தேமுதிக க்ளைமாக்ஸ் தாக்கம்: அதிமுக கூட்டணி, தவெகவுக்கு பாதகம் என்ன?
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, திமுக, என்டிஏ என இரு தரப்பிலும் தேமுதிக சார்பில் பேச்சு நடத்திய நிலையில், தவெக ஆப்ஷனும் அக்கட்சியிடம் இருந்தது. இந்தச் சூழலில்தான் தற்போது திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது தேமுதிக. தேமுதிகவின் வருகை நிச்சயமாக திமுக கூட்டணிக்கு பலம்தான். ஏனென்றால், ஏற்கெனவே வலுவான கூட்டணி இருந்தாலும், ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் தவெகவின் வருகையால் இழக்கப் போகும் வாக்குகளை ஈடு செய்ய புதிய கட்சிகள் தேவை என்று கணக்குப் போடுகிறது திமுக. இது மட்டுமின்றி கூட்டணிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்புகளை தீர்க்கவும் புதிய கட்சிகள் திமுகவுக்கு தேவைப்படுகிறது.
ஒரு கல்லில் பல மாங்காய் என்பதுபோல தேமுதிகவை உள்ளே கொண்டுவந்து காங்கிரஸின் ‘கேட்கும் திறனை’ குறைத்துள்ளது திமுக. அதுபோலவே விசிக, கம்யூனிஸ்டுகள், மய்யம், மதிமுக உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளின் ‘கூடுதல் தொகுதிகள்’ கோரிக்கைக்கும் ‘முடிவுரை’ எழுதியுள்ளது. இதன் மூலமாக கடந்த முறை பெற்ற தொகுதிகளையே இம்முறையும் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கொடுக்கும். புதிதாக வந்துள்ள மய்யத்துக்கு 3 முதல் 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 7 அல்லது 8 தொகுதிகளும் கொடுக்கப்படலாம். ராஜ்ய சபா சீட்டை பிரேமலதா உறுதி செய்துள்ளாரா என்பது விரைவில் தெரிய வரும்.
வெற்றிப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ள திமுக, எந்த எல்லைக்கும் சென்று வாய்ப்புள்ள கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்த்து வருகிறது. ஆனால், ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகளைக் கூட பழனிசாமியால் தக்கவைக்க முடியவில்லை. தொடக்கத்திலிருந்தே தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்க பழனிசாமிக்கு மனது இல்லை. மேலும், தேமுதிக தரப்பில் அதிமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகள் மற்றும் ராஜ்ய சபா சீட் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு கடைசிவரை பழனிசாமி பிடி கொடுக்கவே இல்லை.
10 சதவீதத்தில் இருந்து சுமார் ஒரு சதவீதம் அளவுக்கு தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துப் போயிருந்தாலும், தமிழகத்தில் 20 முதல் 30 தொகுதிகளில் தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. அது நிச்சயமாக என்டிஏவுக்கு பலமாக மாறியிருக்கும். தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக எடுத்த பலகட்ட முயற்சிகளும் பலனளிக்காமல் போனது.
திமுக - தேமுதிக கூட்டணி, அதிமுகவுக்கு மட்டுமல்ல தவெகவுக்கும் நிச்சயம் ஷாக் தான். 234 தொகுதிகளுக்கும் ‘பசையுள்ள’ வேட்பாளர்களை பிடிக்க திணறும் தவெக, கணிசமான தொகுதிகளை தள்ளிவிட கூட்டணிக் கட்சிகளை தேடி வருகிறது. ஏற்கெனவே, தினகரன், அன்புமணி ஆகியோர் எஸ்கேப் ஆன நிலையில், எப்படியும் காங்கிரஸை கொண்டு வரலாம், கூடவே தேமுதிகவையும் கொண்டு வரலாம் என்று நினைத்தார் விஜய். ஆனால், விஜய்யின் ஆசையிலும் இடியை இறக்கிவிட்டது தேமுதிக. இனி காங்கிரஸும் கொடுப்பதை வாங்கிக் கொண்டு திமுகவில் இருக்கும் சூழலே உருவாகும்.
எனவே, தேமுதிகவின் இந்த முடிவால் தவெகவின் கூட்டணிக் கனவும் கிட்டத்திட்ட முடிந்துவிட்டது. அந்த விரக்தியில் தான் தேமுதிக - திமுக கூட்டணியை ‘விஜயகாந்த் மன்னிக்க மாட்டார்’ என புலம்பியுள்ளார் தவெக நிர்வாகி நிர்மல்குமார். மொத்தத்தில் திமுக கூட்டணிக்கு பூஸ்ட் கொடுத்து, அதிமுக கூட்டணிக்கு ‘பை பை’ சொல்லிவிட்டு, கூடவே தவெகவின் கனவுக்கும் ‘எண்டு கார்டு’ போட்டு இந்த நேரத்தில் கேம் சேஞ்சராக மாறியுள்ளார் பிரேமலதா.