தினமும் எத்தனை டீ, காபி குடிக்கலாம்?
டீ, காபியை தினமும் அளவுடன் குடிப்பது நம் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஆனால், அந்த அளவுக்கு அதிகரிப்பது நம் நலனுக்கு உகந்தது அல்ல.
காபியோ, டீயோ ஒரு நாளுக்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பதைக் கூடியவரை தவிர்க்க வேண்டும்.
காபி, டீ இரண்டிலும் பால், சர்க்கரை கலந்துதான் குடிக்கிறோம். ஒவ்வொரு டீஸ்பூன் சர்க்கரையும் வரப்போகிற நோய்க்கான அழைப்புதான்!
வயதுக்கும், உடல் நிலைக்கும் ஏற்ற அளவில்தான் பாலைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான கால்சியம் சத்தும் உடலுக்கு நல்லதல்ல.
காபியில் இருக்கும் காஃபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக அமைந்துவிடும்.
எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கு டீயும் ஒரு காரணம்.
ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு அதிகப்படியாகக் காபி குடித்தே தீர வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அவற்றின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
ஒரு கப் காபிக்கு பதில் முதலில் அரை கப், பிறகு கால் கப் என்று படிப்படியாகக் குறைக்கலாம். டீ விரும்பிகள் கிரீன் டீக்கு மாறலாம்.
கிரீன் டீயில் இயற்கையாக கிடைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ஸ், திசுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. எதுவுமே அளவுடன் இருந்தால் வளமுடன் வாழலாம்.