பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி?
தவெக முதல் செயல்வீரர்கள் கூட்டம் சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜூனா, நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “சென்னையை திமுக கோட்டை என்பார்கள். அதனால் எம்ஜிஆர், ஜெயலலிதா கூட சென்னையில் அதிகம் நின்றதில்லை. ஆனால் இன்றிலிருந்து சென்னையில் தவெகதான். விஜய் பெரம்பூரில் நிற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். கொளத்தூர், ஆர்.கே நகர் உள்ளிட்ட தொகுதியிலும் அவர் போட்டியிட விரும்பலாம். வட சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்கத்தான் விஜய் விரும்புவார்.
வட சென்னையில் சேகர்பாபு இருப்பதாக கூறுவார்கள். ஆனால் அவர் படிச்ச ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர் நம்ம கூட இருக்கும் வி.எஸ்.பாபு” என்றார் ஆதவ் அர்ஜூனா. பிறகு பேசிய ஆனந்த், “பெரம்பூரில் விஜய் போட்டியிட வேண்டுமென்ற தீர்மானத்தை வரவேற்கிறோம். உங்கள் விருப்பத்தை தலைவரிடம் சொல்ல போகிறேன். சென்னையில் உள்ள 16 தொகுதியும் விஜய் கோட்டையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரம்பூர் தொகுதி ராசியான தொகுதி என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.