யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? - சீனியர்களுக்கு ராகுல் ‘செக்’

காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி ஆகிறார் கிறிஸ்டோபர் திலக். இவரின் பெயர் அறிவிக்கப்படும் வரை, இப்படியொருவர் காங்கிரஸில் உள்ளார் என்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது. அப்படி ஒரு புதுமுகத்தை அறிவித்து திணறடித்தது காங்கிரஸ். கிறிஸ்துவ பட்​டியலின வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் திருச்​சியை சேர்ந்​தவர். இவரை தேர்வு செய்​தால் தமிழ​கத்​தில் வசிக்​கும் கிறிஸ்​து​வர்​களின் கவன​மும், பட்டியலினத்​தவரின் பார்​வை​யும் காங்​கிரஸின் பக்​கம் திரும்​பும் என ராகுல் கணக்​குப் போட்​டுள்​ளார். இதனால் ராஜ்யசபா சீட்​டுக்கு சீனியர்​களை கடந்து புது​முக​மான கிறிஸ்​டோபர் திலக்​கின் பெயரை டிக் அடித்​திருக்​கி​றார் ராகுல் காந்​தி.

அண்மைக் கால​மாக டெல்​லியை மைய​மாக வைத்து வட இந்​திய மாநிலங்​களில் சுற்றி வரும் கிறிஸ்​டோபர் திலக், தமிழக காங்கிரஸிலும் கள அளவில் பணி​யாற்​றிய​வர். இளங்​கலை பொறி​யியலும், முதுகலை மேலாண்மை படிப்பும் படித்த இவர், தனி​யார் நிறு​வனத்​தில் பணியாற்றினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்​ன‌ர் காங்கிரஸில் இணைந்த இவர், அக்​கட்​சி​யின் இளைஞர் பிரி​வு, எஸ்​சி, எஸ்டி பிரிவு ஆகிய​வற்​றில் பணியாற்றி​னார். பின்​னர் காங்​கிரஸின் செய​லா​ள​ராக உயர்ந்து பல மாநிலங்​களில் மேலிடப் பொறுப்​பாள​ராக இருந்​தார்.

மணிப்​பூர், நாகாலாந்து உள்​ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் மேலிட பொறுப்​பாள​ராக இருக்​கும் இவர், ராகுல் காந்​தி​யின் நம்​பிக்​கையை பெற்​றிருந்​தார். இதற்கு முன்​னர் ஆந்​திர தேர்​தலின்​போது மேலிடப் பொறுப்பாளராக இருந்தபோது, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதி​ராக அவரது தங்கை ஷர்​மிளா ரெட்​டியை முன்​னிறுத்​தி, காங்​கிரஸுக்கு கை கொடுத்​தார். அதனால் ஆந்​தி​ராவை சேர்ந்த கே.​ராஜூவின் நம்​பிக்​கையை பெற்று, ராகுல் காந்​திக்​கும் நெருக்​க​மான​வ​ராக‌ மாறினார்.

கிறிஸ்​டோபர் திலக் தமி​ழ​கத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்​தி​ரா, மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநில தேர்தல்​களி​லும் தீவிர‌ களப் பணி மேற்​கொண்​ட​தால் காங்கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்ஜுன கார்​கே, கே.சி.வேணுகோ​பால் வரை எல்லா தலை​வர்​களுக்​கும் பரிச்சய​மான​வர். ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் தேசிய அளவில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தியது ஆகியவற்றில் கிறிஸ்டோபர் திலக் முக்கிய பங்காற்றியவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

திமுக ஒதுக்கிய ஒரு ராஜ்ய சபா சீட்டை கைப்​பற்ற தமிழக காங்​கிரஸின் மூத்த‌ தலை​வர்​களான‌ கே.எஸ்​.அழ​கிரி, தங்க​பாலு, திருநாவுகரசர், சுதர்ன நாச்​சி​யப்​பன், ஜெயகுமார் உள்​ளிட்​டோர் நேரடி​யாகவே களமிறங்​கினர். காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்கே மூலம் வேகவேக​மாக காய்​களை அவர்கள் நகர்த்​தினர். ஆனால் காங்​கிரஸின் இளந்​தலை​வர் ராகுல் காந்​தி, சீனியர்​களுக்கு பதிலாக‌ அடுத்த தலை​முறை​யினருக்கு வாய்ப்பு வழங்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருந்தார். அதன்படி கிறிஸ்டோபர் திலக் டிக் செய்யப்பட்டார்.

கிறிஸ்டோபர் திலக் தேர்ந்தெடுக்கப்பட்டதில் சீனியர்களுக்கு பெரும் அதிருப்திதான் என்றாலும், இனி இப்படித்தான் நடக்கும் என்ற மெசேஜும் அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. இதேபோன்ற அதிர்ச்சி வைத்தியம் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் இருக்கும் என்ற தகவலும் வெளியாகி ‘சீனியர்களுக்கு’ கிலியை உருவாக்கியுள்ளது.

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? - சீனியர்களுக்கு ராகுல் ‘செக்’
ஈரான் போரும் ‘நிதான’ இந்தியாவும் - 5 காரணங்கள்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in