சிங்காநல்லூர் தொகுதியில் சீறப் போவது யார்?

கோவை சிங்காநல்லூர் தொகுதி மாநகராட்சியின் 18 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இத்தொகுதியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், லேத் பட்டறைகள், பவுண்டரிகள், உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள், கிரைண்டர், மோட்டார் பம்பு செட் தயாரிப்பு நிறுவனங்கள், நூல் மில்கள், டைடல் பார்க் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை உள்ளன.

இங்கு பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பீளமேடு, ஹோப்காலேஜ், வரதராஜபுரம், உப்பிலிபாளையம், ஆவாரம் பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், நீலிக்கோணாம் பாளையம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், நவஇந்தியா உள்ளிட்ட மாநகரின் முக்கிய இடங்கள் இத்தொகுதியில் உள்ளன.

முழுக்க முழுக்க மாநகராட்சிப் பகுதியை மையப்படுத்தி அமைந்துள்ள இத்தொகுதியில் நகரின் முக்கிய பேருந்து நிலையமான சிங்காநல்லூர் புறநகர் பேருந்து நிலையம் உள்ளது. தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி. நாயுடு, கவுண்டர், செட்டியார், முக்குலத்தோர், பிராமணர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் சமூக மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.

1967-ம் ஆண்டு முதல் இத்தொகுதியில் 13 முறை சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. அதில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தலா 4 முறை வெற்றி பெற்றுள்ளன. பிரஜா சோசலிச கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ராசி இல்லாத தொகுதிகளில் இத்தொகுதி முக்கியமானது. 1967, 1984, 1989, 2011 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வி.கே.எல். கவுண்டர், ஏ.சுப்பிரமணியம், பி.எல்.சுப்பையா, மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நேரடியாக இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

திமுக மற்றும் அதிமுக நேருக்கு நேர் மோதிய தேர்தல்களில் கடைசி சுற்றுவரை பரபரப்பு இருந்துள்ளது. உதாரணத்துக்கு, கடந்த 2006-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.சின்னசாமி, மா.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செளந்தரராஜனை 14 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கடந்த 2021 தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட்டது. அப்போது திமுக வேட்பாளராக எம்.எல்.ஏ. நா.கார்த்திக், அதிமுக சார்பில் கே.ஆர்.ஜெயராம் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அதிமுகவின் ஜெயராம் 10,854 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திமுக மற்றும் அதிமுக சரிசமமாக வெற்றி பெற்றுள்ள இத்தொகுதியில், நடப்புத் தேர்தலில் திமுக நேரடியாக களம் இறங்கவில்லை.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக புதுமுகம் நிதி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மீண்டும் போட்டியிடுகிறார். தவெக சார்பில் கிரிபிரசாத், நாதக சார்பில் நேருஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், இத்தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதுமே உள்ளூர் திமுகவினர் ஏமாற்ற மடைந்தனர்.

இருப்பினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் வேட்பாளருடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்த சில நிமிடங்களிலேயே அவரை மாற்ற வலியுறுத்தி காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், காங்கிரஸ் தலைமை கண்டுகொள்ளவில்லை.

சிங்காநல்லூர் தொகுதியில் வென்ற முதல் காங்கிரஸ் வேட்பாளர் என்ற சாதனையை படைக்க வேட்பாளர் நிதி, கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதேநேரத்தில், தொடர்ந்து 2-வது முறையாக சிங்காநல்லூரை கைப்பற்றும் முனைப்பில் அதிமுகவின் கே.ஆர்.ஜெயராம் களப் பணியாற்றி வருகிறார்.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 130529

  • பெண் - 139388

  • 3-ம் பாலினத்​தவர் - 24

  • மொத்த வாக்​காளர்கள் - 269941

சிங்காநல்லூர் தொகுதியில் சீறப் போவது யார்?
தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in