சீமான் 2.0 ரெடி... இது வேற லெவல் ‘பெரியார்’ அரசியல்!

‘பெரியார்’ என்ற சொல்லை வைத்தே பிரளயத்தைக் கிளப்பும் வகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

“இது பெரியார் மண் அல்ல... எங்களுக்கு பெரியாரே மண் தான்” என்று சொல்லி அதிரடி கிளப்பிய சீமான், ‘பெரியார்’ என்ற பெயரிலேயே புதிய அரசியல் நகர்வை தொடங்கவுள்ளார்.

ஜனவரி 3-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது நாதக. இந்தக் கூட்டத்துக்கு ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்று தலைப்புக் கொடுத்திருப்பது தான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

அதற்காக சீமான், பெரியார் பக்தராக மாறிவிட்டாரோ என நினைத்து விட வேண்டாம். இதன் பின்னணியில் இருக்கும் கதையே வேறு.

அதாவது, தனிப்பட்ட ஈ.வெ.ரா என்ற மனிதரைக் குறிக்காமல்‘பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும்’ என்ற குறளைக் கையில் எடுத்திருக்கிறார் சீமான்.

‘அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த பெரியோரை, அதாவது சான்றோர்களை மதிக்காவிட்டால் தீராத துன்பம் வரும்’ என்ற இந்தக் குறளின் பொருளை முன்வைத்து ஒரத்தநாடு கூட்டத்தில் பேசப் போவதைத்தான் ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்று விளம்பரப்படுத்துகிறது நாதக.

கடந்த காலங்களில் பெரியார் குறித்த சீமானின் சர்ச்சையான விமர்சனங்களால் அவரது வீட்டை முற்றுகையிடுவது, வழக்குத் தொடர்வது எனப் பல போராட்டங்கள் வெடித்தன.

இந்தச் சூழலில், ‘பெரியார்’ பெயரிலேயே பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, அதில் சீமான் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறிக் கிடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் திராவிட அரசியலை விளாசத் தயாராகும் சீமான், தமிழ் சான்றோர்களைப் ‘பெரியார்கள்’ என முன்னிறுத்திப் பேசக்கூடும் என்று நாதக வட்டாரத்தில் சொல்கின்றனர்.

சீமான் 2.0 ரெடி... இது வேற லெவல் ‘பெரியார்’ அரசியல்!
Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in