

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கக் கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் உரிமை அனைத்து வயதுப் பெண்களுக்கும் உள்ளது என தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவரும், பல புத்தகங்களை எழுதியவருமான அரவிந்த் சுப்ரமணியத்தைத் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.
சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து?
சபரிமலைத் தீர்ப்பு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. வழக்கு தொடுத்தவர்கள் யாரும் பக்தர்கள் அல்ல. அவர்களுக்கு மத நம்பிக்கையும் இல்லை. வீண் முரண்டு பிடிப்பதற்காகவே அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் சபரிமலைக்கு வரப்போவதுமில்லை. ஐயப்பன் மீது நம்பிக்கை உள்ள பெண்கள் அந்தக் கோயிலின் பாரம்பரியத்தை மீற விரும்புவதில்லை.
தீர்ப்பளித்தவர்களில் 4 நீதிபதிகள் அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதிக்க ஒப்புக் கொண்டனர். ஆனால் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா அதை ஏற்கவில்லை. கோயிலின் பாரம்பரியம் மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது தவறு என்ற வாதம் பற்றி?
இதில் ஆண், பெண் பாகுபாடு என்ற பிரச்சினையே இல்லை. குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் வர வேண்டாம் என்பது கோயிலின் ஐதீகம். அதில் ஆண் - பெண் சமநிலை எனக் கூற முடியாது. கோயிலுக்குள் அனைத்து சமூக மக்களையும் அனுமதிக்க வேண்டும் என போராடிய முன்னோடி மாநிலம் கேரளா.
உயர் சாதியினர் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட காலத்தில், 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாகத் தடையின்றி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். அந்தக் கோயிலில் எப்போதுமே சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை.
எனவே ஆண் - பெண் பாகுபாடு என்று கூறுவது தவறானது. சபரிமலைக் கோயிலுக்கு என்ற சில நம்பிக்கைகளும், பாரம்பரியங்களும் உள்ளன. அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட வயதுப் பெண்கள் அங்கு செல்வதில்லை.
நம்பிக்கை வேறாக இருக்கலாம். ஆனால் சட்டத்தின் பார்வை அப்படி இருக்காது அல்லவா?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சபரிமலை கோயில் பற்றிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. வார்டு மற்றும் கார்னர் என்ற ஆங்கிலேயர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. அதில், ‘‘பெரியாறு அருகே மலைப்பகுதியில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் குறிப்பிட்ட வயதுப் பெண்களை அனுமதிப்பதில்லை. அது அவர்களின் சமய நம்பிக்கை. இதில் அரசு தலையிட முடியாது’’ என தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.
எனவே தான் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சபரிமலை சம்பிரதாயங்களில் தலையிடாமல் இருந்துள்ளனர். 1936-ம் ஆண்டு தேவசம்போர்டு நிர்வாகத்தின் கையில் சபரிமலை கோயில் மாறிய பிறகும் கூட அதன் பாரம்பரியம் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மத நம்பிக்கையில் தலையிடுவதில்லை என்று முன்பு பல நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன.
ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் God (கடவுள்) என்ற அடிப்படையிலேயே சட்டம் இந்தப் பிரச்சினையை அணுகுகிறது. நாங்கள் Deity (தேவதை) என்ற அடிப்படையில் அணுகிறோம். பொதுவான பதத்தில் கூறப்படும் கடவுள் என்ற அடிப்படையில் இதனை அணுக முடியாது. ஒவ்வாரு கோயில், தெய்வங்களுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. அதுபடியே நமது வழிபாட்டு முறையும், உரிமையும் அமைந்திருக்கிறது.
மாதவிடாய் என்ற ஒன்றைக் காரணம் காட்டி பெண்களை அனுமதிக்க மறுக்கலாமா?
மாதவிடாய் என்ற பிரச்சினைக்குள்ளேயே நாங்கள் போக விரும்பவில்லை. சபரிமலை கோயிலுக்கு என்று ஒரு சம்பிரதாயம் உள்ளது. அதற்கு ஆண்களும் கட்டுப்பட்டவர்கள். ஒரு மண்டலம் விரதம் இருந்து, மாலை அணிந்து, இருமுடி கட்டி தான் அந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஆண்கள் என்பதால் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என அர்த்தமில்லை.
இந்த சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். இதற்கு ஆண்களும் விதிவிலக்கல்ல. எனவே ஆண் - பெண், மாதவிடாய் என்பது போன்ற வாதங்கள் சரியல்ல. இவற்றையெல்லாம் தாண்டி அந்தக் கோயிலின் ஐதீகம், பாரம்பரியம், நடைமுறை காக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் மக்களின் நம்பிக்கை. அதுவே எங்கள் கோரிக்கை.
சபரிமலை கோயிலின் பாரம்பரியம் எப்படி மாறுபட்டது?
சபரிமலை கோயில் ஐதீகத்தைப் பற்றி பல சான்றுகள் உள்ளன. பரசுராமரால் உருவாக்கப்பட்டு அகத்தியரால் வழிபாடு செய்யப்பட்ட இந்தப் பாரம்பரியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. மற்ற கோயிலுக்குச் செல்பவர்கள் எல்லாம் பக்தர்கள். ஆனால் இந்தக் கோயிலுக்குச் செல்பவர்கள் ஐயப்ப சுவாமிகள்.
கோயிலுக்குச் செல்பவர்களை கூட சுவாமியாகப் பார்ப்பது சபரிமலை கோயில் ஐதீகம். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்ய முடியும். ஒரு மண்டலம் விரதம் இருந்து மாலை அணிந்து, இருமுடி கட்டி தான் அந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். 18 படிகள் என்பது, படிக்கு பூஜை செய்வதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு. இதுவேறு எந்த ஐயப்பன் கோயிலிலும் இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து?
சபரிமலை ஐயப்பன் கோயில் ஐதீகத்தைக் காக்க கேரளா மட்டுமின்றி பல மாநிலங்களிலும் மக்கள் பிராத்தனை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். பந்தளம் மற்றும் சங்கணாச்சேரியில் சமீபத்தில் நடந்த ஊர்வலங்களில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் ஏராளமானோர் பெண்கள்.
வரும் 11-ம் தேதி பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பிரார்த்தனை ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஐயப்ப பக்தர்கள் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அரவிந்த் சுப்ரமணியம் கூறினார்.