இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
முதுமையில் பலரது ஆரோக்கியப் பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. 60 வயதுக்குப் பிறகு தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான்.
வயதான காலத்தில் தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுகிறார் என்பதுதான் முக்கியம்.
ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.
முதுமை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை.
பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.
தூக்கம் குறையும்போது உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவுக்குத் தூங்காதவர்களுக்கு ஞாபக மறதி வந்துவிடுகிறது.
மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
‘இனி உடற்பயிற்சி தேவையில்லை’ என நினைத்து முதுமையில் பலரும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது தூக்கமின்மையை கொடுக்கிறது.
மாலையில் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே விழிக்கிற பழக்கம் நல்ல தூக்கத்துக்கு வழிகொடுக்கும்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துக்கொண்டால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு காபி, தேநீர், குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம்.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பழக்கத்துக்கு விடை கொடுப்பது மிகவும் நல்லது. | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்