புதினுக்காக மரபை உடைத்த மோடி... ராகுல் கொந்தளிப்பது ஏன்?
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அவர்களை வரவேற்பது வழக்கம். மிக முக்கிய தலைவர்களை மட்டும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்பார். அந்த வகையில், தற்போது ஏழாவது உலகத் தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி மரபுகளை உடைத்து டெல்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, நான் சந்தித்து பேசுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போது எதிர்க்கட்சி தலைவரை சந்தித்துப் பேசுவது மரபு ஆகும். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இந்த மரபு கண்டிப்புடன் பின்பற்றப்பட்டது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு மரபை மாற்றி உள்ளது. தற்போது வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது எதிர்க்கட்சி தலைவரை சந்திக்காமல் செல்கின்றனர். நான் வெளிநாடு செல்லும்போது கூட, அந்த நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க வேண்டாம் என்று மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, நான் சந்தித்து பேசுவதை மத்திய அரசு விரும்பவில்லை. இது இந்திய வெளியுறவுத் துறையின் எதிர்மறை சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சி தலைவரும் இந்தியாவின் பிரதிநிதி என்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது” என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.
இதே விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, “வெளிநாடுகளின் தலைவர்கள், இந்தியாவுக்கு வருகை தரும்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பது மரபு ஆகும். இந்த மரபை மத்திய அரசு உடைத்திருக்கிறது. ஜனநாயக மரபுகளை காக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்” என்று தெரிவித்தார்.