உடல் பருமன் தடுக்க உதவும் உணவு முறை!
உடல் எடையைக் குறைக்கிறேன் எனப் பலரும் காலையில் சிற்றுண்டியைத் தவிர்க்கிறார்கள். இது தவறு. இதனால் மதிய உணவு அதிகமாகிவிடும்.
காலையில் எழுந்ததும் காபி, தேநீருக்கு கிரீன் டீ அல்லது லெமன் டீ குடிக்கலாம். டிஃபனுக்குக் கேழ்வரகு இட்லி, இடியாப்பம், புட்டு, உப்புமா, மிளகுத் திணை பொங்கல் சாப்பிடலாம்.
தேங்காய்ச் சட்னிக்குப் பதிலாக, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெண்டைக்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம்.
நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், பரோட்டா, எண்ணெயுடன் இட்லி பொடி காலை உணவில் வேண்டவே வேண்டாம்.
கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த தயிர், நெய், வெண்ணெய், சீஸ், இனிப்பு, பேக்கரிப் பண்டங்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள்.
மாலை சிற்றுண்டிக்கு வடை, பஜ்ஜி, போண்டா, பீட்சா, பர்கர், சேவு, சிப்ஸ், பப்ஸ், லேஸ், முறுக்கு, மிக்சர், கார வகைகள், விதவிதமான ரொட்டிகள் சாப்பிடக் கூடாது.
மாலை சிற்றுண்டிக்கு வேர்க்கடலை, எள்ளுருண்டை, கடலை உருண்டை, பொரிகடலை, சுண்டல், முளைகட்டிய பயறு, காய்கறி கட்லெட், பழச் சாலட் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.
மாலையில் பழச்சாறு / காய்கறி சூப் சாப்பிடுங்கள். ஐஸ்கிரீம், மில்க் ஷேக், கோக், குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம்.
பரோட்டா, நூடுல்ஸ், ருமாலி ரொட்டி, ஃபிரைடு ரைஸ், நாண், பட்டர் நாண், பேல் பூரி, பானி பூரி போன்ற ஹோட்டல் உணவு வகைகளில் கலோரி மிக அதிகம். இவற்றைத் தவிர்ப்பீர்.
கலோரி குறைந்த கீரைகள், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு நல்லது.
கிழங்குகள், மா, வாழை, பலா, சீத்தா, அத்தி, திராட்சை, சப்போட்டா ஆகியவற்றில் கலோரி அதிகம். ஆகவே, இவற்றைத் தவிருங்கள்.
கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
விரதம் வேண்டாம்; அடிக்கடி விருந்து, ஹோட்டலுக்கும் செல்லாதீ. டிவி, மொபைல் பார்த்தபடி சாப்பிடுவதைத் தவிர்ப்பீர். மது அருந்தாதீர்கள். | தகவல்கள்: மருத்துவர் கு.கணேசன்