water is enough for Thirst
water is enough for Thirst

தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்தால் போதுமா?

Updated on
3 min read

‘தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்பது தண்ணீர் குடிப்பதற்கான விதிமுறை என்று நினைப்பது சரியான அணுகுமுறையா?

வெளிவெப்பத்தைச் சமாளிக்கச் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது உடலுக்கு அவசியமாகிறது. அதற்கான வழிமுறைதான், உடல் வெளிப்படுத்தும் வியர்வை.

சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உடல், வியர்வையை வெளித் தள்ளிக்கொண்டே இருக்கும். அது உடலின் வெப்பநிலை அதிகமாகாமல் தடுத்து சமநிலையில் வைத்திருக்க உதவும்.

கோடையில் உடலில் நீர் குறையக்குறைய உடல் உள் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும், உடல் வியர்வையை வெளிப்படுத்த வேண்டிய வேலைக்கும் - தேவைக்கும், ‘தண்ணீர்ப் பஞ்சம்’ ஏற்படும்.

தாகம் என்பது உடலின் தண்ணீர்த் தேவைக்கான, முதல் அறிவிப்பு அல்ல; தாகம், உடலில் ஓர் அளவிற்குக் கீழ் தண்ணீர் குறையும் நிலையில் உடல் அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி.

தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் குடிக்கும்பொழுது, உடலின் தண்ணீர்த் தேவையைச் சரிக்கட்ட மிக அதிக அளவு தண்ணீர் ஒரே சந்தர்ப்பத்தில் அல்லது குறைவான நேரத்தில் குடிக்க நேரிடும்.

அதற்கு பதிலாக நேரடியாகத் தண்ணீரோ அல்லது வேறு நீர் ஆகாரமோ குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அருந்திவருவது உடல் நலத்துக்கு நல்லது.

மேலும் ‘தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்பது’ எனும் கொள்கையை வைத்துக்கொண்டால், தாகம் எடுக்கும்போது தண்ணீர் கிடைக்காத சூழலில் நாம் அவதிப்பட நேரிடலாம்.

பொதுவாகத் தண்ணீர் குறைவாக அருந்துவது சிறுநீரகக் கற்கள் உருவாவதை ஊக்குவிப்பதாக மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது.

கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தினால், உடல் தண்ணீரின்றி வறண்டு போகும்பொழுது வாந்தி வரும் உணர்வு, வாய் வறட்சி, தலைவலி, தலைச்சுற்றல், உடல் பலவீனம், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

தசைப்பிடிப்பு, இதயப் படபடப்பு, வேகமாக மூச்சுவிடுதல், சிறுநீர் உற்பத்தி குறைதல் போன்ற உடல் அறிகுறிகள் அதிகரித்து உடல் வியர்க்காத நிலை, நினைவு தவறுதல், மறதி, மயக்கம், வலிப்பிலும் முடியலாம்.

வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கத் தண்ணீரும் இதர நீர் ஆகாரமுமே உதவும். மோர், இளநீர், பழச்சாறு போன்றவை இதர நீர் ஆகாரங்களில் அடங்கும்.

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், முள்ளங்கி, நூல்கோல் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, திராட்சை, தர்ப்பூசணி போன்ற பழங்களையும் அவ்வப்போது உண்பதும் பலன் அளிக்கும்.

தேநீர், காபி, மது, குளிர்பானங்கள், புகைபிடித்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை உடலில் நீர் இழப்பைத் தூண்டும்.

உடலின் அனைத்து உறுப்புகளும் தடையின்றித் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறைவேற்ற, குறைந்தபட்சம் அரை மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது.

குளிர்பதனப் பெட்டியிலிருந்து சில்லென்ற தண்ணீரை அப்படியே குடிப்பது தாகத்தை உடனே தீர்ப்பது போலிருக்கும். ஆனால், இதில் குறைந்த அளவு தண்ணீர் குடித்தாலே தாகம் தணிந்துவிடும்.

ஐஸ் தண்ணீர் குடிப்பவர்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல், தவறவிடும் சாத்தியம் அதிகம். எனவே, குளிர்ச்சியான தண்ணீர் அருந்துவதைத் தவிர்ப்பதே நல்லது. - செ.கீர்த்தனா | கட்டுரையாளர், உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in