2025-ல் தமிழகத்தை அதிரவைத்த சம்பவங்கள் என்னென்ன? - ஒரு விரைவுப் பார்வை

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவரானது ஒரு முக்கியமான அம்சம். கடைசியாக, 1982-87-இல் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் அந்தப் பதவியை அலங்கரித்தது நினைவுகூரத்தக்கது.

சட்டமன்​றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்​பட​வில்லை என்கிற கருத்தை வலியுறுத்தி, அரசு தயாரித்த உரையை வாசிக்​காமல் அவையி​லிருந்து வெளியேறி​னார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்​சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் உன்னிப்​பாகக் கவனிக்​கப்​பட்டது. கெடுவாய்ப்பாக அரசியல் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்​தாகப் பதிவான இந்தச் சம்பவம், அரசியல்​ரீ​தியாக திமுக அரசுக்கும் தவெகவுக்கும் எதிர்​மறையான விமர்​சனங்​களைப் பெற்றுத் தந்தது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்​குமார் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை என்கிற பெயரில் தனிப்படை காவலர்​களால் கொல்லப்​பட்டது காவல் மரணத்தின் கொடூரத்தை மீண்டும் அம்பலப்​படுத்​தியது. இது தமிழக அரசுக்கும் அவப்பெயரைப் பெற்று தந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

சமூக நீதி பேசும் மாநிலம் என்று தமிழகத்தைப் பற்றிய மதிப்பீடு இருந்​தா​லும், ஒவ்வோர் ஆண்டும் நிகழும் சாதி ஆணவக் கொலைகள் அதற்குக் கரும்​புள்​ளி​யாகவே அமைகின்றன.

சென்னையில் மென்பொருள் பொறியாள​ராகப் பணியாற்றிய, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்​கலத்தைச் சேர்ந்த 27 வயது கவின் செல்வகணேஷ் திருநெல்​வேலியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சாதி ஆவணக் கொலை செய்யப்​பட்​டார். சாதி ஆணவக் குற்றங்​களுக்கு எதிராக - வாக்கு அரசியலைத் தாண்டி - அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்னும் குரல்​களும் அழுத்தமாக ஒலிக்கின்றன.

இந்தியாவின் முன்னோடித் திட்டமாக முதலமைச்​சரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக 2022-இல் அறிமுகப்​படுத்​தப்​பட்டு, அடுத்​தடுத்து விரிவாக்கம் செய்யப்​பட்டது. 2025-இல் 2,429 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி​களில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்​பட்டது. ‘தாயு​மானவர்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘அன்புக்​கரங்கள்’ உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் வரிசை கட்டின. தேர்தலை மனதில்​கொண்டு இத்திட்​டங்கள் தொடங்​கப்​படுவதாக எதிர்க்​கட்​சிகள் விமர்​சனங்களை முன்வைத்தன.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் 2023-இல் கைதாகி 471 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, உடனடியாக 2024-இல் அமைச்​சர​வையில் சேர்த்​துக்​கொள்​ளப்​பட்​டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்​றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜிக்குப் பிணை வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்கிற முக்கியமான கேள்வியை நீதிப​திகள் எழுப்​பினர். இதையடுத்து, செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல் மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சர்ச்சைக்​குரிய வகையில் பேசிய விவகாரம் கடும் விமர்​சனத்​துக்கு உள்ளானது. தீவிர எதிர்ப்பை அடுத்து பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை இந்த ஆண்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விவாதப் பொருளாக்கின. அதைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், திமுக அரசியல்​ரீ​தியாக பாஜகவை எதிர்க்க அதைப் பயன்படுத்துவதாக ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தன.

எதிர்க்​கட்​சிகள் ஆளும் மூன்று மாநில முதல்​வர்கள், ஒரு துணை முதல்வர் பங்கேற்ற கூட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கூட்டி​னார். தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என்று இக்கூட்​டத்தில் வலியுறுத்​தப்​பட்டது. என்றாலும் தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடைபெற்​றாலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்​கப்​ப​டாதவாறு நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்தது.

திமுக - பாஜக இடையே இந்தித் திணிப்பு, தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டம் குறித்து இந்த ஆண்டில் அடிக்கடி விவாதங்கள், கருத்து மோதல்கள் நடைபெற்றுக்​கொண்டே இருந்தன. இதன் நீட்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்​டாலின் வெளியிட்ட பட்ஜெட் இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீட்டுக்குப் பதிலாக ‘ரூ’ இடம்பெற்றது.

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், அரிட்​டாப்​பட்​டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்​ப​தற்கு எதிரான போராட்டம் உள்ளிட்டவை அரசியல்ரீதியாகக் கவனிக்​கப்​பட்டன. அரிட்​டாப்​பட்டி சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசு நிறுத்​தியது, மக்கள் போராட்​டத்​துக்குக் கிடைத்த வெற்றியாக அமைந்தது. - டி.கார்த்திக்

2025-ல் தமிழகத்தை அதிரவைத்த சம்பவங்கள் என்னென்ன? - ஒரு விரைவுப் பார்வை
வாக்குறுதி எண் 309... திணறுகிறதா திமுக?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in