“தவெகவின் மதச்சார்பற்ற கொள்கை...” - கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் விவரிப்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் பேசியது: “பொங்கல், தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளையும் பகிர்ந்து கொள்வதுதான் நம் ஊர். வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறுவேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தான்.

நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உள்ளது என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித்தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் வென்றுவிடலாம்.

நம்பிக்கை குறித்து பல கதைகள் பைபிளில் உள்ளன. அவற்றில் ஒன்று... ஒரு இளைஞரை அவரது சகோதரர்கள் கிணற்றில் தள்ளிவிடுகிறார்கள். அதிலிருந்து மீண்ட இளைஞர் நாட்டுக்கே அரசனாகி, துரோகம் செய்த சகோதரர் மட்டுமின்றி அந்த நாட்டையே எப்படி காப்பாற்றினார் என்பதைக் கூறுகிறது. இந்த கதை யாரை குறிக்கிறது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கடவுளின் அருள், மக்களை மானசீகமாக நேசிக்கும் அன்பு, அதீத வலிமை, அதற்கான உழைப்பும் இருந்தால் எதிரிகளை வீழ்த்தலாம் என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

ஒரு உறுதியை கொடுக்க விரும்புகிறேன். நானும் தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதற்காகத்தான் நமது கொள்கைக்கு மதச்சார்பற்ற கொள்கை எனப் பெயர் வைக்கப்பட்டது. கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவரும் உறுதியாக இருங்கள், வெற்றி நிச்சயம்” என்றார் விஜய்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in