மேகேதாட்டு விவகாரத்தில் நடப்பது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, இவ்விவகாரத்தில் விரைவில் தீர்வு ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பை எழுப்பியிருக்கிறது.
பெங்களூரு நகரக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதையும், மின்சாரம் உற்பத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு 6,996 ஏக்கர் பரப்பில் மேகேதாட்டு அணை கட்டுவதைப் பரிசீலித்து வருகிறது கர்நாடகம். 2022 மே 30-இல் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அம்மாநிலத்தின் இரண்டு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. பணிகளைத் தொடங்க மத்திய அரசு நிதியும் ஒதுக்கியது.
எனினும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலக்கட்டத்தில் கர்நாடகம் மட்டுமே காவிரி நீரைப் பயன்படுத்த இத்திட்டம் வழிவகுக்கும் என்று தமிழக விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தின் வாழ்வாதாரம், உரிமைகளை இது முற்றிலுமாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதும் வெளிப்படை. 2025 நவம்பர் 13-இல் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராகத் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தபோது, அந்தத் திட்டம் தொடக்க நிலையில் உள்ளதாகக் கூறி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
அணை கட்டுவதற்கான முயற்சிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த நிலையில், மே 25-இல் அரசுத் தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோதும் தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். அன்றைய நாளே தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஆற்றிய உரையிலும் மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தமிழக அரசு எதிர்க்கும் என்பது இடம்பெற்றிருந்தது. மறுநாள் தமிழகச் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு அது தொடர்பான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், இவ்விவகாரம் தொடர்பாகப் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. புதிதாக நடுவர் மன்றம் தேவையில்லை எனவும், இது தமிழக நலன்களுக்கு எதிரானதாக இருக்கும் எனவும் கூறி வருகின்றன.
மேலும், சட்டப்பேரவை விதிகளுக்குப் புறம்பாக, திருத்தப்பட்ட தீர்மானம் தமிழக அரசால் அவையில் முன்மொழியப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதற்குப் பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீதான நம்பிக்கையிழப்பால் புதிய நடுவர் மன்றத்துக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1956 நதிநீர் தாவா சட்டப்பிரிவு 4-இன்படி ஏற்கெனவே தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் எழுப்பச் சட்டத்தில் இடமில்லை எனவும், இந்த விவகாரம் புதிய விவாதம் என்பதால் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்ததாகவும் அது பற்றிச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காவிரிப் படுகை வறண்டு போகாதவாறு, ஏற்கெனவே நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளவாறு உரிய நீரைத் தமிழகத்துக்கு கர்நாடகம் பங்கிட்டுத் தரும் சூழல் அமைய வேண்டும் என்பதே சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு. மத்திய, மாநில அரசுகளோடு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும், விவசாயிகள் அமைப்புகளும் ஒருமித்துச் செயல்பட்டு, இவ்விவகாரத்துக்குச் சுமுகமான தீர்வு காண வேண்டும் என்கிறது இந்து தமிழ் திசை தலையங்கம்.