போர்ச் சேவல்கள் - ‘அரிய’ தகவல்கள் அறிக!

உருவ அமைப்புகளை மையப்படுத்தி போர்ச் சேவல்களில் என்ன என்ன பிரிவுகள் உள்ளன என்பதையும், ஒரு நல்ல சேவலின் (வெற்போர் சேவல்) தோற்றம் குறித்துப் பார்க்கலாம்.

உயரமாக, விரிந்த மார்புடன், நீண்ட கழுத்துடன் இறகுப் பகுதியில் சதைப்பற்று இல்லாமல், முதுகுப் பகுதி விரிந்து வால் பகுதி வரும்போது குறுகியும் இறுக்கமான உடலமைப்புடன் இருக்கும்.

தாடைக்குக் கீழ் முடி இருந்தால் அதை ‘கல்வா’ அல்லது ‘கூவத்தாடிச் சேவல்’. சேவல்கள் தலையில் உள்ள பூவை வைத்தும் மத்திப்பூ, படிடாக்கொண்டை, உச்சிப்பூ என்றும் வகை பிரிப்பார்கள்.

அளவில் பெரிய பூ உள்ள சேவல்களைப் போர்களுக்கு உகந்ததாகச் சிலர் கருதுவது இல்லை. காரணம், எதிர்சேவல் பிடிப்பதற்குப் பெரிய பூ ஏதுவாக அமைந்துவிடும்.

சேவல்களின் கால்களை அடிப்படையாகக் கொண்டு பிரம்புக் கால், ஈச்சங் கால், செறிக் கால், பச்சைக் கால் என்றும் பிரிப்பார்கள்.

வால் மேல்நோக்கி இருந்தால் அது தூக்குவால், அதுவே கீழ்நோக்கி இருந்தால் குத்துவால் . இந்தக் குத்துவால் அமைப்புடைய சேவல்கள் பறந்து தரை இறங்குவதற்குக் கச்சிதமானவை.

கழுத்து எலும்பு, கூடுமானவரை தடிமனாக இருப்பது நல்லது. மெல்லிதாக இருப்பதைச் ‘சாரக்கழுத்து’ என்று அழைப்பார்கள். அவை நல்ல சேவல்கள் என்று கருதப்படுவது இல்லை.

தமிழக வெத்துக்கால் சேவல்களைவிட, வட இந்தியச் சேவல்கள் சதைப்பற்று இருந்தாலும் நன்கு செதுக்கப்பட்டது போன்ற உடல்வாகு அவற்றுக்கு இல்லை.

வெற்போர் சேவல்கள் கால்களில் முள் வளரக்கூடிய இயல்புடையவை. இந்த முள்தான் தாக்குவதற்கான ஆயுதம். அடியைத் தாங்குவதற்கு தன் உடலைத் தயார் செய்வது அவசியம்.

சேவல்களுக்கு நல்ல உணவும் பயிற்சியும் அவசியம். சாதாரண நாட்களில் கேழ்வரகு, கம்பு, கோதுமை, சோளம் போன்ற உணவு இவ்வகைச் சேவல்களுக்கு வழங்கப்படும்.

நான்கு மாதத்துக்குப் பின்னர் சேவல்களைத் தனியாகப் பிரித்தெடுக்கின்றனர். இல்லையென்றால் அவை தன்னுடன் இருக்கும் சேவல்களுடனே ஆதிக்க எண்ணம் காரணமாகச் சண்டையிடும்.

அப்போது இருந்தே நீச்சலுக்கு விடப்பட்டுப் பயிற்சி அளிக்கப்படும். ஏழு மாதங்களுக்கு பிறகு ‘தப்பினி’ விடப்படும். தப்பினி என்பது முதல்முறையாகச் சேவல்களைச் சண்டைக்கு விடுவது.

தினமும் ஒரு மணி நேரம் சேவல்களின் உடலை நீவித்தேய்த்து வலுவடையச் செய்வதற்குச் செலவிடுகின்றனர்.

சிறிது தண்ணீரை எடுத்து கழுத்து, நெஞ்சு, தாடை, தலை இறக்கை என்று அத்துணை இடத்திலும் பல முறை நீவி விடுவார்கள்.

பல நாள் பயிற்சிக்குப் பின்னர் அந்த இடம் வலுவடைகிறது. இது போக தினமும் முப்பது நிமிட நடைப் பயிற்சியும் வழங்கப்படும்.

சண்டைச் சேவல்கள் பெரும்பாலும் வளர்ப்பவர்களின் மூர்க்கத்தினையும், குணங்களையுமே் பிரதிபலிக்கும். | ஆக்கம்: இரா.சிவசித்து

Web Stories

மேலும் படிக்க...