‘சிபில்’ ஸ்கோர் குறைய 3 காரணிகள்!
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனி நபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் வழங்க ஒரு முக்கிய காரணியாக ‘சிபில்’ (CIBIL) ஸ்கோரை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.
சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை வழங்கப்படும். இதில் 750-க்கு மேல் இருந்தால் வாடிக்கையாளர் கேட்டபடி கடன் கிடைக்கும்.
சிபில் ஸ்கோர் 650 முதல் 749 வரை இருந்தால் கடன் கிடைக்கும். ஆனால் கூடுதல் வட்டி விதிக்க வாய்ப்பு உள்ளது. 550 -649 இருந்தால் கடன் கிடைக்க வாய்ப்பு குறைவு.
சிபில் ஸ்கோரை கணக்கிடும்போது 3 முக்கியக் காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதில்,‘கடன் திருப்பிச் செலுத்திய வரலாறு’ சிபில் ஸ்கோரில் 35% பங்களிக்கிறது.
முந்தைய கடன்களை சரியானபடி திருப்பிச் செலுத்தினாரா என்றும், கால தாமதம் உண்டா என்பதையும், ஏதாவது கடன் தள்ளுபடி செய்யபட்டுள்ளதா என்பதும் கவனிக்கப்படும்.
இரண்டாவது ‘கடன் பயன்பாடு’. இது, 30% பங்களிக்கிறது. பயன்படுத்திய கடனின் அளவை, கிடைக்கும் மொத்தக் கடன் தொகையுடன் ஒப்பிட்டு, இது கணக்கிடப்படுகிறது.
அதிக கடன் பயன்பாட்டு விகிதம் ஒரு நபர் கடனைச் சார்ந்திருப்பதைக் குறிக்கலாம். அவரது கடனை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போகலாம். இதனால் ஸ்கோர் குறையும்.
மூன்றாவது ‘லோன் என்கொயரி’. ஒரு நபர் கடன் பெறுவதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களை குறுகிய காலத்தில் அணுகினால் அவரது சிபில் ஸ்கோர் குறையும்.