காலியாகும் கூடாரம்... ‘சரண்டர்’ ஆன ஓபிஎஸ்!

தன்​னோடு இருந்த முக்​கிய நிர்​வாகி​கள் அனை​வ​ரும் ஒரு​வர் பின் ஒரு​வ​ராக மாற்​றுக் கட்​சிகளில் ஐக்​கி​யம் ஆகி​விட்ட நிலை​யில், மவுன குருவாக இருந்த ஓபிஎஸ் இப்போது சரண்டர் ஆகியிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு, சசிகலா தரப்பு தந்த நெருக்​கடி​யால் முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்த ஓபிஎஸ், சசிகலா​வுக்கு எதி​ராக ‘தர்​ம​யுத்​தம்’ தொடங்​கி​னார். அப்​போது அவருக்கு பக்​கபல​மாக முன்​னாள் அமைச்​சர்​கள் கே.பி.​முனு​சாமி, நத்​தம் ஆர்​.​விசுவ​நாதன், பெங்​களூரு புகழேந்தி போன்ற பலரும் நின்​ற​னர். இந்த நிலை​யில் ஊழல் வழக்​கில் சிறை செல்​லும் முன்​பாக பழனி​சாமியை முதல்​வ​ராக்​கி​விட்​டுச் சென்​றார் சசிகலா.

சசிகலா தயவில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பழனிசாமி, ஓபிஎஸ்ஸை கூட்டு சேர்த்துக் கொண்டு சசிகலா வகையறாக்களை கட்சியை விட்டே ஓரங்கட்​டி​னார். கட்சியின் ஒருங்​கிணைப்​பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்​கிணைப்​பாள​ராகவும் முதலமைச்சராகவும் பழனிசாமியும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் வலம் வந்தனர். இந்த நிலையில், கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் பூதாகரமாக வெடித்​ததால் ஓபிஎஸ்​ஸையும் அவரது விசுவாசிகளையும் கட்சியை விட்டு நீக்கினார் பழனிசாமி.

இதையடுத்து, பழனிசாமிக்கு எதிராக இரண்டாம் தர்மயுத்​தத்தைத் தொடங்​கினார் ஓபிஎஸ். இதற்கு நடுவே, கட்சியின் பொதுக்​குழுவால் பொதுச்​ செயலாளராக அங்கீகரிக்​கப்பட்ட பழனிசாமி, “இனி எந்தக் காலத்​திலும் ஓபிஎஸ்​ஸுக்கு அதிமுக-வில் இடமில்லை” என அறிவித்​தார். இதனால், மீண்​டும் அதி​முக-வுக்​குள் என்ட்ரி ஆவதற்​காக பாஜக-​வின் தயவை நாடி​னார் ஓபிஎஸ். அவர்​களும் இவரை வைத்து பழனி​சாமியை வழிக்​குக் கொண்​டுவர சில பல சித்து வேலை​களைச் செய்து பார்த்​தனர்.

எது​வும் எடு​ப​டாத நிலை​யில், 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலுக்​காக பழனி​சாமி தரப்​புடன் கூட்​டணி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது பாஜக. ஓபிஎஸ், தினகரனை பழனி​சாமி சேர்க்க மறுத்​தா​லும் தங்​கள் கோட்​டா​வில் அவர்​களுக்கு தொகு​தி​களை ஒதுக்க பிளான் போட்​டது பாஜக. முதலில் இதற்​கும் முரண்டு பிடித்த பழனி​சாமி, கடைசி​யில் தினகரனுக்கு மட்​டும் ஓகே சொன்​னார். ஓபிஎஸ்​ஸுக்கு கேட்​டைத் திறக்க மறுத்​து​விட்​டார்.

இடைப்பட்ட காலத்தில் ஓபிஎஸ் பக்​கமிருந்த மனோஜ் பாண்​டியன், வைத்​தி​லிங்​கம், மருது அழகு​ராஜ் என ஒவ்​வொரு​வ​ராக திமுக-​வில் ஐக்​கிய​மா​னார்​கள். கடைசி​யாக, அவரால் ராஜ்ய சபாவுக்கு அனுப்பி வைக்​கப்​பட்ட தர்​மரும் அதி​முக-​வில் இணைந்​து​விட்​டார். இத்​தனை நடந்த பிறகும், இன்​ன​மும் ஓ.பன்னீர்செல்வத்தை நம்​பிக் கொண்​டிருக்​கும் வெல்​லமண்டி நடராஜன் போன்ற ஒரு சில நிர்​வாகி​களும் கூட விரக்​தி​யின் விளிம்​பில் நிற்​கி​றார்​கள்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு முடிவும் ஏற்படாமல் வதந்தியை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்கள் செய்தியாக வெளியிடுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

எங்கள் பக்கம் தொண்டர்கள் இருப்பார்களா என்பதை அறியவே ராமநாதபுரத்தில் நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டேன். 12 நாட்கள் தான் எனது தேர்தல் பிரச்சாரம் இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆறு ஓ.பன்னீர்செல்வத்தை நிறுத்தினார்கள். அந்த சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுகவை மீட்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தி மீட்பதுதான் எங்கள் நோக்கம்.

தேர்தலில் தனிக் கட்சி துவங்குவது அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தேவை இல்லாத குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டாம். எம்ஜிஆர், ஜெயலலிதா என இருவரை முதல்வராக ஆக்கியது இந்த தேனி மாவட்டம். கழகத்தை மீட்பதற்காகவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதே நோக்கம்” என்றார்.

என்டிஏ கூட்டணிக்கு நீங்கள் வருவதற்கு டிடிவி தினகரன் ஆசைப்படுவதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “நட்பின் அடிப்படையில் அவர் கூறியுள்ளார். டிடிவி தினகரன் மற்றும் எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத்தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நிணைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும்.

இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியேரால்தான் ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது. அதிமுகவில் இணைய நாங்கள் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா?” என தனது சரண்டர் கேள்வியுடன் முடித்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ ‘கதவடைத்தது... கதவடைத்ததுதான்’ என்கிற ரீதியில் ரியாக்ட் செய்துள்ளார்.

ஓபிஎஸ் விருப்பம் குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “நான் பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுக பொதுக் குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க எந்தவித வாய்ப்பும் இல்லை. 2500-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து சென்னை பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர்கள் கட்சிக்கு இழைத்த துரோகம் காரணமாக பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு இது. பொதுச் செயலாளராக எடுத்த முடிவு இல்லை” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

காலியாகும் கூடாரம்... ‘சரண்டர்’ ஆன ஓபிஎஸ்!
Aattam: புறணி பேசும் ஆணுலகுக்கு அறைவிட்ட அஞ்சலி | திரை தேவதைகள் 03

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in