ஓபிஎஸ் டெல்லி ‘விசிட்’ மர்மங்கள்!
சமீபத்தில் ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு அழைத்தார் அமித் ஷா. பாஜக-வுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி வந்தவர், அமித் ஷா அழைக்கிறார் என்றதும் டெல்லிக்குப் பறந்தார்.
டெல்லியில் ஓபிஎஸ்ஸுக்கு அமித் ஷா என்ன போதித்தார் என்று முழுமையாகத் தெரியாத நிலையில், அந்தப் போதனைகளை செயல்படுத்துவதுதான் இனி ஓபிஎஸ்ஸின் திட்டமாக இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, ஓபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு குறித்து பலவிதமான ஊகங்கள் கிளம்பி இருக்கின்றன. “ஓபிஎஸ் தனிக்கட்சிக்கு தொடங்கு வதற்கு ஆசி வழங்கிவிட்ட அமித் ஷா, தேர்தலில் தங்களுக்கான கோட்டாவில் ஓபிஎஸ் கட்சிக்கும் இடமளிப்பதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்” என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.
இன்னொரு தரப்பிலோ, “ஓபிஎஸ்ஸையும் தினகரனையும் உள்ளே விட மறுக்கிறார் பழனிசாமி. தினகரனோ, பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் நான் பாஜக கூட்டணிக்கு வரமாட்டேன் என்கிறார்.
இந்தச் சிக்கலை தவிர்க்க, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவுசெய்யலாம் என்ற கண்டிஷனை அதிமுக-விடம் முன்வைக்கும் திட்டத்தில் இருக்கிறார் அமித் ஷா. அதுபற்றி எல்லாம் பேசுவதற்காகத்தான் ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு அழைத்திருக்கிறார்.
எனவே, டிசம்பர் 15-ம் தேதி புதுக் கட்சி தொடங்கினாலும் அமித் ஷாவின் கட்டளையை மீறி புரட்சிகரமான முடிவு எதையும் எடுத்துவிடமாட்டார் ஓபிஎஸ்” என்கிறார்கள்.