிட்ட சமூகத்தினரை தூக்கிப் பிடிப்பதும் குறிப்பிட சாதியினரை இழித்துப் பேசுவதும் இன்றைய காலகட்டத்தில்தான் இருக்கிறது. இந்த சாதிய அம்சங்கள் தமிழன், இந்தியன் என்ற பெரிய அடையாளத்தை மறக்கச் செய்துவிடுகிறது.
என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் வரிசையில் கமலும் சமுதாயக் கருத்துகளை சொல்லக்கூடாதா?
நிச்சயமாக சொல்லலாம். ஆனால், அதற்கு சாதிப்பெயரைச் சூட்டி சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
அப்படியென்றால் தேவேந்திரர் மகன் என்று ஏன் பரிந்துரைத்தீர்கள்? எந்த சாதியும் வேண்டாம் எனக் கூறலாம் அல்லவா?
'தேவர் மகன் 2' என்று அவர் அந்தப் படத்துக்கு பெயர் வைக்காவிட்டால் போதும். வேறு எந்தப் பெயர் சூட்டினாலும் பிரச்சினையில்லை.
ஒருவேளை கமல் பெயரை மட்டும் மாற்றிவிட்டு சாதி நெடியுடன் படத்தை எடுத்தால்?
எப்படி 'கொம்பன்' படத்துக்கு 73 கட் வாங்கினேனோ அதேபோல் அந்தப் படத்துக்கும் கட் வாங்குவேன். எனது நோக்கம் எனது கட்சியின் கொள்கை சமத்துவம் சமப்பண்பு. அதற்காக குரல் கொடுப்பேன். திரைப்படங்களின் தலைப்பு தொடங்கி கரு, பாடல்கள், வசனங்கள் என எதிலும் சாதியத் தூக்கலும் வன்முறையும் ஆபாசமும் இருக்கக் கூடாது. அது எங்கிருந்தாலும் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன்.
திரைப்படங்களுக்கு சாதிப் பெயர்கள் வைப்பதால் மட்டுமேதான் தமிழ்ச் சமுதாயம் பிளவுபட்டு கிடக்கிறதா?
நிச்சயமாக. கடந்த 20 ஆண்டுகளாகத்தான் தமிழ்த் திரைப்படங்கள் சாதிய பூச்சைத் தாங்கி வருகின்றன. தேவர்மகன் 1993-ல் வெளியானது. 1997-ல் தியாகி சுந்தரலிங்கம் பெயரை போக்குவரத்துக் கழகத்துக்கு சூட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஆறு மாதங்கள் கலவரங்கள் நடந்தன. எத்தனை எத்தனை பேருந்துகள் எரிக்கப்பட்டன.
வேறு எந்த சாதிப் பெயர் போக்குவரத்து கழகங்களுக்கு இல்லாமல் போனாலும் பரவாயில்லை சுந்தரலிங்கம் பெயர் இருக்கக்கூடாது என்ற மனநிலை எங்கிருந்து வந்தது? போற்றிப் பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணே என்ற பாடல் வரிகள் தந்த சாதிய ஊக்கம் அது.
அந்தப் பாடலை அந்த சமுதாயத்தினர் அவர்கள் வீட்டு விஷேசங்களில் அவர்கள் இல்லங்களில் கேட்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. ஆனால், அதை பிற சமூகத்தினர் செய்யும்படி திணிக்க முடியாது. அன்று அந்தப் பாடல் திணிக்கப்பட்டது. வன்முறை உருவானது.
அதுவும் தென்மாவட்டங்களில்தான் வன்முறை உருவானது. இப்போதுதான் தென் மாவட்டங்கள் அமைதியாக இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் இன்னொரு சாதிக் கலவரம் உருவாகக் கூடாது என்பதே எனது நல்லெண்ணம்.
ஆனால்.. நீங்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே இதைச் செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறதே?
இது இழிவான குற்றச்சாட்டு. 1992-ல் 'தேவர் மகன்' வந்தபோது பாஜக எங்கே இருந்தது? ராமதாஸ் 'பாபா' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கும் பாஜக தான் காரணமா? 'விஸ்வரூபம்' படத்திற்கு இஸ்லாமியர் எதிர்ப்பு தெரிவித்தனரே, பாஜக இஸ்லாமியர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்ததா? 'மருதநாயகம்' படத்திற்கு முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே, அதற்கும் பாஜக தான் காரணமா? 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பாஜக பின்னணியால் தான் முக்குலத்தோர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்களா?
கமல்ஹாசன் என்பதால்தான் எதிர்க்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?
சித்தார்த் ஒன்றும் கமல் அளவுக்கு பெரிய நடிகர் இல்லையே. அவரது பாய்ஸ் படத்தைக்கூட எதிர்த்தேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று பேசியதைக் கூட எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன்.
ஆனால், கமலை எதிர்ப்பதற்கு வேறு காரணமும் இருக்கிறது. அதுதான் பிராண்டிங்.
பிராண்டிங் என்பது மிக முக்கியமாக இருக்கிறது. கமல்ஹாசன் போன்ற ஒரு அடையாளம் சில கருத்துகளை சொல்வதற்கும் வேறு யாரோ முகம் தெரியாதவர் ஒரு விஷயத்தைச் சொல்வதற்குமான இம்பாக்ட் வேறு. அதுதான் பிராண்டிங். அந்த பிராண்டிங்குக்காகத்தான் பிக் பாஸ் தொகுப்பாளராக கமல் தேர்வு செய்யப்பட்டார். அப்படி இருக்கும்போது பிராண்ட் இருப்பவர்கள் சாதியத்தை தூக்கிக் பிடிக்கக்கூடாது. அதுவும் மைய அரசியல் பேசுபவர்கள் நிச்சயமாக செய்யக் கூடாது.
திரைத்துறையினருக்கு உங்களது அட்வைஸ் என்ன?
திரைத்துறையினர் தங்களுக்கென்று ஒரு மேதாவித்தனத்தைக் கொண்டுள்ளனர். அந்த மேதாவித்தனத்தை அவர்கள் விட்டொழிக்க வேண்டும். சமூகத்திலிருந்து வரும் குரல்களுக்கு அவர்கள் செவி சாய்க்க வேண்டும். திரைப்படங்களைப் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும். அதையும் தாண்டி அதில் கருத்து சொன்னால் அது சுய லாபத்துக்கானதாக இருக்கக் கூடாது.
'சர்கார்' சர்ச்சையும் அதிமுக அணுகுமுறையும்.. உங்கள் பார்வையில்?
இலவசங்கள் எல்லா காலகட்டத்திலுமே இருந்திருக்கின்றன. இலவசம் என்ற கொள்கையை நீங்கள் எதிர்க்க வேண்டும் என்றால் மேடையை விட்டு அரசியலுக்கு வாருங்கள். அதைவிடுத்து நடித்துக்கொண்டே விமர்சனம் செய்யாதீர்கள். இன்று எல்லோருக்குமே முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கிடைக்கிறது. 'சர்கார்' படத்தை எழுதியவர், இயக்கியவர், நடித்தவர் அந்த முதல் 100 யூனிட் மின்சாரத்தை என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும்.