என்று தணியும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? - ஒரு நிலவரப் பார்வை

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதன் தாக்கத்தால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கி உள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து, எல்பிஜி காஸ் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.

இந்தியாவில் சுமார் 90 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, விலையும் உயர்த்தப்படவில்லை. ஆனால், சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எல்பிஜி-யைப் பொறுத்தவரையில் சுமார் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 40 சதவீதத்தைக் கத்தார் பூர்த்தி செய்கிறது. ஈரான் தாக்குதல் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன.

ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்பிஜியை இறக்குமதி செய்ய முடியவில்லை. பொதுவாக இந்தியாவிடம் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில், இந்தியாவின் எல்பிஜி இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இதன் எதிர்விளைவாக நாடு முழுவதும் சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில், வணிக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. சென்னை, புனே, கொல்கத்தா, டெல்லி உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஓட்டல் தொழில் முடங்கிவருகிறது. நாடு முழுவதும் 33 கோடி வீட்டு உபயோக சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதோடு நாடு முழுவதும் ஏறத்தாழ 71 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எல்பிஜி விநியோகிக்கப்படுகிறது. தட்டுப்பாடு காரணமாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

போர் நீடிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் முன்கூட்டியே எல்பிஐ சிலிண்டரை முன்பதிவு செய்து வருகின்றனர். சுமார் 20 சதவீதம் அளவுக்கு முன்பதிவு அதிகரித்திருக்கிறது. இதனால் சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் மிக நீண்ட தாமதம் ஏற்பட்டு வருகிறது. எல்பிஜி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமான எஸ்மா-வை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன்படி எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பொதுமக்களுக்கு நியாயமான விலையில் எல்பிஜி கிடைப்பது உறுதி செய்யப்படும். எல்பிஜி விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்தச் சூழலில், ‘இந்தியாவின் தற்போதைய எரிவாயு சிலிண்டர் விநியோக நெருக்கடி என்பது குறுகிய கால அளவில் இருக்கும். ஏனெனில்... நார்வே, அமெரிக்கா போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து எரிபொருள் ஆதாரத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு சாத்தியமாகி உள்ளது’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், எரிவாயு நிரப்பப்பட்ட சரக்கு கப்பல்கள் நார்வே அல்லது அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைய சுமார் இரண்டு மாத காலம் ஆகும் என அந்தக் கப்பல் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதோடு, எரிவாயுவை ஆர்டர் செய்வது மற்றும் அதை டெலிவரி பெறும் நடைமுறையும் அடங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இருப்பினும், தேசம் எதிர்கொள்ளும் எரிவாயு விநியோக நெருக்கடி நெடுங்காலம் நீடிக்காது என்று அரசு அதிகாரிகள் நம்பிக்கைக் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த குறுகிய காலத் தட்டுப்பாடு காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்பு என்பது தடுக்க இயலாதது என்றும் அவர் கூறுகின்றனர். அதேவேளையில், தேசம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இயன்றவரை இடையூறு ஏதும் இல்லாமல் எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோக பணியை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார்கள் கூறுகின்றனர். ஆனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்புவது உடனடியாக சாத்தியாமாவது கேள்விக்குறியே.

என்று தணியும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? - ஒரு நிலவரப் பார்வை
“விஜய் கொள்கைகளால் பாதிப்பு...” - நாதக வேட்பாளர் ரோஷினி நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in