மேகேதாட்டு அணையால் சூழலியல் ஆபத்து என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பெங்களூரு நீர்த் தேவைக்காக மேகேதாட்டு அணைத் திட்டம் கர்நாடக அரசால் முன்மொழியப்படுகிறது. காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் அங்கமான மேகேதாட்டு, பிலிகிரி ரங்கன் மலைகள் தேசியப் பூங்கா, மாதேஸ்வரன் மலை காட்டுயிர் சரணாலயம் ஆகியவற்றுக்கு இடையிலான முக்கிய உயிரியல் இணைப்புப் பாதையாகும். புலி, யானை, சிறுத்தை, இந்திய ஓநாய், நீர்நாய் உள்ளிட்ட 10 பெரிய பாலூட்டிகளுக்கும், 252 பறவை இனங்களுக்கும் உகந்த வாழிடமாய் அறியப்படுகிறது.
மேலும், சிவசமுத்திரம் முதல் மேகேதாட்டுப் பகுதி வரை 58 மீன் இனங்கள் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றில் இரண்டு இனங்கள் தீவிர அழிவின் விளிம்பிலும், நான்கு இனங்கள் அழிவு ஆபத்திலும், இரண்டு இனங்கள் அழியும் தறுவாயிலும் உள்ளன. முன்மொழியப்பட்டுள்ள திட்ட அறிக்கைகளின்படி கிட்டத்தட்ட 10,000 மரங்களை வெட்ட வேண்டி இருக்கும். மேலும், காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் 7,800 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பும், 4,500 ஏக்கர் அளவுக்கான காப்புக்காடுகளும் நீரில் மூழ்குவதைத் தவிர்க்க முடியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். மேகதாட்டு அணையால் ஏற்படும் சூழலியல் ஆபத்துகளை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.