எந்த சுறா ஆட்கொல்லி?

சுறாக்கள் என்றாலே கொடூரமானவை என்று தகவல்கள் உலவுகின்றன. சுறாக்களைப் பற்றி நிலவும் வதந்திகளுக்கான பதில்கள் இங்கே...  

மனிதர்கள் சுறாக்களுக்கான உணவு அல்ல. அவை 99 சதவீதம் மீன்கள், கணவாய் மீன்கள், முதுகெலும்பு இல்லாத மெல்லுடலிகள் ஆகியவற்றை உண்ணும்.  

பெரிய உடல் கொண்ட திமிங்கிலச் சுறா (Whale shark) போன்றவை கடலில் மிதக்கும் அழுகிய, அழுகாத இறந்துபோன மீன்கள், திமிங்கிலங்களை உண்ணும்.

தெரியாமல் விபத்துபோல மனித ரத்தத்தைச் சுவைத்து, பின்பு ஆட்கொல்லியாகும் தன்மை எல்லா விலங்குகளைப் போலவே சுறாக்களுக்கும் உண்டு.   

ஒருவர் தண்ணீரில் நீந்தும்போது, மற்ற மீன்களைப் போலத்தான் சுறாக்களும் அவரைக் கடந்து செல்கின்றன. சில நேரங்களில் பயத்தினால் சுறாக்கள் தாக்க வாய்ப்பு உண்டு.  

சினிமாக்களில் காட்டுவதுபோல அனைத்துச் சுறா வகைகளும் பிரம்மாண்டமாகவும், வாய் முழுவதும் கூரிய கோரைப் பற்கள் கொண்டவையும் அல்ல

உலகில் உள்ள சுமார் 400 சுறா வகைகளில் நான்கு அங்குல நீளம் கொண்ட நாய்ச் சுறாவும் உண்டு; 40 அடி நீளமுள்ள திமிங்கிலச் சுறாவும் உண்டு.  

பாஸ்கிங் சுறாவுக்கு (Basking shark) சொற்ப எண்ணிக்கையில் மிகச் சிறிய பற்களே இருக்கின்றன. சாப்பிடும்போதுகூட அது பற்களைப் பயன்படுத்துவது இல்லை.  

பயந்த சுபாவம் கொண்ட கொம்பன் சுறாவுக்கு (Horn shark) பால் பற்கள் எனப்படும் முளைப் பற்கள் மட்டுமே உண்டு.

இயல்பிலேயே மெதுவாக வளர்ச்சியடையும் தன்மை கொண்ட இவை, இனப்பெருக்கத்துக்குரிய வயதை அடையவே பல ஆண்டுகளாகும்.  

கடலின் சுற்றுச்சூழலில் சுறாக்களின் பங்கு அதிகம். தேவை இல்லாத இறந்த உயிரினங்களின் உடல்களைச் சாப்பிடுவதன் மூலம், கடலின் தூய்மையை அவை காக்கின்றன.   

குறிப்பிட்ட கடல் உயிரினங்கள் அதிகளவில் பெருகினால் மற்ற உயிரினங்கள் அழிந்து போகும். அவற்றைச் சுறாக்கள் இரையாக்குவதால், உணவுச் சங்கிலி சமநிலையில் பராமரிக்கப்படுகிறது.  

பெரும்பாலான சுறா வகைகள், வணிக ரீதியில் முக்கியத்துவமற்ற மீன்களையே சாப்பிடுகின்றன என்பதால், நாம் சாப்பிடும் கடல் மீன் வளம் காக்கப்படுகிறது.  |  தொகுப்பு: டி.எல்.சஞ்சீவி குமார்

Web Stories

மேலும் படிக்க...