‘ஜனநாயகன்’ விஜய்க்கு பேராதரவு - தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் அடித்தளமா?

அரசியல் பிரச்சாரங்களை மிஞ்சுமளவுக்கு விஜய்யின் ‘ஜனநாயகன்’ பிரச்சாரம், தமிழக அரசியலை சுழற்றியடிக்க ஆரம்பித்திருக்கிறது. விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை டிசம்பர் 19-ம் தேதி ஆய்வு செய்த திரைப்பட தணிக்கை வாரிய தேர்வு குழு, சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியது. அதன்பின்னர், யூ/ஏ சான்றிதழ் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பிறகு திடீரென மறுஆய்வு நடைமுறையை மேற்கொண்டு, சான்றிதழ் வழங்கும் செயல்முறையை நிறுத்தியது.

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்காததால் உருவான சர்ச்சை, தமிழக அரசியலில் புதிய அலைகளை கிளப்பியது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ‘ஜனநாயகன்’ விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக-வுடன் தான் கூட்டணி என்று காங்கிரஸ் தலைவர்கள் உறுதிபட கூறி வந்தாலும், தவெகவுடன் கூட்டணி வைத்து, ‘அதிக இடம், ஆட்சியில் பங்கு’ என்ற தமிழக காங்கிரஸின் விருப்பத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளும் மறைமுகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ திரைப்பட சர்ச்சை தொடர்பாக காங்கிரஸார் குரல் கொடுத்து வருவதும், விஜய்க்கு ஆதரவாக நிற்பதும் இதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ தள பதிவில், ‘பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் தவறான பயன்பாடு கவலையளிக்கிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதற்காக ஒரு கலைஞரின் படைப்பை இலக்கு வைத்து தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்பட தணிக்கையில் தலையிடுவதை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலை மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகள் மீது நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, விஜய்யின் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது நியாயமற்றது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைத்து, படைப்புச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். மோடி அவர்களே, உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நடிகர் விஜய்யிடம் அல்ல... அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழகத்தில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று காட்டமாக கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடா மாணிக்கம் தாகூரும் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘அரசியலமைப்புச் சட்டம், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவால் இந்த உரிமைகள் திட்டமிட்டு பலவீனப்படுத் தப்படுகிறது. எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கான முன்னணி அமைப்புகளாக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. இப்போது தணிக்கை வாரியம் கூட சினிமா மற்றும் கருத்துகளைக் கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாகத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளன, அதேசமயம், பாஜக - ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் ‘கலாசாரம்’ என சித்தரிக்கப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்புப் பாதுகாப்புத் தேவை. அதிகாரத்தின் முன் கலையை மண்டியிட நிர்பந்திக்கும்போது ஜனநாயகமே பலவீனமாகிவிடும்’ எனச் சொல்லி இருந்தார்.

விஜய்யின் ‘மெர்சல்’ படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்தபோது, இதேபோன்ற தணிக்கை பிரச்சினையை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் கலாசாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு. ‘மெர்சல்’ திரைப்படத்தில் தலையிட்டு தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்ய முயற்சிக்காதீர்கள்’ என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்போது இதை சுட்டிக்காட்டி பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘நரேந்திர மோடி மீண்டும் தமிழ் மக்களை அவமதிக்கும் விதமாக, ‘ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வேண்டுமென்றே நிறுத்தி வைத்து, அதன் வெளியீட்டைத் தடுத்துள்ளார்’ எனப் பதிவிட்டிருந்தார்.​

விஜய்க்கு காங்கிரஸாரின் இந்த திடீர் ஆதரவு தமிழக அரசியலிலும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள்ளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக யூகமாக பேசப்பட்டு வந்த தவெக - காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என்ற கருத்துக்கு இது வலுசேர்க்கும் விதமாகவே உள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “காங்கிரஸ் மத்திய பாஜக அரசை எதிர்த்து அரசியல் செய்கிறது. பாஜக எப்போதும் தமிழர்களை வஞ்சித்து வருகிறது. அதன் நீட்சியே இந்த திரைப்பட தணிக்கை தாமத விவகாரம்.

இதுநாள் வரை சிபிஐ, ஐடி. ஈடி என மிரட்டிய பாஜக, இப்போது தணிக்கை வாரியம் மூலம் மிரட்டுகிறது. அந்த செயலைத்தான் எதிர்க்கிறோம். அதற்காக தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என நினைப்பது தவறு” என்றனர்.​ தணிக்கை சிக்கல், நீதிமன்றப் போராட்டம், தேசிய அளவிலான காங்கிரஸ் தலைவர்களின் சமூக வலைதள பதிவுகள் என, ஒரு திரைப்படத்தைச் சுற்றியிருக்கும் இந்த சர்ச்சை, தமிழக அரசியலில் விஜய் அடுத்த அடியை எங்கே எடுத்து வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்திருக்கிறது. - ச.கார்த்திகேயன்

‘ஜனநாயகன்’ விஜய்க்கு பேராதரவு - தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் அடித்தளமா?
வெனிசுலா மக்கள் மனநிலை என்ன? - மகிழ்ச்சியும் அச்சமும்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in