மயிலம் தொகுதியில் மலரப் போவது யார்?
ஆன்மிகத்தில் ‘மயூராசலம்’, ‘மயில மலை’ என அழைக்கப்பட்ட, தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற திருத்தலத்தை கொண்ட தொகுதி.. சிறப்புமிக்க இந்த மயிலத்தை தலைமை யாகக் கொண்டு தமிழக சட்டப்பேரவைக்கு 2008-ல் புதிய தொகுதி உருவானது. நீர் மேலாண்மைக்கு சான்றாக, முன்னாள் முதல்வர் காமராஜரின் ஆட்சியில் கடந்த 1959-ல் கட்டப்பட்ட வீடூர் அணை இந்தத் தொகுதியில் உள்ளது.
மயிலம், வல்லம் மற்றும் மரக்காணம் (பகுதி) ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மயிலம் தொகுதியானது முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த தொகுதி. விவசாயமே பிரதானம். சங்கராபரணி ஆறு, தொண்டியாறு மற்றும் வராக நதி இங்குள்ளன.
தொகுதி சீரமைப்புக்குப் பிறகு, ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி முதல் முறையாக 2011-ல் தேர்தலை சந்தித்தது. மூன்று தேர்தல்களில் அதிமுக, திமுக, பாமக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 2011-ல் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக வேட்பாளர் பிரகாஷை அதிமுக வேட்பாளர் நாகராஜன் வீழ்த்தினார்.
2016-ல் அதிமுக வேட்பாளர் அண்ணாதுரையை திமுக வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி வீழ்த்தினார். தனித்துப் போட்டியிட்ட பாமக 3-வது இடத்தை பிடித்தது. இரு தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த பாமக, 2021-ல் வெற்றி வாகை சூடியது. திமுக வேட்பாளர் மாசிலாமணியை பாமக வேட்பாளர் சிவக்குமார் வீழ்த்தினார்.
2026 தேர்தல் களம் மாறுப்பட்டு காணப்படுகிறது. 2011-ல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்று, அதிமுகவுடன் மோதுகிறது. விழுப்புரத்தில் இருமுறை வெற்றி பெற்று, தனது அரசியல் எதிரியான லட்சுமணனிடம் வீழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், இம்முறை பாதுகாப்பு கருதி, தனது சொந்த தொகுதியில் களம் காண்கிறார்.
இவரது வருகைக்காக, பாமக சிட்டிங் எம்எல்ஏ சிவக்குமார், “தனது சொந்த தொகுதிக்கு செல்கிறேன்” என கூறி, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டார். இவர், மயிலம் தொகுதியில் நியாய விலை கடை, பேருந்து நிறுத்தம், ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்தி இருக்கிறார்.
அதேநேரத்தில் வளர்ச்சிக்கு முனைப்பு காட்ட வில்லை என்ற அதிருப்தி மக்களிடம் உள்ளன. அதிமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகத்தை எதிர்த்து, தேமுதிக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
இவர், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தபோது, 2011-ல் திருக்கோவிலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர். இம்முறை, திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றுவிட வேண்டும் என முயற்சித்தும் பலனில்லை.
திமுகவில் உள்ளடி வேலைகளுக்கு பஞ்சம் இல்லாத தொகுதியாக கருதப்படும் மயிலம் தொகுதியை, தேமுதிகவுக்கு கூட்டணி தலைமை ஒதுக்கியிருக்கிறது. ‘எங்கு களம் கண்டாலும் கேப்டன் ஆசி இருக்கிறது’ என்ற நம்பிக்கையுடன் எல்.வெங்கடேசன் போட்டியிடுகிறார். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தை எதிர்த்து, நாயுடு சமூகத்தைச் சேர்ந்த எல்.வெங்கடேசன் போராடுகிறார்.
நீண்ட கால கோரிக்கைகள்
மயிலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும். கூட்டேரிப்பட்டு, தீவனூரில் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். சவுக்கு அதிகம் சாகுபடி செய்வதால், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெற காகித தொழிற்சாலை உருவாக்கப்படும். மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ தொடங்க வேண்டும்.
வல்லத்தில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். கூட்டேரிப்பட்டில் தீயணைப்பு நிலையம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தொடங்க வேண்டும். மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
மயிலம் தொகுதியில் அரசு மருத்துவமனை உருவாக்க வேண்டும். சங்கராபரணி, தொண்டியாறு, வராக நதியில் தடுப்பணைகளை அதிகளவில் கட்ட வேண்டும். ஆறுகள் உட்பட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ள மயிலத்தில் பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப போதிய எண்ணிக்கை யில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, தாமதமின்றி திறக்க வேண்டும். ஆலகிராமம் - புத்தூர் கிராமம் இடையே தொண்டியாற்றில் உயர்மட்ட பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும்.
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நெடி கிராமத்தில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும். நெடி - மோழியனூர், எடப்பாளையம் - சின்னநெற்குணம், பெலாக்குப்பம் - வேம்பூண்டி உட்பட அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை பிரிக்க வேண்டும். வல்லம் ஒன்றியத்தில் பூட்டிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க வேண்டும்.
நெடி மோழியனூரில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும். பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தில் உள்ள உணவு பூங்காவை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வீடூர் அணையை பாராமரித்து சுற்றுலா தளமாக உருவாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
3 ஆண்டுகளாக முகாம்
மயிலம் தொகுதியை குறிவைத்து, கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் கள கட்டமைப்புகளை சி.வி.சண்முகம், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உருவாக்கி வைத்துள்ளனர். தொகுதிக்கு புதியவர் என்றாலும், மாநிலங்களை உறுப்பினர் நிதி மற்றும் சொந்த நிதியின் மூலம் இப்பகுதி மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரது பிரச்சாரம் கூடுதல் பலம் சேர்க்கும். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அறிவிப்புகளை தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார்.
மயிலம் தொகுதிக்கு புதியவர் என்றாலும் திமுக, விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி தேமுதிக வேட்பாளர் எல்.வெங்கடேசன் பிரச்சாரம் செய்கிறார். முதல்வர் ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோரது பிரச்சாரங்கள், தனக்கு கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் உள்ளது.
திமுக மற்றும் தேமுதிக தேர்தல் அறிக்கையை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார். குறிப்பாக, ‘குடும்பத்துக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்’ என்ற திமுகவின் பிரதான தேர்தல் அறிக்கையை இவரும் பிரச்சார களத்தில் முன்வைக்கிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் விக்ரம், தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் தேர்தல் அறிக்கையை முன்னிலைப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
‘இலவசங்களுக்கு முற்றுப்புள்ளி, ஆடு, மாடு மேய்த்தாலும், விவசாய பணிகள் மேற்கொண்டாலும் அதை பிரதான தொழிலாக கொள்ளும் வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, விவசாய மேம்பாடு, தரமான கல்வி மற்றும் சுகாதாரம், ஊழலற்ற நேர்மையான மக்கள் பணி மற்றும் உள்ளூர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை’ என தேர்தல் களத்தில் சுழன்று வருகிறார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வருகைக்காக இக்கட்சியின் காத்திருக்கின்றனர். ‘கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக, ஊழல் கட்சி அதிமுக’ என்ற முழக்கத்துடன் தேர்தல் களத்தை முதன் முறையாக சந்திக்கும் தவெக சார்பில் விஜய் நிரஞ்சன் போட்டியிடுகிறார்.
பயிர்க் கடன் ரத்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள், தரமான கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதி உள்ளிட்ட விஜயின் வாக்குறுதிகளை எடுத்து கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்.
திரை நட்சத்திரத்தில் இருந்து இளம் அரசியல் தலைவர் என்ற புதிய பரிமாணத்துக்கு வந்துள்ள விஜயின் முகத்தை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்யும் வேட்பாளர் நிரஞ்சன், தனது தலைவர் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1,04,048
பெண்கள் - 1,04,949
மூன்றாம் பாலினத்தவர் - 19
மொத்தம் - 2,09,016