‘திணறும்’ ராமதாஸ் முகாம்... ‘வெயிட்டிங்’ மோடில் பிரேமலதா!
தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்ய பாஜக - அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டது. அதேநேரத்தில் தேமுதிக மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமக இழுத்தடித்து வருவது, கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பாமக பிளவுப்பட்டு கிடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துவிட்டது. அதேநேரத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக பிடிக்கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. அவரையும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற, பாஜக, அதிமுக அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் அவசர நிர்வாகக் குழுக் கூட்டம் திடீரென கூடியது. நிர்வாக குழு உறுப்பினரும், இணை பொதுச் செயலாளருமான அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அருள் எம்எல்ஏ, “தமிழகத்தில் 40 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதிகளை நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்துள்ளார். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிக் கூட்டணி அமைப்பார். அவர் இடம்பெறும் கூட்டணியில் இருப்பவர்தான் முதல்வர் பதவி ஏற்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா? மற்றும் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதா? என்பதை ராமதாஸிடம்தான் கேட்க வேண்டும். நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு 40 நாட்கள் உள்ளன. பொறுமையாக முடிவு செய்யலாம். ராமதாஸிடம் இருந்து அவசரமாக வரச்சொல்லி நிர்வாக குழு உறுப்பினர்கள் 18 பேருக்கு அழைப்பு வந்தது. அதனால் வந்துள்ளோம். ஊடகத்திடம் சொல்ல முடியாத சில விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.
ஜனவரி 18-ம் தேதி நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், இரு நாள் இடைவெளியில் 2-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தை ராமதாஸ் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. அன்புமணி இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணைவதற்கு கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிப்பதால், கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் ராமதாஸ் திணறி வருவதாக கூறப்படுகிறது.
ராமதாஸின் பாமக முகாம் இப்படி என்றால், தேமுதிக முகாமோ வேறு மாதிரி இருக்கிறது. தங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் அணியில் இடம்பெறுவதற்காக ‘வெயிட்டிங்’ மோடில் இருக்கிறார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, “தேர்தல் கூட்டணி தொடர்பாக பியூஷ் கோயல் எங்களுடன் பேசி வருவதாக சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தன. ஆனால், அது தொடர்பாக எங்களுக்கே தகவல் வரவில்லை. அந்தச் செய்தியில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. பியூஷ் கோயல் ஏன் வந்திருக்கிறார், கட்சி தொடர்பான கூட்டமா கூட்டணி தொடர்பான கூட்டமா என்று கூட தெரியவில்லை.
நான் ஏற்கெனவே கூறியது போல எங்கள் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து கூட்டணி குறித்து அறிவிப்பேன். வரும் 24-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை, ‘உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களைத் தேடித் தலைவர்’ சுற்றுப்பயணத்தை நான்காம் கட்டமாக நடத்த உள்ளோம். கூட்டணி என்பது சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் ஆலோசித்து, பின் இரு தரப்பிலும் அறிவிக்கும் போதுதான் அது அதிகாரபூர்வமானது.
இன்னும் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை. எங்கள் மாவட்டச் செயலாளர்கள் உடனான கலந்தாலோசனை தான் முடிந்திருக்கிறது. ஒரு அண்ணியாக இல்லாமல் ஒரு அம்மாவாக மிக மிகப் பொறுப்புடன் நான் இருக்கிறேன். யாருடன் இறுதியாக கூட்டணி அமைக்க போகிறோம் என்பதை உரிய நேரத்தில் எங்கள் மாவட்டச் செயலாளர்களை மீண்டும் அழைத்துப் பேசி எங்கள் முடிவைச் சொல்வோம்” என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.