கோபிசெட்டிபாளையம் தொகுதியில் கோலோச்சுவது யார்?

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் களம் காணும் நிலையில் இந்த தொகுதியின் தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 106-வது இடத்தில் உள்ளது கோபிசெட்டிபாளையம் தொகுதி. கொடிவேரி அணை, வயல்வெளிகள், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் என இயற்கை செழிப்போடு கோபி தொகுதி விளங்குகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி வாய்க்கால் பாசன வாய்க்காலின் மூலம் தொகுதியின் பெரும்பாலான விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

நெல், கரும்பு என பணப்பயிர்கள் விளைவதால், இத்தொகுதி வளமான தொகுதியாகவே இருந்து வருகிறது. கோபி நகராட்சி, கோபி, நம்பியூர் ஊராட்சி ஒன்றியங்கள், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் சில பகுதிகள், எலத்தூர், கொளப்பலூர், நம்பியூர், பெரியகொடிவேரி, லக்கம்பட்டி, காசிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளை கோபி தொகுதி உள்ளடக்கியுள்ளது. கொங்கு வேளாளக் கவுண்டர், பட்டியல் வகுப்பினர், நாடார், முதலியார், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் இத்தொகுதியில் உள்ளனர்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

கோபி அரசு மருத்துவமனை மேம்பாடு, கொடிவேரி தடுப்பணைச் சுற்றுலா மேம்பாடு, புதை சாக்கடைத் திட்டம், போக்குவரத்து மேம்பாடு, நெல் மற்றும் மஞ்சள் மதிப்புக்கூட்டு ஆலை உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

விவசாயத்துக்கு நீராதாரமாக இருக்கும் கூகலூர் வாய்க்கால், நகரத்துக் கழிவுநீர் கலந்து சாக்கடையாக ஓடுவதால் பயிர்கள் பாழ்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கோபி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகம் நகராட்சி குப்பைகளைத் தரம் பிரிக்கும் மையமாகவும், தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் இருப்பது வாக்காளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த கால தேர்தல் முடிவுகள்

இந்த தொகுதியில் அதிமுக தொடங்கிய பிறகு 1977 முதல் 2021 வரை நடந்த 11 தேர்தல்களில் 10 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது. ஒருமுறை மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் கே.ஏ.செங்கோட்டையன் 8 முறை வெற்றி பெற்றுள்ளார். 1957 முதல் 2021 வரை 16 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 3 முறை, சுதந்திரா கட்சி 1 முறை, திமுக 2 முறை, அதிமுக 10 முறை வெற்றிபெற்றுள்ளது.

களம் காணும் வேட்பாளர்கள்

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் திமுக சார்பில் என்.நல்லசிவம், அதிமுக சார்பில் வி.பி.பிரபு, நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி, தவெக சார்பில் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பேட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் போட்டியிகிறார். இவர் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறார். செங்கோட்டையன் பிரிக்கும் அதிமுக வாங்கு வங்கி, காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கணிசமான வாக்குகளை ஒருங்கிணைப்பது, திமுகவினரை அரவணைத்துச் செல்வது மூலம், 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதியில் திமுக வெற்றிபெற்றது என்ற வரலாற்றை உருவாக்க பாடுபடுகிறார்.

அதிமுக சார்பில் புதுமுகம் வி.பி.பிரபு களம் காண்கிறார். 10 முறை அதிமுக வெற்றிபெற்ற இந்த தொகுதியில், செங்கோட்டையன் என்ற ஆளுமையை வீழ்த்தி மீண்டும் அதிமுகவுக்கு வெற்றிக் கனியை 11-வது முறையாக பெற்றுக்கொடுப்பது என்பது பிரபு முன் உள்ள மிகப்பெரிய சவால்.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறியபோது அவருடன் செல்லாமல் கட்சி தான் முக்கியம் என தொடர்ந்து அதிமுகவில் உள்ள தொண்டர்களின் உழைப்பும், இந்த தொகுதிக்கான அதிமுக தலைமையின் தனிப்பட்ட வியூகமும், தேர்தல் களத்தின் சூட்சமங்களை பிரபு அறிந்துகொள்ளும் திறனிலும் தான் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு உள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி கடந்த 2021-ல் நடைபெற்ற தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட்டு 11,719 வாக்குகள் பெற்றார். 2016 முதல் 2021 வரை சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் மொத்தம் 6 முறை போட்டியிட்டுள்ளார்.

விவசாயிகள் நிறைந்த பகுதியில் எளிமையாக பழகும் விதம், 2021 தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் மூலம் தவெக ஆதரவு நிலைப்பாடு கொண்ட வாக்குகளில் சேதத்தை ஏற்படுத்தி செங்கோட்டையனுக்கு சவாலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கிட்டத்தட்ட 46 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு நிலைகளிலும் செங்கோட்டையன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

ஒரு மாத்திற்கு முன்பே விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பை தொடங்கி விட்டார். தேர்தல் நேரத்தில் வாக்குகளை ஈர்க்கும் அனைத்து யுக்திகளையும் நன்கு அறிந்தவர் என்றாலும், இம்முறை அந்த யுக்திகள் பலன் தருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,14,070

  • பெண் - 1,25,096

  • மூன்றாம் பாலினத்தவர் - 13

  • மொத்த வாக்காளர்கள் - 2,39,179

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் கோலோச்சுவது யார்?
தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in