‘எம்ஜிஆர் அதிமுக’ கட்சி உதயம்... பின்னணியில் தவெக?
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அரசியல் ஆலோசகராகவும், அவருக்கு பக்கபலமாகவும் இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “இந்த இயக்கம் உடனடியாகத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தொடங்கப்படவில்லை. இது ஒரு நீண்ட நெடிய அரசியல் பயணம்.
தேர்தல் என்பது இந்தப் பயணத்தில் வரும் ஒரு சடங்கு போன்றது. எங்களது கொள்கைகளுக்கு உடன்படுபவர்களைத் தேர்தலில் ஆதரிப்போம். வரும் தேர்தலில் போட்டி என்பது திமுகவிற்கும் விஜய்க்கும் இடையில்தான் இருக்கும்” என்றார். பிறகு கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்கள் கொண்ட தனது கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தாரக மந்திரத்தோடு தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தின் முறையான தொடக்க விழா மற்றும் விரிவான கொள்கை விளக்கக் கூட்டம், வரும் 23-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசியலின் 'பீஷ்மர்' என்று அழைக்கப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற ஆளுமைகளுடன் பணியாற்றியவர். 1967 மற்றும் 71-ல் திமுக எம்எல்ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்தார். 1977-ல் அதிமுகவில் இணைந்து எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகித்தார். பின்னர் பாமக, மக்கள் நலவுரிமைக் கழகம், தேமுதிக எனப் பயணித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவையும், பின்னர் ஓபிஎஸ்ஸையும் ஆதரித்து வந்தார்.
இதன் பின்னணி குறித்து பேசுவோர், “ஓபிஎஸ் அணியில் இருந்த பலரும் விஜய் பக்கம் செல்லலாம் என ஓபிஎஸ்ஸிடம் வலியுறுத்திய போதிலும், டெல்லி பாஜக தலைமையின் மீதான அச்சத்தால் அவர் எந்த முடிவும் எடுக்காமல் தயக்கம் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதற்கு பின்னால், தவெக இருக்கிறது. விரைவில் விஜய் கட்சிக்கு இவர் ஆதரவு அளிக்கக்கூடும்” என்றனர்.