பரந்தூருக்கு ‘குட்பை’... தாக்கம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

காஞ்​சிபுரம் மாவட்​டம், பரந்தூர் மற்​றும் அதன் சுற்றுவட்டார கிரா​மங்​களை உள்​ளடக்கி புதிய பசுமைவழி விமான நிலை​யம் அமைக்​கும் திட்​டம் முழுமை​யாகக் கைவிடப்​படு​வ​தாக சட்​டப்​பேர​வை​யில் 110 விதி​யின் கீழ் முதல்​வர் விஜய் அறி​வித்​துள்ளார். இதற்கான எதிர்வினைகளை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வெளி​யானதைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்​கள், போராட்​டக் குழு​வினர் அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்தி, பட்​டாசு வெடித்து இனிப்​பு​களை வழங்கி உற்சாக​மாகக் கொண்​டாடினர். மேலும், ஏகனாபுரம் பிரதான சாலைக்கு முதல்​வரின் பெயரைச் சூட்ட கிராம சபை​யில் தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ள​தாக​வும் போராட்​டக் குழு​வினர் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்தை மைய​மாக வைத்து காஞ்​சிபுரம் மற்​றும் அதனைச் சுற்றியுள்ள பகு​தி​களில் பல்லாயிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​பில் தொடங்​கப்​பட்ட பல்​வேறு கட்​டமைப்பு மற்​றும் இணைப்​புத் திட்​டங்​களின் நிலை என்ன என்ற கேள்வி மக்​களிடையே எழுந்​துள்​ளது.

விமான நிலை​யத்தை இணைக்​கும் வகை​யில் திட்டமிடப்பட்ட பூந்​தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் நீட்டிப்​புத் திட்​டம், சென்னை பெங்களூரு விரைவுச் சாலையுடன் பரந்​தூரை இணைக்​கும் அணுகு சாலை​கள் மற்​றும் தென் மாவட்​டங்​களை எளி​தில் சென்​றடை​யும் நோக்​கில் நடை​பெற்று வரும் காஞ்​சிபுரம் - கூட்​டேரிப்​பட்டு நான்கு வழிச் சாலைப் பணி​கள் ஆகியவை இதில் குறிப்பிடத்​தக்​கவை.

மேலும், காஞ்​சிபுரம் புறவழிச்​சாலை விரி​வாக்​கம், உத்​திர மேரூர் மற்​றும் வாலாஜா​பாத் வழித்​தடங்​களின் இணைப்பு, தொழிற்​பூங்​காக்​கள் விரி​வாக்​கம் போன்​றவை திட்​ட​மிடப்​பட்​டிருந்​தன.

விமான நிலை​யத் திட்​டம் மாறி​னாலும், காஞ்​சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகு​தி​யின் ஒட்​டுமொத்த போக்கு​வரத்து நெரிசலைக் குறைக்​க​வும், தொழில் வளர்ச்சி தடைப​டா​மல் இருக்​க​வும் இந்த இணைப்​புச் சாலை​கள், நான்கு வழிச் சாலைப் பணி​கள் மற்​றும் மெட்ரோ திட்​டங்​களைத் தொடர்​ந்து செயல்​படுத்த வேண்டும் என்று மக்​கள் வலி​யுறுத்​தியுள்ளனர்.

“பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவதாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். இது, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளைத் தகர்க்கும் பேரிடி” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“அற்ப அரசி​யல் காரணங்​களுக்​காக திட்​டத்​தையே கைவிடு​கிறேன் என்று சொன்​னால், அது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்​படுத்​தும்” என்று எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரிவித்துள்ளார்.

“பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு மாற்று இடம் வேண்​டி, இது​வரை எந்த கோரிக்​கை​யும் மத்​திய அரசிடம் வைக்​காமல், எந்த இடத்தை தேர்வு செய்​யப் போகிறோம் என்ற தெளி​வும் இல்​லாமல், எதற்​காக இந்த அவசர முடிவு? தவெக அரசுக்கு பரந்​தூரில் விமான நிலை​யம் அமைவது பிரச்​சினையா அல்​லது தமிழகத்​துக்கு ஓர் புதிய விமான நிலை​யம் கிடைப்​ப​தில் பிரச்​சினை​யா?” என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“புதிய இடம் எது என்​ப​தை​யும் முதல்​வர் அறி​வித்​திருந்​தால் சிறப்​பாக இருந்​திருக்​கும். ஏனெனில், இரண்​டாவது விமான நிலை​யத்​துக்கான இடத்​தைத் தேர்வு செய்ய தாமதப்​படுத்​து​வ​தால், தமிழகத்​தின் வளர்ச்சி குறைந்​தது 10 ஆண்​டு​கள் தாம​திக்​கும் அபா​யம் உள்​ளது” என்று வி த லீடர்ஸ் நிறு​வனர் அண்​ணா​மலை கூறியுள்ளார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன், “தவெக தேர்​தல் வாக்​குறு​தி​யின் அடிப்​படை​யில் முதல்​வர் அறி​வித்​துள்​ளது வரவேற்​பிற்​குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலை​வர் அன்புமணி ராம​தாஸ், “புதிய விமான நிலை​யம் கட்​டப்​பட​வில்லை என்​றால், சென்​னைக்கு புதிய விமானங்​கள் வராது. அவை பெங்​களூரூ, ஹைத​ரா​பாத் விமான நிலை​யங்​களுக்கு சென்​றால், அது ஒட்​டுமொத்த தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கும் பின்​னடைவை ஏற்​படுத்தி விடும்” என்று கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ், ‘எந்த ஒரு நகரத்தின் வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் நிலம், நீர், வாழ்வாதாரத்தை அவர்களின் உண்மையான ஒப்புதலின்றி பலிகொடுத்து உருவாக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

தவாக தலை​வர் வேல்​முரு​கன், “ஏகனாபுரம் உள்​ளிட்ட 13 கிராம மக்​களின் நீண்ட நெடிய போராட்​டம் வெற்றி பெற்றிருக்​கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பரந்தூருக்கு ‘குட்பை’... தாக்கம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
ஒரு பைசா செலவில் தங்க மோதிரமா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in