ஞாபக மறதி நோயை வெல்லும் 8 கட்டளைகள்
வயதானவர்களுக்கு ஏற்படும் மூளை சார்ந்த நோய்களில், மூளைத் தேய்மானம் அல்லது ஞாபக மறதி நோய் என்றழைக்கப்படும் அல்சைமரும் ஒன்று.
வயதானவர்களின் ஞாபகத் திறனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும்கூட மறக்க வைக்கும் அளவுக்கு விபரீதமான நோய் அல்சைமர்.
65 வயது தாண்டியவர்களை இந்நோய் அதிகம் பாதிக்கிறது. இந்நோய் ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான சில கட்டளைகளைப் பார்ப்போம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தால், அதற்கு தகுந்த சிகிச்சையைத் தவறாமல் பெற வேண்டும்.
தலைக்காயம் ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம். எனவே, இருசக்கர வாகங்களை இயக்கும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
விளையாட்டுகளில் ஈடுபடுவது, தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வது ஞாபக மறதி நோய் ஏற்படுவதைக் குறைக்கும்.
இதய சுருக்க ரத்த அழுத்த (Systolic blood pressure) அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும்.
ரத்தத்தில் குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதத்தின் (எல்டிஎல்) அளவு அதிகமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதுப் பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அதிகம் மது குடிப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.
வீடுகளில் மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதன் மூலம் சமூக தனிமைப்படுத்தலை குறைத்துக் கொள்ள வேண்டும். | தொகுப்பு: எம்.ஏ. அலீம்